பனிச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இமயமலைப் பகுதியில் எவரெஸ்ட் சிகரம் அருகே நிகழும் பனிச்சரிவு

பனிச்சரிவு அல்லது பனி அடுக்குச்சரிவு (Avalanche) என்பது உயர்ந்த மலைப் பகுதிகளில் பனித்தூவி விழுந்து ஏராளமாய்ச் சேர்ந்திருக்கும் பொழுது ஏதேனும் வானிலை காரணமாக, சாய்வும் சரிவுமாக உள்ள மலைப் பகுதிகளில் திரண்டிருக்கும் பனி சரியத் தொடங்கினால் மாவு போன்ற பனியானது திரளாக காட்டுவெள்ளம் போல் சரிந்து விரைவாக கீழே பாயும். அப்படிப் பாயும் பொழுது மேலும் மேலும் மாவு போன்ற பனி திரண்டு வழியில் இருக்கும் மாந்தர்கள் உட்பட எல்லாவற்றையும் மூடிப் புதைய செய்து விடும். இதனால் ஆண்டுதோறும் பனிமலைப் பகுதிகளில் பனிச் சறுக்காட்டங்கள் ஆடுவோர் பலர் இறக்க நேரிடுகின்றது. இந்நிகழ்வு திடீர் என நிகழ்ந்தாலும் ஓரளவிற்கு முன் கூட்டியே அறியவும், சிறிதளவு தடுக்கவும் இயலுகின்றது. பனிச்சரிவுகளில் மூன்று விதமான வகைகள் சொல்லலாம். முதல் வகையானது உலர்ந்த நுண்மணல் போன்ற வெண்பனியானது சரியத் தொடங்கி கடும் விரைவில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். கூடவே கடும் குளிர்க் காற்றும் வீசும். இரண்டாவது வகையானது ஈரமான தூவிப் பனி சற்று உருகி சரியத் தொடங்கும் ஆனால் இவை சற்று மெதுவாகவே நகரும். மூன்றாவது வகையானது மிகப் பெரும் பனிப் பாளமாக திடீர் என்று புவி ஈர்ப்பு விசையால் சாய்வான பகுதியில் சரியும். பனிச்சரிவு அல்லது பனி அடுக்குச்சரிவு பல கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து வழியில் உள்ளவற்றை மூடிப் புதைக்கும். பிரான்ஸ் நாட்டில் உள்ள மோன்ட்றாக் என்னும் மலையில் 1999ல் 300,000 கன மீட்டர் தூவிப்பனி 30 பாகை சரிவில் சரிந்து மணிக்கு 100 கி.மீ விரைவில் பாய்ந்தது. அதில் 12 பேர் 100,000 டன் பனித்தூவியின் அடியில் புதையுண்டு இறந்தனர். இதே போல முதல் உலகப் போரில் 50,000 அரசப் படையாட்கள் பனிச்சரிவில் மாண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிச்சரிவு&oldid=1851416" இருந்து மீள்விக்கப்பட்டது