பயனர்:TNSE GuruRam NKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மான்டிசோரி முறை[தொகு]

குழந்தைகளுக்கான பள்ளிகளில் மான்டிசோரி பள்ளிகள் ஒரு வகை. 1907-ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மான்டிசோரி அம்மையாரால் (Maria Montessori, 1870-1952) இம்முறை வகுக்கப்பட்டது. உலகில் பல நாடுகளில் மான்டிசோரி முறைப் பள்ளிகள் உள்ளன. விளையாட்டு மூலமே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற கொள்கையே இதன் அடிப்படையாகும். மான்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சுதந்திரம் உண்டு. பல குழந்தைகள் சேர்ந்து கூட்டுறவு மனப்பான்மையை இங்கு பெறுகின்றனர். பல குழந்தைகளுக்கு இடையில் ஒவ்வொரு குழந்தையும் தனக்குத் தானே ஆசிரியராக விளங்குகிறது. மான்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், கண்காணிக்கவுமே ஆசிரியர்கள் இருப்பார்கள். மான்டிசோரிப் பள்ளிகளில் பலவகைப் பயிற்சிக் கருவிகள் உள்ளன. இக்கருவிகள் விளையாட்டுச் சாமான்கள் போலக் கண்ணைக்கவரும் வகையில் பல வண்ணங்களில் இருக்கும். இக்கருவிகளின் மூலம் ஆசிரியரின் உதவி இல்லாமலேயே குழந்தைகள் பலவற்றைக் கற்று உணர்ந்துகொள்ள முடியும். பிற்காலத்தில் எழுதவும், படிக்கவும், வரையவும் கற்றுக்கொள்வதற்கான பயிற்சியைக் குழந்தைகள் இக்கருவிகளின் வாயிலாகப் பெற்றுவிடுகின்றனர். கணிதம், பூகோளம், உயிரியல் முதலிய பல துறைகளுக்கேற்றவாறு பலவகைக் கருவிகள் இம்முறையில் உள்ளன. கிண்டர்கார்ட்டன் (Kindergarten)என்ற மற்றொரு வகைக் குழந்தைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் பாட முறைகள் குழந்தைகளின் விளையாட்டுகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளின் மொழியறிவை வளர்ப்பதற்காக இங்குக் கதைகளுக்கும் பாட்டுகளுக்கும் சிறப்பிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையை புரொபெல்(Froebel) என்ற ஜெர்மானியர் 1839-ல் வகுத்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. newlearningonline.com/new-learning/chapter-8/froebel-on.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_GuruRam_NKL/மணல்தொட்டி&oldid=2348211" இலிருந்து மீள்விக்கப்பட்டது