பற்பசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பற்பசை

பற்பசை என்பது பற்களையும் வாயையும் துப்புரவாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கப் பயன்படும் பசையாகும். பற்தூரிகை கொண்டு இது பயன்படுத்தப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பற்பசை பயன்படுத்துகிறார்கள். பற்பசை பயன்படுத்தாமல் இயற்கை முறைகளைப் பயன்படுத்தியும் பல் துலக்கலாம். பல் துலக்குதல் பற்களிடையே தேங்கும் உணவுப் பகுதிகளை நீக்குவதற்கும் ஈறுகளில் கிருமித் தொற்று ஏற்படாதிருக்கவும் பயன்படுகிறது. பொதுவாக பற்துலக்கியால் தேய்க்கும் போதே பெரும்பாலும் பல் சுத்தம் செய்யப்படுகிறது. வெறும் பற்பசையால் மட்டும் சுத்தம் செய்யப்படுவதில்லை. வணிகரீதியான பற்பசைகளில் பெரும்பாலும் உப்பு, சலவை சோடா எனப்படும் சோடியம் பை கார்பனைட் என்ற வேதிப்பொருளுமே பயன்படுத்தப்படுகிறது. பற்பசையை விழுங்குதல் கூடாது. ஆனாலும் சிறிதளவு பற்பசையை விழுங்குவதனால் பெரும் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.

வரலாறு[தொகு]

கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. முதலில் குருமணலை பல் துலக்குவதற்காக பயன்படுத்திய இவர்கள் பிறகு எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்கும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர். கெளதம புத்தர் காலத்தில் வேப்பமரக் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

இந்தியர்கள் கருவேலங்குச்சி, ஆலங்குச்சி, வேப்பமரத்துக் குச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்துள்ளனர். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற தமிழர் பழமொழியால் இதனை அறியலாம்.

பின்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டுகளில் சில வணிகர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும் பழக்கம் சீனா மற்றும் எகிப்திய மக்களை எட்டியது. சில நூற்றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை அறிந்து பல்துலக்க தனியாகப் பொடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, உப்பு, புதினா இலை, ஐரிஸ் மலர், மிளகு ஆகியவற்றுடன் இருபது வகையான தானியங்களைச் சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில் உலகின் முதல் பற்பொடியை தயாரிப்பதில் எகிப்தியர்கள் வெற்றியடைந்திருந்தனர். அரச வம்சத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்த பற்பொடியின் தயாரிப்பு முறை பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டன. அவற்றில் சில பாப்பிரசு தாள்கள் இன்றும் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நறுமணப்பற்பொடி[தொகு]

எல்லோரும் அறிந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பற்பசையின் வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. எகிப்தியர்கள் பாப்பிரசு தாள்களில் குறிப்பிட்டிருந்த பற்பொடி தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பெர்சியாவை சேர்ந்த இஸ்லாமிய பல்துறை வல்லுனரான ஷிர்யாப் (Ziryab) என்பவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் புதிய முறையில் அதிக அளவில் பற்பொடி தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார்.[1]

ஷிர்யாப் தனது பற்பொடியைத் தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பதை ரகசியமாக வைத்திருந்ததால் இறுதிவரை அவர் என்னென்ன பொருட்களை பயன்படுத்தி அந்த பற்பொடியை தயாரித்தார் என்பது வெளியுலகிற்கு தெரியாமலேயே போனது.[2] சுவைமிக்கதாகவும், நறுமணமிக்கதாகவும் இருந்த ஷிர்யாப்பின் பற்பொடி, இன்றைய நவீன பற்பொடியைப்போல பல்துலக்கியதும் புத்துணர்ச்சி ஏற்படுத்தியது.[1] உலகின் முதல் பற்பொடி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவரது பற்பொடி அக்காலத்தில் ஸ்பெயின் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பல் பற்பொடி[தொகு]

கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ்ந்த மக்களின் முதன்மையான பற்பொடியாகச் சாம்பல் இருந்தது. பற்பொடி தயாரிக்கும் தொழிலும் குடிசை தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டதால் பற்பொடி எல்லை கடந்து செல்லும் வாய்ப்பைப் பெறவில்லை, ஆகையால் 1950 ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் சாம்பல் தான் பற்பொடியாகப் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டு மக்களிடையே பல்துலக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை.

மூலப்பொருட்கள்[தொகு]

கி.பி.18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் பல்துலக்கும் பழக்கம் இங்கிலாந்தில் ஏற்பட ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து அமெரிக்க மக்களிடையேயும் பல் துலக்கும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சாம்பலை பயன்படுத்திய இவர்கள் நாளடைவில் உப்பு, படிகாரம், லவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு பல் துலக்க ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து கி.பி.1824 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பியாபாடி (Dr. Peabody) என்ற பல் மருத்துவரால் பற்பொடி தயாரிக்க பயன்படுத்தும் ஏனைய மூலப்பொருட்களுடன் சோப்பையும் சேர்த்து பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.[3] தொடர்ந்து 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஹாரிஸ் (Dr. John Harris) என்ற மற்றுமொறு பல் மருத்துவரால் மேற்சொன்ன மூலப்பொருட்களுடன் சுண்ணாம்பையும் சேர்க்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

கோல்கேட் நிறுவனம்[தொகு]

நியூயார்க் நகரில் 1806 ஆம் ஆண்டு வில்லியம் கோல்கேட் (William Colgate, 1783–1857) என்பவரால் துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த கோல்கேட் & கம்பெனி, பற்பொடியின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து பல்வேறு வகையான பற்பொடி தயாரிப்பு முறைகளை ஆய்வு செய்து இறுதியில் உப்பு, படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை கொண்டு வணிகரீதியான உலகின் முதல் பற்பொடியை 1873 ஆம் ஆண்டு தயாரித்து ‘கோல்கேட் பற்பொடி’ என்ற பெயரில் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. அதுவரையிலும் குடிசை தொழிலாக இருந்துவந்த பற்பொடி தயாரிக்கும் தொழில், அதன்பிறகு வணிகத்துவம் பெற ஆரம்பித்தது. இக்காலகட்டங்களில் தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்களிடையே தவறாமல் அன்றாடம் பல்துலக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

தொழில்நுட்பம்[தொகு]

சுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்பட்ட பற்பொடிகள் சில நாட்களிலேயே மனிதர்களில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த துவங்கியது, இதனால் மனிதர்களின் கவனம் மீண்டும் சாம்பலை நோக்கி திரும்பிய அந்த நேரத்தில் வரலாற்றில் முக்கிய திருப்பமாக வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு (Washington Wentworth Sheffield) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பல் மருத்துவர் இயற்கையாகக் கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளைக் கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1892 ஆம் ஆண்டு கண்டறிந்தார். தொடர்ந்து பற்பசையை அடைத்து விற்பதற்காக மடக்கு குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.[4][5] இன்றும் கூட அதிக அளவு மாற்றத்தை சந்திக்காமல் ஷெப்பில்டு தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான் பற்பசையும், பற்பசையை அடைத்து விற்க பயன்படுத்தும் மடக்குகுழாய்களும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகளும் கட்டுப்பாடுகளும்[தொகு]

பற்பசை உற்பத்தி சூடுபிடிக்க ஆரம்பித்த சமயத்தில் திடீர் திருப்பமாக 1937 ஆம் ஆண்டு, புளோரைடு பற்பசைகள் பற்களுக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க பல் சங்கம் (American Dental Association) தடை செய்ய முன்வந்தது. பெறும் சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு வில்லியம் ப்ரோக்டர் (William Procter) மற்றும் ஜேம்ஸ் கேம்பல் (James Gamble) என்ற இரு அமெரிக்கர்களால் 1837 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த ப்ரோக்டர் & கேம்பல் (Procter & Gamble) என்ற நிறுவனம் ஜோசப் முஹ்லர் (Dr. Joseph Muhler) என்பவரைத் தலைமையாகக் கொண்டு மருத்துவக்குழு ஒன்றை அமைத்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட இக்குழு 1955 ஆம் ஆண்டு வாக்கில் புளோரைடு பற்பசைகளின் நம்பகத்தன்மை மற்றும் பின்விளைவுகள் பற்றிய தங்களது விரிவான அறிக்கையை அமெரிக்க பல் சங்கத்திடம் (ADA) சமர்பித்தது. அறிக்கையை ஆய்வு செய்த ADA 1960 ஆம் ஆண்டு புளோரைடு பற்பசைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது, அதாவது பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 1000ppm-க்கு (PPM – Parts Per Million), மிகாமலும் சிறியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 500ppm – க்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது.[6] இதன் பிறகு தான் பற்பசை உற்பத்தி அதிகரித்து புதிய பரிணாமத்தை அடைய துவங்கியது.

புளோரைடுகள்[தொகு]

இன்றைய நவீன பற்பசை தயாரிப்பில் மூன்றே மூன்று புளோரைடுகள் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சோடியம் புளோரைடு (Sodium Fluoride, NaF), ஸ்டன்னஸ் புளோரைடு (Stannous Fluoride, SnF2), சோடியம் மோனோபுளோரோபாஸ்பேட் (Sodium Mono-fluoro-phosphate, Na2Po3F) ஆகியனவாகும். பற்பசை தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுத்து பயன்படுத்தப்படும் புளோரைடும் மாறுபாடடைகிறது. பெரும்பாலான நிறுவனங்களால் சோடியம் புளோரைடு மற்றும் சோடியம் மோனோ-புளோரோபாஸ்பேட் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை பற்களை சுத்தம் செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது ஈறுகளைத்(Enamel) தாக்கும் தன்மை கொண்டவை. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ஸ்டன்னஸ் புளோரைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பற்பசைகளே சிறந்தவை.[7] இவை சற்று விலை அதிகமாக இருந்தாலும் இவற்றை பயன்படுத்துவதே பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sertima, Ivan Van (1992). The Golden Age of the Moor. Transaction Publishers. p. 267. ISBN 1-56000-581-5
  2. Lebling Jr., Robert W. (July-August 2003). "Flight of the Blackbird". Saudi Aramco World: 24–33. Retrieved 2008-01-28
  3. Wolfgang Weinert in "Oral Hygiene Products" Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheimdoi:10.1002/14356007.a18_209
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-30.
  5. http://www.newyorker.com/archive/1960/08/06/1960_08_06_020_TNY_CARDS_000262427
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2012-04-30.
  7. Nevitt GA, Witter DH, Bowman WD (September 1958). "Topical applications of sodium fluoride and stannous fluoride". Public Health Rep 73 (9): 847–50. PMC 1951625. PubMed
  8. Perlich, MA; Bacca, LA; Bollmer, BW; Lanzalaco, AC; McClanahan, SF; Sewak, LK; Beiswanger, BB; Eichold, WA et al (1995). "The clinical effect of a stabilized stannous fluoride dentifrice on plaque formation, gingivitis and gingival bleeding: a six-month study.". The Journal of Clinical Dentistry 6 (Special Issue): 54–58. PubMed.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்பசை&oldid=3562304" இலிருந்து மீள்விக்கப்பட்டது