பண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்ணி என்பவன் சங்ககால அரசன். இவன் கோடைமலை நாட்டு அரசன்.

தன் கடலில் பிறந்த முத்தையும், பகைவர் திறையாகத் தந்த பவளத்தையும் மாலையாக்கி இவன் அணிந்திருந்தானாம். தன் மலையிலிருந்து குறவர் கொண்டுவந்து தந்த சந்தனம் பூசியிருந்தானாம்.

இவன் வாட்போரிலும், விற்போரிலும் வல்லவன். 'தென்னவன் மறவன்' என்று போற்றப்படுகிறான்.

சிறுமலை நாட்டுப்பகுதியும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தச் சிறுமலை பகுதியில் யானைகளைக் குழிக்குள் விழச்செய்து மொழி பயிற்றி மக்கள் சொன்னபடி நடந்துகொள்ளப் பழக்குவர். இப்படிப் பயிற்சி தரப்பட்ட யானைகளை இந்த அரசன் பண்ணி தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு அளவின்றி வழங்குவான்.

இந்தக் கொடை 'பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி' [1] என்று போற்றப்பட்டது.

இந்த வேள்வியில் பெறுவது போன்ற செல்வத்தை மிகுதியாகப் பெற்றாலும் தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர் பனிக்காலத்தில் தலைவியை விட்டுவிட்டுப் பொருள்தேடச் சென்ற இடத்தில் தங்கமாட்டார் என்று தோழி கூறுவதாகப் பெருந்தலைச்சாத்தனாரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

மேற்கோள்[தொகு]

  1. குறவர் தந்த சந்தின் ஆரமும்,
    இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்    5
    திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
    குழியில் கொண்ட மராஅ யானை
    மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
    வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
    வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்   10
    பண்ணி தைஇய பயம் கெழு வேள்வி - அகநானூறு 13

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணி&oldid=3895407" இலிருந்து மீள்விக்கப்பட்டது