உள்ளடக்கத்துக்குச் செல்

பன்பூர்

ஆள்கூறுகள்: 24°45′05″N 67°31′17″E / 24.7514°N 67.5213°E / 24.7514; 67.5213
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்பூர்
بنبهور
கிபி 727 ஆம் ஆண்டு மசூதியின் தரைப்பகுதி
பன்பூர் is located in பாக்கித்தான்
பன்பூர்
Shown within Pakistan
மாற்றுப் பெயர்பம்பூர்
இருப்பிடம்சிந்து மாகாணம், பாக்கித்தான்
ஆயத்தொலைகள்24°45′05″N 67°31′17″E / 24.7514°N 67.5213°E / 24.7514; 67.5213
வகைகுடியிருப்புப் பகுதி
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 1 ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனதுகிபி 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்
பகுதிக் குறிப்புகள்
நிலைஅழிவுற்றது

பன்பூர் (ஆங்கில மொழி: Banbhore or Bhambore, உருது: بنبهور‎) என்பது பாக்கித்தானின் சிந்துப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பண்டைய நகரப் பிரதேசம் ஆகும்.[1][2] இது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்நகர்ப் பிரதேசமானது இயுனெசுகோ அமைப்பினால் உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாகப் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இதன் அதிகமான பகுதிகள் இடிபாடாகவே அமைகின்றன என்பதுடன் இந்நகர்ப் பிரதேசம் பாக்கித்தானின் ஐந்தாம் தேசிய நெடுஞ்சாலை வழியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இங்கு பல இசுலாமியப் பள்ளிவாசல்கள் இருந்துள்ளன. பன்பூரில் சைக்கோ-பார்த்தியன் பேரரசின் ஆட்சி நிலவியபோது இந்நகரம் இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகளைச் சேர்ந்த பல வணிகர்களினதும் தொடர்பினைப் பேணி வந்தது.

மரபு மற்றும் சிந்துவில் தளத்தின் முக்கியத்துவம்

[தொகு]

பன்பூர் வரலாற்றுத் தளமானது, 2014 ஆம் ஆண்டில் ஏப்பிரல் மாதம் 24 ஆம் நாள் அன்று சிந்து அரசாங்கத்தினால் பல பிரிவுப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட போது ஒரு பிரிவாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[3]

வரலாறு

[தொகு]

இந்நகரத்தின் வரலாறு கி.மு முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் அடங்குகின்றது. பன்பூர் வரலாற்று நகரத்தின் வரலாற்றினை மூன்று வகையான காலப்பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவற்றில் முதலாவது காலப்பகுதியானது சைக்கோ-பார்த்தியன் ஆட்சிக்காலம் ஆகும். இது கி.மு. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை ஆகும். மேலும் இரண்டாம் வரலாற்றுக் காலப்பகுதியானது இந்து-பௌத்தக் காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியானது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் எட்டாம் நூற்றாண்டு வரை ஆகும். பின்னர் இருந்த வரலாற்றுக் காலப்பகுதி புராதன இசுலாமிய வரலாற்றுக் காலப்பகுதி ஆகும். இக்காலப்பகுதியானது கி.பி. 8 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆகும்.

ஒருசில தொல்பொருளியல் ஆய்வாளர்களும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இந்நகரத்தினை சிந்துப் பிரதேசத்தினை ஆண்டு வந்த இறுதி இந்து மன்னனான இராசா தாகிர் அவர்களினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய அரபு மன்னனான முகம்மது பின் காசிம் என்பவனால் அவனது ஆட்சியின் போது நிறுவப்பட்ட இடெபல் நகரத்தினுடைய வரலாற்று நகரம் என பன்பூரைக் கருதுகின்றனர். எனினும் கூட இக்கருத்தானது இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை தேடுவதற்கு பல்வேறு அகழ்வுப் பணிகள் இந்நகர்ப் பகுதியிலே நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக பன்பூரில் இரமேசு சந்திர மயுந்தர் என்பவரினாலேயே அகழ்வு மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் 1928 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதன் பின்னர் 1951 ஆம் ஆண்டில் இலெசுலி அல்கோக்கு என்பவராலும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 1958 தொடக்கம் 1965 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பாக்கித்தானிய ஆராய்ச்சியாளரான கலாநிதி. எஃப்பு. ஏ. கான் அவர்களினால் மிகப் பேரிய அளவில் இந்நகரப் பிரதேசத்தில் வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டின் மார்ச்சு மாதமளவில் சிந்து அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சினாலே மாபெரும் மாநாடு ஒன்று பன்பூரில் நடாத்தப்பட்டது. அம்மாநாட்டினில் பல்வேறு தொல்பொருளியல் ஆய்வாளர்களும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டதுடன் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர்.[4]

அத்துடன் இந்நகரத்தினை முன்னையகாலத்தின் பார்போரி எனவும் பார்போரிகோன் எனவும் அழைத்ததாகக் கூறப்படுகின்ற போதிலும் அக்கூற்றானது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.[5]

இடிபாடுகள்

[தொகு]

தொல்பொருளியலாளர்களின் ஆராய்ச்சிக்கு அமைவாக இந்நகரமானது சேற்றினாலும் கல்லினாலும் ஆக்கப்பட்ட சுற்றுமதிலினால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இந்நகரத்தின் மத்தியில் அமையப்பெற்ற ஒரு கல்லே இதனை கிழக்கு மேற்குப் பகுதிகள் என இரண்டாகப் பிரித்து வைத்துள்ளது. இங்குள்ள கிழக்குப் பகுதியிலே அமைந்திருக்கும் ஓர் இசுலாமியப் பள்ளிவாசலானது கி.மு. 727 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுவதுடன் சிந்துப்பிரதேசத்திலே பாதுகாக்கப்பட்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க சமயத் தலங்களுள் இப்பள்ளிவாசலும் ஒன்றாகத் திகழ்கின்றது. பின்னராக இப்பள்ளீவாசல் 1960 ஆம் ஆன்டில் கண்டுபிடிக்கப்பட்டது. [6]அத்துடன் நகரிலும் நகரின் வெளிப்புறங்களிலும் வீடுகள், வீதிகள் மற்றும் ஏனைய கட்டடங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பொதுவாக அவற்றின் அமைப்பு பொதுவாக அரை வட்ட வடிவிலேயே காணப்படுகிறது. மேலும் இங்கு ஓர் சிவன் கோவிலும் மூன்று நுழைவாயில்களும் அமைந்துள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Port of Banbhore". World Heritage Sites, Tentative List. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012.
  2. "Banbhore". Dictionary of Islamic Architecture. ArchNet. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. http://www.dawn.com/news/1102074/bhambhore-division-in-sindh
  4. "International conference: Experts question if Bhambhore is the historical city of Debal". The Express Tribune. 12 March 2012. http://tribune.com.pk/story/348776/international-conference-experts-question-if-bhambhore-is-the-historical-city-of-debal/. பார்த்த நாள்: 3 September 2012. 
  5. Panhwar (Summer 1981). "International Trade of Sindh from its Port Barbarico (Banbhore), 200 BC TO 200 AD" (PDF). Journal Sindhological Studies. pp. 8–35. பார்க்கப்பட்ட நாள் 4 September 2012.
  6. "Early Indian Mosque Found". Milwaukee Sentinel: p. 7. 16 August 1960. https://news.google.com/newspapers?id=pGYcAAAAIBAJ&sjid=z04EAAAAIBAJ&pg=5774,2761218. பார்த்த நாள்: 8 September 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்பூர்&oldid=3562325" இலிருந்து மீள்விக்கப்பட்டது