உள்ளடக்கத்துக்குச் செல்

பர்ச்செரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்ச்செரோன்
சேணம் அணிந்த ஒரு பர்ச்செரோன்
தோன்றிய நாடுபிரான்சு
பண்புகள்
தனித்துவ அம்சங்கள்சுறுசுறுப்பான இழுவௌக் குதிரை இனம். பெரும்பாலும் சாம்பல் அல்லது கறுப்பு. சுத்தமான கால்கள், வலுவுள்ளது, கட்டுப்படக் கூடியது.

இகியுவசு ஃபெரசு கபால்லசு

பர்ச்செரோன் (Percheron) என்பது, ஒரு இழுவைக் குதிரை இனம்.முன்னர் "பர்ச்சே" என அறியப்பட்ட மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த, மேற்கு பிரான்சின் "உயிசுனே" (Huisne) பள்ளத்தாக்குப் பகுதியில் இது தோற்றம் பெற்றது. மேற்படி மாகாணப் பெயரைத் தழுவியே இக்குதிரை இனத்துக்கும் பெயர் ஏற்பட்டது. பொதுவாக சாம்பல், கறுப்பு நிறங்களில் காணப்படும் இவ்வினம் நல்ல தசைநார் வளர்ச்சியுடன், புத்திசாலித்தனமும், வேலை செய்வதற்கு விருப்பமும் கொண்டது. இவ்வினத்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்துத் தெரியவில்லை எனினும் பர்ச்செரோனின் மூதாதைகள் இப்பள்ளத்தாக்கில் 17 ஆம் நூற்றாண்டில் காணப்பட்டன. இவை தொடக்கத்தில் போரில் பயன்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டன. நாளடைவில் இவை அஞ்சல் வண்டிகளை இழுப்பதற்குப் பயன்பட்டன, பின்னர் வேளாண்மைத் தேவைகளுக்கும், பாரமான பொருட்களை இழுப்பதற்கும் இவற்றைப் பயன்படுத்தினர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அரேபியக் குதிரைகளுடன் இனக் கலப்பு ஏற்படுத்தப்பட்டது. பிரான்சிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் பர்ச்செரோன்களின் ஏற்றுமதி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேகமாக அதிகரித்தது. பர்ச்செரோன்களுக்கு மட்டுமான முதல் மரபுப் பதிவுப் புத்தகம் 1883 இல் பிரான்சில் உருவாக்கப்பட்டது.

முதலாம் உலகப் போருக்கு முன்னர் ஆயிரக் கணக்கான பர்ச்செரோன்கள் பிரான்சிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. போர் தொடங்கிய பின்னர் வணிகத்தடை காரணமாக இவ்வேற்றுமதி நிறுத்தப்பட்டது. போரின்போது இக்குதிரை இனம் ஐரோப்பாவில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தது. இதனால், போர் முயற்சிகளுக்கு ஆதரவாக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து சில குதிரைகள் மீண்டும் பிரான்சுக்கு ஏற்றுமதியாகின. 1918 இலிருந்து பர்ச்செரோன்கள் பெரிய பிரித்தானியாவிலும் வளர்க்கப்பட்டன. அந்த ஆண்டில் "பிரித்தானிய பர்ச்செரோன் குதிரைச் சங்கம்" உருவாக்கப்பட்டது. பல பெயர் மற்றும் மரபுப் புத்தக உடைமை மாற்றங்களுக்குப் பின்னர், தற்போதைய ஐக்கிய அமெரிக்க பர்செரோன் பதிவுப் புத்தகம் 1934 இல் உருவாக்கப்பட்டது. 1930 களில், ஐக்கிய அமெரிக்காவின் இழுவைக் குதிரைகளில் 70% பர்ச்செரோன்களாக இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறையத் தொடங்கியது. எனினும், எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி 2009 இல் ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 2,500 பர்ச்செரன்கள் பதிவுசெய்யப் படுகின்றன. இந்த இனம் இன்னும் இழுவை வேலைகளுக்காகவே பெருமளவில் பயன்படுகின்றன. பிரான்சில் உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். ரோந்துப் பணி, போட்டிகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்காக பல இலகு குதிரை இனங்களோடு இவ்வினத்தை இனக்கலப்புச் செய்துள்ளனர்.

இயல்புகள்[தொகு]

பர்ச்செரோன்களுக்கான சரியான அளவு நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுகின்றது. பிரான்சில், உயரம் 61-73 அங்குலங்கள் (155 - 185 சமீ) ஆகவும், எடை 1,100 - 2,600 இறாத்தல்கள் (500 - 1,200 கிகி) ஆகவும் உள்ளன.[1] ஐக்கிய அமெரிக்காவில் இவை 66 - 71 அங்குலங்கள் (168 - 180 சமீ) ஆகவும் உள்ளன. அமெரிக்கப் பச்செரோன்கள் சராசரியாக 1,900 இறாத்தல் (860 கிகி) எடையும், கூடிய அளவாக 2,600 இறாத்தல் (1,200 கிகி) எடையும் கொண்டுள்ளன.[2] பெரிய பிரித்தானியாவில் 66 அங்குலங்களே (168 சமீ) ஆண்குதிரைக்கான ஆகக்குறைந்த உயரமும், 65 அங்குலம் (165 சமீ ) பெண் குதிரைக்கான உயரமும் ஆகும். எடை, ஆண் குதிரைகளுக்கு 2,000 - 2,200 இறாத்தல் (910 - 1,000) ஆகவும், பெண் குதிரைகளுக்கு 1,800 - 2,000 இறாத்தல்கள் (820 - 910 கிகி) ஆகவும் உள்ளது.[3] இவை பொதுவாகச் சாம்பல் அல்லது கறுப்பு நிறங்களாகவே காணப்பட்டாலும், அமெரிக்கப் பதிவில் கபில நிறம், தாமிர நிறம், செஸ்விதை நிறம் என்பனவும் அனுமதிக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Règlement du stud-book du cheval Percheron" (PDF) (in French). Les Haras Nationaux. 2010. பார்க்கப்பட்ட நாள் 6 September 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "Disposition and". Percheron Horse Association of America. Archived from the original on 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2009.
  3. "Characteristics of the British Percheron". British Percheron Horse Society. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ச்செரோன்&oldid=3792708" இலிருந்து மீள்விக்கப்பட்டது