பரிமாணம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிமாணம் என்னும் நூல் இருந்தது பற்றி இளம்பூரணர் தொல்காப்பியத்துக்கு எழுதிய உரை குறிப்பிடுகிறது. இளம்பூரணர் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எனவே இந்த நூல் பரிமாணம் 11 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது தெளிவாகிறது. இது மொழியிலக்கணம் கூடும் நூல் என்பது அதன் சூத்திரத்தால் அறியமுடிகிறது.

இளம்பூரணர் மேற்கோள்[தொகு]

விதந்த மொழியினம் வேறும் செப்பும்

என்பது பரிமான சூத்திரம் என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார். [1]

எடுத்த மொழி இனம் செப்பலும் உருத்தே [2]

என்னும் தொலகாப்பிய நூற்பாக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக இந்த நூற்பா காட்டப்பட்டுள்ளது. பரிமான நூலின் இந்த நூற்பா 'ஒரு சொல் அதன் இனத்தையும் குறிப்பிடும்' என்று கூறுகிறது. இதனை இனமொழி என இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

யாப்பருங்க விருத்தி மேற்கோள்[தொகு]

இதன் ஆசிரியரை இந்த உரை பரிமாணனார் என்று குறிப்பிட்டு அவரது மூன்று பாடல்களை மேற்கோளாகத் தருகிறது. [3]

ஆசிரியப்பா இலக்கணம்[தொகு]

ஆசிரியம் என்பது அகவலின் வழாது

கூறிய சீரொடும் தளையொடும் தழீஇ
முச்சீர் அடியாய் ஈற்றயல் நின்றும்
முச்சீர் அடி இடை ஓரோவழித் தோன்றியும்
அவ்வியல்பு இன்று மண்டிலம் ஆகியும்
மூவடி முதலா முறை சிறந்து ஏறித்
தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று எண்ணிரண்டு
எய்தும் என்ப இயல்பு உணர்ந்தோரே

வஞ்சிப்பா இலக்கணம்[தொகு]

வஞ்சி தானே அடி வரம்பு இன்றி

எஞ்சா இசைநிலை தூங்கல் எய்தி
ஆசிரியம் ஆகி முடியும் என்ப

வெண்பா இலக்கணம்[தொகு]

செப்பல் ஓசையில் சீர் தளை சிதையாது

மெய்ப்படக் கிடந்த வெண்பா விரிப்பின்
குறள் நேர் நெடில் என மூன்றாய் அவற்றின்
இறுதி அடியே முச் சீர்த்து ஆகி
அதன் ஈற்றசை சீர் எய்தி அடிவகை
ஓரிரண்டு முதலா முறை சிறந்து ஈர் ஆறு
ஏறும் என்ப இயல்பு உணர்ந்தோரே

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இளம்பூரணர் (11 ஆம் நூற்றாண்டு). தொல்காப்பியம், (எழுத்து, சொல், பொருள்) மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம், சென்னை 14 பதிப்பு 2010 1939,. பக். 240. 
  2. தொல்காப்பியம் 2-61
  3. யாப்பருங்கலம் பக்கம் 106
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிமாணம்_(நூல்)&oldid=3449982" இலிருந்து மீள்விக்கப்பட்டது