உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லிணைவுப் பட்டிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நொசிவிழை, நெகிழிப் பல்லிணைவுப் பட்டிகை

பல்லிணைவுப் பட்டிகை என்பது சட்டைத் துணி முதலானவற்றின் ஓரங்களைத் தற்காலிகமாக இணைக்கவும் பிறகு மீண்டும் பிரிக்கவும் பயன்படும் ஒரு பல்லிணை போன்ற கருவி. ஒரு சட்டையை அணியச் சட்டைத் துணிகளிலே ஓர் ஓரத்தில் துளைகளும் (“காசா (துணி)”), மறு ஓரத்தில் தெறிகளும் வைத்து இணைப்பது இன்றும் வழக்கில் இருக்கும் ஒரு பழைய முறை. அதற்கு மாறாக ஒரு சிறு காம்பு போன்ற பிடியைச் சர்ரென்று ஒரு புறம் இழுப்பதால் துணியாடைகளின் இரு ஓரங்களும் பொருந்தி, ஒரு சேர இணையவும், எதிர்ப்புறமாக சர்ரென்று இழுத்தால் ஓரங்கள் விடுபடுவதும் இதன் எளிமையை உணர்த்தும். இதனாலேயே இது பரவலான பயன்பாட்டில் இன்று பற்பல இடங்களில் பயன்படுகின்றது. இந்தப் பல்லிணைவுப்பட்டிகையின் படத்தை வலப்புறம் காணலாம். இன்று இந்தப் பல்லிணைவுப் பட்டிகை, மேல்சட்டை, காற்சட்டைத் துணியாடைகளில் மட்டுமல்லாமல், பெட்டிகளின் மூடியை மூடவும், காலணிகள், பல்வேறு கைப்பைகள், கூடாரம், உறங்குறைகள் (sleeping bag) என்று பற்பல பயன்பாட்டுப்பொருள்களில் பயன்படுகின்றது.

பல்லிணைவுப் பட்டிகையின் இயக்க விளக்கம்

[தொகு]

பல்லிணைவுப் பட்டிகைகள் இரு தனித்தனி பட்டிகளாக வருகின்றன. ஒரு பட்டியை துணியின் ஓர் ஓரத்திலும், மற்றதை மற்றொரு ஓரத்திலும் தைத்தோ, அல்லது ஒட்டியோ பிணைக்க வேண்டும். இந்தப் பல்லிணைவுப் பட்டிகைப் பட்டிகளின் ஓரத்தில் பத்து, நூறு என்னும் கணக்கில் சிறு சிறு பற்கள் போன்ற பகுதிகள் வரிசையாக இருக்கும். எதிர் எதிர்ப் பட்டிகளில் உள்ள பற்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி பூட்டிக்கொள்ளுமாறு உள் அமைப்பு கொண்டிருக்கும். ஆனால் எதிர் எதிர் உள்ள இப்பற்கள் பொருந்துவதற்கு இப்பற்கள் வரிசை சற்றே விரிந்து கொடுக்க வேண்டும்.

பல்லிணைவுப் பட்டிகையின் இரண்டு ஓரத்திலும் உள்ள பற்கள் எவ்வாறு வளையுழை வழியாக நுழைந்து பிணைந்து பூட்டப்படுகின்றன என்று காட்டும் அசைபடம்.

இதற்காக வரிசையாக பற்கள் கொண்ட இரண்டு ஓரங்களும், கவட்டுக்கோல் (ஒய் போன்ற) வடிவில் வளைந்த குழாய் வழியாக சறுக்கிச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். பற்கள் கொண்ட இரண்டு ஓரங்களும் சறுக்கிச்செல்லும் இப்பகுதிக்கு வளைபுழை என்று பெயர். இந்த வளைபுழையை சர்ரென்று ஒரு புறமாக இழுத்து நகர்த்தும் பொழுது, துணியின் இரண்டு ஓரத்துப் பற்களும் இணைந்து, பொருந்தி பூட்டப்படும். ஆனால் வளைபுழையை எதிர்ப்புறம் சர்ரென்று நகர்த்தினால், பூட்டப்பட்ட பற்கள் விடுபடும். இவ் இயக்கத்தை வலப்புறம் காட்டப்பட்டுள்ள அசைபடத்தை பார்த்தால் விளங்கிக்கொள்ளலாம். எனவே வளைபுழை நகரும் திசையைப் பொறுத்து இரண்டு ஓரங்களும் இணைவதும், பிரிவதும் நிகழும்.

பெயர் பற்றிய குறிப்பு

[தொகு]

சட்டென்று இணைவதால், இதனை இணைசர் என்றும் கூறலாம். ஆங்கிலப்பெயரான zipper என்னும் சொல்லும், இணைக்கும் விரைவு கருதியோ, இணைக்கும் பொழுதோ, பிரிக்கும்பொழுதோ ஏற்படும் Zzzz என்னும் ஒலியைக் கருதியோ ஏற்பட்டது. தமிழில் இணைசிப்பர் அல்லது சேர்சிப்பர் என்னும் சொல்லில் உள்ள -சிப்பர், zipper என்பதைப் பின்பற்றியே அமைந்தது. இணைசி, இணைசர், சேர்வி என்றும் கூறலாம்.

வரலாறு

[தொகு]

1851 இல் ஐக்கிய அமெரிக்காவைக் சேர்ந்த எலியஸ் ஃகாவு (Elias Howe) என்பவர் இன்றுள்ள பல்லிணைவுப் பட்டிகையை ஒத்த ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். “தானே தொடர்ச்சியாய் துணியை பிணைக்கும் கருவி” ("an Automatic, Continuous Clothing Closure") என்ற பெயரில் அமெரிக்கப் புதுப்படைப்புக் காப்புரிமமும் பெற்றார். தற்காலப் பல்லிணைவுப் பட்டிகை போல, நகரக்கூடிய வளைபுழை அந்தப் புதுப்படைப்பில் இல்லை. ஆனால் இரண்டு ஓரத்திலும், நெருக்கிப்பிடித்துக்கொண்டால் பற்றிக்கொள்ளுமாறு நகரக்கூடிய அமைப்பு கொண்ட ஓர் அமைப்பு கொண்டிருந்தது.

தற்காலப் பல்லிணைவுப் பட்டிகைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல புதுமைப் படைப்பாளிகளின் உழைப்பால், சிறுகச்சிறுக வளர்த்தெடுத்ததின் பயனாக இன்று இந்நிலையில் இருப்பவை. இவற்றிற்குவழி வகுத்த இப் புதுமைப் படைப்பாளிகளும் பொறியியலாளர்களும், டாலான் என்னும் தொழில் நிறுவனத்திலும் (Talon, Inc) அதற்கு முன்பிருந்து மாறிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர்கள். இன்றைய பல்லிணைவுப் பட்டிகைகளுக்கு முன்னோடியாக இருந்த ஓரமைப்பு, சிக்காகோவைக் சேர்ந்த விட்கோம்ப் ஜட்சன் (Whitcomb L. Judson) என்பவர் இயற்றிய "பற்றிப் பிணைப்பி" ("clasp locker") என்னும் அமைப்பாகும். இதற்காக இவர் அமெரிக்க காப்புரிடத்தைப் பெற (ஐக்கிய அமெரிக்க காப்புரிம எண் 504,038) முதலில் நவம்பர் 7, 1891இல் மணு இட்டிருந்தார். இதன் தொடர் வளர்ச்சியாக 1914 இல் கிடியான் சுண்டுபாக் அவர்களுடைய "கொக்கியற்ற இணைப்பு எண் 2" ("Hookless Fastener No. 2") என்னும் குற்றமற்ற ஒரு பிணைப்பு முறையைப் முன்வைத்தார். இது இன்றுள்ள தற்காலப் பல்லிணைவுப் பட்டிகைகளில் இருந்து அடிப்படை விதத்தில் வேறுபாடு காண இயலாத வடிவில் இருந்தது.

  • 25 நவமம்பர் 1851 U.S. Patent 8,540 : "Fastening for Garments & c." (துணியாடைகளுக்கு பிணைப்பிகள்)
  • 29 ஆகஸ்டு 1893 U.S. Patent 5,04,037 : "Shoe fastening" (காலணிகளுக்குப் பிணைப்பி)
  • 29 ஆகஸ்டு 1893 U.S. Patent 5,04,038 : "Clasp Locker or Unlocker for Shoes" (காலணிகளுக்கு பற்றியும் விடுவிக்கும் இணைப்பி)
  • 31 மார்ச் 1896 U.S. Patent 5,57,207 : "Fastening for Shoes" (காலணிகளுக்குப் பிணைப்பி)
  • 31 மார்ச் 1896 U.S. Patent 5,57,208 : "Clasp-Locker for Shoes" (காலணிகளுக்கு பற்றி் இணைப்பி)
  • 19 ஏப்ரல் 1913 U.S. Patent 10,60,378 : "Separable fastener" (பிரியக்கூடிய பிணைவி)
  • 20 மார்ச் 1917 U.S. Patent 12,19,881 : "Separable fastener" (பிரியக்கூடிய பிணைவி)
  • 22 டிசம்பர் 1936 U.S. Patent 20,65,250 : "Slider" (வளைபுழை)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லிணைவுப்_பட்டிகை&oldid=2741822" இலிருந்து மீள்விக்கப்பட்டது