அரேபியக் குதிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரேபியக் குதிரை
ஒரு அரேபியக் குதிரை
மற்றொரு பெயர்அரேபியன்
தோன்றிய நாடுமத்திய கிழக்கில், குறிப்பாக அரேபியத் தீபகற்பத்தில் தோன்றியது.
பண்புகள்
நிறம்Bay, கறுப்பு, chestnut, அல்லது சாம்பல். குறைவாக சுத்த வெள்ளை, சாபினோ, அல்லது ரபிக்கானோ கோலங்கள்.
தனித்துவ அம்சங்கள்நுணுக்கமாகச் செதுக்கியது போன்ற எலும்பமைப்பு, உள்வளைந்த வடிவம், வளைந்த கழுத்து, ஒப்பீட்டளவில் மட்டமான முதுகு, உயர்ந்த வால் அமைவு.

இகியுவசு ஃபெரசு கபால்லசு

அரேபியக் குதிரை என்பது, அரேபியத் தீபகற்பத்தில் தோன்றிய ஒரு குதிரை இனம் ஆகும். தனித்துவமான தலை வடிவத்தையும், உயர் வால் அமைவையும் கொண்ட அரேபியக் குதிரைகள், உலகின் மிக இலகுவாக இனங்காணத்தக்க குதிரை இனங்களுள் ஒன்று. இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பே தற்கால அரேபியக் குதிரைகளை ஒத்த குதிரைகள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் மத்திய கிழக்கில் கிடைத்துள்ளதால் இது மிகப் பழைய குதிரை இனங்களுள் ஒன்றும் ஆகும். வரலாற்றுக் காலம் முழுவதிலும், போர், வணிகம் ஆகியவற்றினூடாக உலகம் முழுதும் பரவிய அரேபியக் குதிரைகள், பிற இனங்களின் வேகம், தாங்கும் ஆற்றல், மெருகு, எலும்பு வலிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகப் பயன்பட்டுள்ளது. இன்று, சவாரிக்காகப் பயன்படும் குதிரை இனங்கள் ஏறத்தாழ அனைத்திலும், அரேபியக் குதிரை இனத்தின் குருதிவழி உள்ளது.

அரேபியக் குதிரை இனம் பாலைவனக் காலநிலைப் பகுதியில் உருவாகியது. நாடோடிகளான பெதூன் மக்கள் இவற்றுக்குப் பெரு மதிப்புக் கொடுத்ததுடன், கள்வரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது குடும்பக் கூடாரத்துக்கு உள்ளேயே அவற்றுக்கு இடம் வழங்குவதும் உண்டு. மனிதருடன் ஒத்துழைக்கத்தக்க இயல்புகளை உருவாக்குவதற்கான தெரிவு இனப்பெருக்கத்தினூடாக நல்ல பழக்க வழக்கம், விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன், மகிழ்ச்சிப்படுத்துவதற்கான விருப்பு ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒரு இனம் உருவாகியது. சவாரி, போர் ஆகியவற்றுக்குத் தேவையான உயர்ந்த ஊக்கம், விழிப்புநிலை ஆகிய இயல்புகளும் அரேபியக் குதிரைகளுக்கு உள்ளன.

அரேபியக் குதிரை பல்திறன்களைக் கொண்ட ஒரு இனம். பந்தயச் சவாரித் துறையில் இவ்வினம் முன்னணியில் உள்ளதுடன், தற்காலத்தில் குதிரைச் சவாரி சார்ந்த பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் போட்டியிடுகின்றது. உலகின் மிகவும் விரும்பப்படும் 10 குதிரை இனங்களுள் இதுவும் ஒன்று. இவ்வினம் தற்போது, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆசுத்திரேலியா, கண்ட ஐரோப்பா, தென்னமெரிக்கா, அவற்றின் தாயகமான மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றது.

இன இயல்புகள்[தொகு]

அரேபியக் குதிரைகள், மெருகேறிய ஆப்புவடிவத் தலைகளையும், அகன்ற நெற்றியையும், பெரிய கண்களையும், பெரிய மூக்குத் துளைகளையும், சிறிய முகவாய்ப் பகுதியையும் கொண்டவை. பெரும்பாலானவை குழிந்த வடிவம் கொண்டவை. பல அரேபியக் குதிரைகளுக்கு அவற்றின் கண்களுக்கு இடையே நெற்றி சிறிது புடைத்துக் காணப்படும். பெதூன்களால் ஜிப்பா என அழைக்கப்படும் இது நெற்றிக் காற்றறையின் கொள்ளளவைக் கூட்டுவதால், பாலைவனக் காலநிலையைத் தாக்குப் பிடிப்பதற்கு இவ்வினத்துக்கு உதவுவதாகக் கருதப்படுகிறது.[1][2] சுத்தமான தொண்டைக் குழியில் அமைந்த மூச்சுக் குழலுடன் கூடிய வளைந்த கழுத்து இந்த இனத்துக்குரிய இன்னொரு இயல்பு.

தோற்றம்[தொகு]

அரேபியக் குதிரை உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழைய குதிரை இனங்களுள் ஒன்று. மூதாதை இனமாகிய கீழைத்தேச துணைவகை அல்லது "முந்து அரேபியன்", நவீன அரேபியக் குதிரை இனத்தை ஒத்த கீழைத்தேச இயல்புகளோடு கூடிய குதிரை என நம்பப்படுகிறது. இவ்வாறான இயல்புகளைக்கொண்ட குதிரைகள் அரேபியத் தீபகற்பத்தில் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பாறை ஓவியங்களிலும், கல்வெட்டுக்களிலும் இடம்பெற்றுள்ளன.[3] தொல்பழங்கால வரலாற்றில், பண்டைய அண்மைக் கிழக்கு முழுவதும் மெருகேறிய தலைகளுடனும், உயரமான வால் அமைவுடனும் கூடிய குதிரைகள் கலை ஆக்கங்களில், குறிப்பாக கிமு 16 ஆம் நூற்றாண்டுப் பண்டைய எகிப்தின் ஆக்கங்களில் காணப்படுகின்றன.[4]

அரேபியக் குதிரைகள் தொடர்பான சில அறிஞர்கள் அரேபியக் குதிரை இனம், ஈக்குவசு கபலசு பும்பெல்லி (equus caballus pumpelli) என்னும் தனியான துணை இனம் ஒன்றிலிருந்து உருவானதாக முன்னர் நம்பினர்.[5] கிளடீசு பிறவுன் எட்வார்ட்சு (Gladys Brown Edwards) என்னும் அரேபியக் குதிரை ஆய்வாளர் உள்ளிட்ட பிற அறிஞர்கள், ஈக்குவசு ஃபெரசு கபல்லசு (Equus ferus caballus) என்னும் பாலைவனக் கீழைத்தேசக் குதிரைகளில் இருந்தே தற்கால அரேபியக் குதிரைகள் தோன்றின என்கின்றனர்.[6][5] ஏறத்தாழ அரேபியக் குதிரைகள் போன்ற ஆனால் முற்றும் ஒத்ததாக இல்லாத தோற்றத்தைக் கொண்ட குதிரை இனங்களுள், இந்தியாவின் மார்வாரிக் குதிரை, வட ஆப்பிரிக்காவின் "பார்ப்", மேற்காசியாவின் "அக்கல் தேக்கே", இன்று அழிந்துபோன "துர்க்கோமான் குதிரை" என்பன அடங்குகின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Upton, Arabians pp. 21–22
  2. Archer, Arabian Horse, pp. 89–92
  3. Royal Embassy of Saudi Arabia. "Preserving the Arabian Horse in its Ancestral Land". Spring 2007 Publication. Royal Embassy of Saudi Arabia. Archived from the original on August 4, 2008. பார்க்கப்பட்ட நாள் May 28, 2008.
  4. Edwards, The Arabian, p. 2
  5. 5.0 5.1 5.2 Bennett, Conquerors, pp. 4–7
  6. Edwards, The Arabian, pp. 27–28
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபியக்_குதிரை&oldid=3585979" இலிருந்து மீள்விக்கப்பட்டது