உள்ளடக்கத்துக்குச் செல்

பயங்கர ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயங்கர ஆட்சி (Reign of Terror[1]) என்பது பிரெஞ்சுப் புரட்சியின் போது செப்டம்பர் 5, 1793 - ஜூலை 28, 1793 காலகட்டத்தில் நிலவிய வன்முறை நிகழ்வுகளைக் குறிக்கப் பயன்படும் பெயர். இந்த வன்முறை கிரோண்டின்கள், ஜேக்கோபின்கள் ஆகிய இரு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட அதிகாரப் பலபரீட்சையால் விளைந்தது. இதில் “புரட்சியின் எதிரிகள்” என்று முத்திரை குத்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கில்லோட்டின் எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். பாரிசு நகரில் மட்டும் 2,639 பேரும், பிரான்சு முழுவதும் மொத்தமாக 16,594 பேரும் இக்காலகட்டத்தில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். விசாரணையற்ற மரண தண்டனை நிறைவேற்றல்களின் காரணமாக மேலும் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.[2][3]

பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி சில ஆண்டுகளில் புரட்சிக்காரர்களிடையே நிலவிய பிளவுகள் தீவிரமாயின. முடியாட்சியின் ஆதரவாளர்களுக்கும் புரட்சிகர அரசுக்குமிடையே நீடித்த உள்நாட்டுப் போரும், முடியாட்சிக்கு ஆதரவாக பிற ஐரோப்பிய நாடுகள் புரட்சிகர பிரான்சு மீது படையெடுத்தமையும் இப்பிளவினைத் தீவிரப்படுத்தின. புரட்சிகர நாடாளுமன்றத்தில் மிதவாத கிரோண்டின்கள் ஒரு புறமும், தீவிரவாத ஜேக்கோபின்கள் இன்னொரு புறமும் மோதிக் கொண்டனர். இம்மோதலில் ஜேக்கோபின்களின் கரம் ஓங்கி செப்டம்பர் 6, 1793 இல் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. ஜேக்கோபின்களின் கட்டுப்பாட்டில் இருந்த இக்குழு உள்நாட்டு எதிரிப்பினையும் வெளிநாட்டு எதிரிப் படைகளையும் ஒருங்கே சமாளிக்க பயங்கரமான வன்முறைப் போக்கினைக் கையாண்டது. அரசியல் எதிரிகளையும், உள்நாட்டுப் பகைவர்களையும் பல்லாயிரணக்கணக்கில் கில்லோட்டின் மூலம் கொன்றது. அவர்களுக்கு எதிராக மக்களிடையே வெறியேற்றி வன்முறையைத் தூண்டியது. இந்நிலை ஜூலை 1794 வரை நீடித்தது. அரச வன்முறை அளவுக்கதிகமானதால் ஜேக்கோபின்களின் அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்து எதிர்ப்புரட்சி நடத்தி மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர் போன்ற ஜேக்கோபின் தலைவர்களைக் கில்லோடின் மூலம் கொன்றனர். இத்துடன் பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Terror, Reign of; Encyclopædia Britannica
  2. Linton, Dr Marisa. "The Terror in the French Revolution" (PDF). Kingston University. Archived from the original (PDF) on 17 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 2 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Donald Greer, The Incidence of the Terror during the French Revolution : A Statistical Interpretation, Cambridge (United States), Harvard University Press, 1935

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயங்கர_ஆட்சி&oldid=3581239" இலிருந்து மீள்விக்கப்பட்டது