பகுப்பு பேச்சு:கணினி அறிவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினியியல் எதிர் கணினி அறிவியல், எது கூடிய பொருத்தம்? --Natkeeran 00:09, 4 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

அப்படியே மொழிபெயர்ப்பு செய்தால் வருவது:
கணினியியல் - study of computers
கணினி அறிவியல் - computer science
எனக்கு இரண்டாமாவது சரியெனத் தோன்றினாலும் வழக்கில் எது கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை. -- Sundar \பேச்சு 04:21, 4 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

காவலூரன் கட்டுரை[தொகு]

புதிய கணினிப் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும், சுயமான தீர்வுகளும்

புதிய கணினிப் பாவனையாளர்கள் என்றதும், அது எனக்குப் பொருந்தாது என்று கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், என்னதான் பல வருடங்கள் கணினியைப் பாவித்து வந்தாலும், கணினியின் தொழில்நுட்ப அறிவுடன் தொடர்புடைய ஒரு தொழிலில் ஒருவர் ஈடுபட்டால் ஒழிய, ஏனையவர்கள் கணினியின் நாளாந்தச் சிக்கல்களை எப்படி விரைவாகவும் எளிதாகவும் தீர்ப்பது என்று அறிந்திருக்க நியாயமில்லை.பலரும் தங்களது கணினியில் சிக்கல்கள் வரும்போது, அது ஒரு மிகச் சாதாரணமான ஒன்றாக இருந்தால் கூட, தங்களது வழமையான கணினி திருத்துனரிடம் தொடர்புகொண்டு அதைச் சீர்செய்துகொள்வதுடன், அந்த சிக்கல் குறித்து அறிந்து வைத்துக்கொள்ளக்கூட ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் ஒரு வகையினர் தங்களது பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்களில் யாராவது கணினி அறிவுடைய ஒருவரைத் தங்களது ‘கணினிக் காவலராக’ வைத்துக்கொள்வார்கள். எந்தவொரு சிக்கல் வந்தாலும், கந்தா காப்பாற்று என்று அந்த ஒரு நபரையே நச்சரித்து, அவர் எத்தகைய சிரமங்களில் அகப்பட்டிருந்தாலும், அதையெல்லாம் ஓரமாய் வைத்துவிட்டு இவரது கணினிச் சிக்கலைத் தீர்க்கும்வரை உண்ண உறங்க இருக்க விடாமல் கலைத்துக் கொண்டே இருப்பார்கள்.

உண்மையில் கணினியைப் பாவிக்கும்போது உருவாகக்கூடிய நடைமுறைச் சிக்கல்களில் 75 வீதமானவை, சுயமாக ஒரு சாதாரண மனிதனால் தீர்த்துக் கொள்ளக்கூடியவையே. கணினியில் ஒரு பிரச்சனை வரும்போது அதன் உரிமையாளருக்கு மிகவும் அவசியமானது பொறுமை ஒன்றே. பொதுவாக ஒரு கணினிப் பாவனையாளர் தனது கணினியில் ஒரு பிரச்சனையை எதிர்நோக்கியதும், அந்தப் பிரச்சனை என்ன என்பதை அதுவாகவே ஒரு சிறிய கட்டத்துக்குள் சுட்டிக்காட்டும். அதில் என்ன எழுதியுள்ளது என்பதைக் கூட சிலர் வாசிக்க மாட்டார்கள். அதை வாசித்தாலே சிலவேளை கணினியின் பிரச்சனை இலகுவாக விளங்கிவிடும். ஆனால் இவர்களுக்கு அந்தத் தகவலை வாசிக்கக்கூடப் பொறுமையில்லை. சமையலறையில் மிளகாய்த்தூளை குழம்பிலிடும் நேரம்பார்த்து, கணினியிலிருந்து இவர் போடும் கூச்சலில், அங்கே எத்தனை கறண்டி தூள் போட்டோம் என்பதையே மறந்து ‘என்னங்க, என்னாச்சு’ என்று ஓடிப்பறந்து மனைவி இவரிடம் வர, இந்தக் கம்பியூட்டரைக் குப்பையில தூக்கி எறிந்தால்தான் என் ஆத்திரம் அடங்கும் என்று மனைவியிடம் கூச்சல் போடுவார். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம் என்று மனைவி வாய்க்குள் முணுமுணுத்தபடி அடுக்களை நாடிச் சென்று விடுவார்.

உடனே தொலைபேசியில் தன் கணினிக் காவலரை அழைப்பார். அவர் எங்கே என்ன வேலையில் இருந்தாலும், அதைத் தவிர்த்து, உடனே இவரது கணினிப் பிரச்சனையைத் தீர்க்க வந்துவிட வேண்டும். அல்லது அதுவே ஒரு பூதாகரமான குடும்பப் பிரச்சனையாக உருவாகிவிடும். இப்படி மற்றவரிலேயே முழுமையாகத் தங்கி வாழும் கணினிப் பாவனையாளர்கள், தங்களது சுயஅறிவிலும் முயற்சியிலும் நம்பிக்கை வைத்து, பொறுமையையும் சற்று காப்பார்களாக இருந்தால், கணினிப் பிரச்சனைகள் பல மிக இலகுவாகத் தீர்க்கப்படக் கூடியவை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

மிகவும் அடிப்படையானதும் முக்கியமானதுமான ஒரு விடயம் கணினியுலகில் பயன்பாட்டிலுள்ள சொற்களைத் தெரிந்து வைத்திருப்பது. உதாரணமாக வன்பொருள் (hardware) அல்லது மென்பொருள் (software) என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருந்தாலே, தகவல் கட்டங்கள் (Dialog Box) கணினியின் பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது எங்கே பிழை என்பதை ஓரளவு விளங்கிக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.

கார்ட்வெயர் அல்லது சாப்ட்வெயர் என்ற சொற்களை மிக அதிகமாக கணினி உலகில் பாவிப்பார்கள். சுருக்கமாக விளக்குவதாக இருந்தால், கண்ணால் பார்க்கவும் கையால் தொட்டு உணரக்கூடியதுமான கணினியின் அங்கங்கள் பாகங்கள் கருவிகள் அனைத்தும் கார்ட்வெயரில் அடங்கும். உதாரணமாக விசைத்தட்டு (keyboard), கையசைவி (mouse), மொனிட்டர், கணிப்பொறி (hard drive, பதிப்பான் (printer) பதிவுசெயலி (scanner) உட்பட அத்தனை உபகரணங்களும் கார்ட்வெயர் என்ற குடும்பத்தில் சேரும். கணினியின் இயங்கு பகுதிகளை இயக்கும் மென்பொருட்களான வின்டோர்ஸ் இயக்கி, வேர்ட், எக்செல், றியல் பிளேயர், மீடியா பிளேயர், அவுட்லுக் இப்படி இன்னோரன்ன அத்தனை இலத்திரனியல் இயக்கிகள் மற்றும் மென்பொருட்கள் அத்தனையும் சாஃப்ட்வெயர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

பொதுவாக கணினி இயங்காமைக்கு அல்லது ஏதாவது குழப்பங்கள் உருவாகுவதற்கு இந்த இரண்டு குழுக்களில் ஒன்றே காரணமாகிறது. அதற்கான காரணத்தை, ஒரு கட்டத்திற்குள் விளக்கும் சுட்டியொன்று எம்முன்னே தோன்றியதும், நாம் முதலில் வாசித்து அறிந்து கொள்ள வேண்டியது, இது எந்தக் குடும்பத்தினால் ஏற்பட்ட தவறு என்பதையே. சிலவேளை விசைத்தட்டிலுள்ள (keyboard) அழுத்தி ஒன்று கீழே அழுத்தப்பட்டபோது இன்னுமொரு அழுத்தியுடன் செருகியதால், மேற்கொண்டு கணினி இயங்க மறுக்கின்றதென வைத்துக் கொள்வோம். உங்கள் கண்முன்னே ஒரு சிறு கட்டத்திற்குள் நடந்த தவறு என்ன என்பதை கணினி தெளிவாகச் சொல்லும். அதை ஆறுதலாக வாசித்துப் பார்த்தால், சாப்ட்வெயரிலா அல்லது கார்ட்வெயரிலா தவறு என்பதை இலகுவாகக் கண்டு பிடித்து விடலாம். மேலே கூறிய தவறொன்றின்போது, கீபோர்ட் அல்லது கார்ட்வெயர் என்ற இரண்டில் ஒரு சொல்லை நீங்கள் கண்டதும், தவறு எங்கே ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஓரளவிற்கு நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.

சற்று நின்று நிதானித்து, கார்ட்வெயராக இருந்தால், வெளிப்பாகங்களையும் உகரணங்களையும் துண்டித்து மீள இணைத்தோ, அல்லது ஒவ்வொன்றாக அவற்றைச் சரிபார்த்தோ தடைகளை இலகுவாகச் சீர்செய்து கொள்ளலாம். சாப்ட்வெயராக இருக்கும் பட்சத்தில், தவறு பற்றிய விளக்கத்தில், எந்த சாப்ட்வெயரில் தவறு ஏற்பட்டுள்ளது என்பதை அது உங்களுக்கு சுட்டிக்காட்டும். உதாரணமாக, வேர்ட், எக்செல், எம்.எஸ்.என்.தொடர்பு, யாகூ மெசேஞ்சர் இப்படி எங்கே பிழை ஏற்பட்டுள்ளதோ, அந்தக் காரணத்தை அங்கே வாசித்தறிந்தால், அதற்குரிய மென்பொருளைத் துண்டித்து, மீள இணைப்பதன் மூலமோ, அல்லது அந்த சாப்ட்வெயரை முழுமையாக மூடிவிட்டு, மீளத் திறப்பதன் மூலமோ, எதுவும் சரிவராத நிலையில், அந்த மென்பொருளை கணினியிலிருந்து முற்றாக நீக்கிவிட்டு மீள உள்ளீடு (reinstall) செய்வதன் மூலமோ கணினியின் தற்காலிகச் சிக்கலை இலகுவாகத் தீர்த்துவிட வாய்ப்பு உருவாகும்.

கணினி உலகில் பாவனையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது அதன் துறை சார்ந்த கலைச்சொற்களே. இலத்திரனியல் சார்ந்த ஆங்கில சொற்பதங்கள் சாதாரண கணினிப் பாவனையாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுவதால், பாவனையாளர்கள் கலவரமடைந்து, கணினியை அப்படியே துண்டித்துவிட்டு மற்றவரின் உதவியை நாடுவது வழமை. ஆனால், கணினியுலகின் சொற்பதங்கள் குறித்து பாவனையாளர்கள் அதிகம் குழப்பமடையும் அவசியமில்லை. உண்மையில், மருத்துவத்துறை, பொறியியற்துறை, விஞ்ஞானத்துறை போன்றவற்றில் அந்தந்தத் துறை சார்ந்த பிரத்தியேக வார்த்தைப் பிரயோகங்களும் மொழிப்பிரயோகங்களும் இருக்கவே செய்கின்றன. அது கணினித் துறைக்கும் பொருந்தும். ஆனாலும், பல சமயங்களில் இந்தத் துறை சார்ந்த சொற்பதங்கள் குறிப்பிடுமளவிற்கு கணினியில் தகராறு எதுவும் இடம்பெற்றிருக்காது என்பதை நடைமுறைப் பாவனையாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.

இல்லீகல் ஒப்பரேசன் (Illegal Operation) இன்வலிட் பேஜ் (Invalid Page), சிஸ்ரம் எறர் (System Error), பேஃற்றல் எறர் (Fatal Error) , றன்ரைம் எறர் (Runtime Error), வார்னிங் (Warning), புரட்டக்ஷன் போஃல்ற் (Protection Fault) , ரைம் அவுட் (time out), என்கிறிப்சன் எறர் (Encryption Error), இன்சஃபிசன்ட் டிஸ்க் ஸ்பேஷ் (insufficient disk space), இன்ரனெட் கனக்சன் பெஃய்ல்ட் (Internet connection failed), ஒப்பரேசன் கான்சல்ட் (Operation Cancelled), றீபூட் த சிஸ்ரம் (Reboot the system), மோடம் நாட் றெஸ்போன்டிங் (Modem not responding) போன்ற இன்னும் ஆயிரமாயிரம் கணினியுலக கலைச்சொற்கள் பாவனையாளர்களை விழிபிதுங்கிப் பதற வைப்பவைதான். இருந்தாலும் இவற்றில் பலவற்றிற்கு உபாயமாகத் தேவைப்படுவது கணினிப் பாவனையை முடித்துக்கொண்டு மீளவும் ஆரம்பித்து வருவது தான். சிலவேளை சில மென்பொருட்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் (conflicts) இத்தகைய குழப்பங்களை உருவாக்கும். நாம் அழுத்தியதும் உடனே திறக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டு, எமது அவசரத்திற்காக ஐந்து தடவை ஒரே அழுத்தியை மீண்டும் மீண்டும் அழுத்துவது, பல மென்பொருட்களை ஒரே நேரத்தில் திறப்பது அல்லது பாவிப்பது, வெவ்வேறு வகையான ஒன்றுக்கொன்று ஒவ்வாத இயக்கிகளை ஒரே நேரத்தில் திறப்பது அல்லது பாவிப்பது என்று பல அடிப்படை விதிகளை நாம் எம்மையறியாமல் மீறிச் செல்லும்போது, எமது செயற்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாமல் கணினி தடுமாறி, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இத்தகைய பிழையேற்பட்டதற்கான தகவற் கட்டங்களை (error messages) ஒன்றன்பின் ஒன்றாகத் தரும். இவையெல்லாம் கணினி தன்னைச் சுதாகரித்துக் கொள்ளத்தான்.

கணினிப் பாவனையாளர்களை அதிகமாகக் குழப்பமடைய வைக்கும் இன்னுமொரு அம்சம் ‘கிருமி நிரல்கள் அல்லது வைரஸ்கள்’ (computer virus). நாம் எவ்வளவு தூரம் எமது கணினியைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஆவன செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு கணினியுலகின் எதிரிகளும் குழப்பவாதிகளும் தங்களது மூளையைப் பிசைந்து கணினிப் பாவனையாளர்களுக்கு ஏராளமான சிரமங்களைக் கொடுக்க தினமும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் மிக அதிகமான குழப்பங்களை உருவாக்குவன இந்த கணினி வைரஸ்கள் தான். இணையத் தளங்களில் நாம் பலவித பக்கங்களுக்கும் செல்லும்போது வலைப்பக்க வழங்கிகள் தாமாகவே சில மேலதிக தகவல்களையும் மென்பொருட்களையும் வழங்கிக் கொண்டே இருக்கின்றன. இவை விளம்பர மற்றும் வியாபார யுக்திகளாக இருந்தாலும், இந்த யுக்தியை தங்கள் தவறான பாவனைக்கு உள்ளாக்க முயலும் வைரஸ் உற்பத்தியாளர்கள், வைரஸ் கிருமியுள்ள கோப்புகள் (files), நிரல்கள் (Programs)எழுத்துரு (font) போன்றவற்றையும் தானாகவே தரவிறக்கம் செய்துவிட முயற்சி செய்கின்றன.

பன்மொழி ஊடகங்கள் என்று வரும்போது, பிறமொழி சார்ந்த தளங்களில் இத்தகைய வைரஸ் பாதிப்பிற்கான வாய்ப்புக்கள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. இத்தகைய பாதிப்புக்களிலிருந்து கணினியைப் பாதுகாக்க, நாம் எப்போதும் எதைச் சுட்டுகிறோம் (Click), ஏன், எதற்காக சுட்டுகிறோம் என்பதை வாசித்தறிந்து கொண்டு சுட்ட வேண்டும். ஒரு அழுத்தியைச் சுட்டியவுடன், நாம் நினைத்தது உடனே தோன்றாவிட்டால், பொறுமையிழந்து அதையும் இதையும் மீண்டும் மீண்டும் அழுத்துவதெல்லாம் கணினிக்கு குழப்பத்தை உருவாக்குமே தவிர, வேறெவ்வித பலனையும் தரப்போவதில்லை. கணினியின் அடிப்படையே கணித்தல் தான். கணக்கை வேகமாக, மின்னல் வேகத்தில் செய்கிறது கணினியின் இலத்திரனியல் தொழில்நுட்பம். இந்த மின்னல் வேகத்தைவிட சற்று வேகமாக செய்யும்படி நாம் கணினிக்கு அழுத்தம் கொடுப்பது, யதார்த்தமற்ற ஒரு எதிர்பார்ப்பு. எனவே இதைப் புரிந்துகொண்டு, கணினியுடன் எமது சொந்த உணர்வுகளையும் அழுத்தங்களையும் பரீட்சிப்பதை விடுத்து, கணினியின் நடைமுறை வேகத்துடன் இயைந்து போவது அவசியம்.

கணினி அமைப்பிலுள்ள மிகச்சிறந்த பயன்பாடு எதுவெனில், எதையுமே நாம் பரீட்சித்துப் பார்க்க முடியும் என்பதே. ஒரு தவறு (error) இடம்பெற்றதாக சுட்டிக்காட்டும் கட்டம் எதற்காக குறிப்பிட்ட சமயங்களில் வருகின்றது என்பதை நாமே சில அடிப்படை செயற்பாடுகளை மீண்டும் மீண்டும் செய்து, பரீட்சித்துப் பார்க்கலாம். உதாரணமாக ஒரு நிரலியை (program) திறக்கும்போது ஒரு தவறுக்கான சமிக்ஞை தோன்றினால், கணினியை முற்றாக மீள ஆரம்பித்தோ, அந்த மென்பொருளை மீள ஆரம்பித்தோ, ஏற்கனவே பாவனையிலிருக்கும் ஏனைய மென்பொருட்களை மூடிவிட்டோ, வன்தகட்டை (CD) மீள உள்ளிட்டோ பலமுறை அதே செயற்பாட்டை மீளவும் செய்து, தவறு எப்போது நேர்கிறது என்பதைப் பரீட்சிக்கலாம். இதன்மூலம் நாமே அடுத்த தடவை இதே தவறு நேரும்போது அதைச் சீர்செய்வதற்கான வழியைக் கண்டறிந்து கொள்ளலாம்.

சிலவேளை பதிப்பான் (printer) அல்லது பதிவுசெயலி (scanner) மேய்ப்பான் (browser), நெகிழ்வட்டு (floppy disk), இணையத் தொடுப்பு (internet connection) சொற்செயலி (word processor) என்று எந்தவொரு செயலியும் தனது பணியைச் செய்ய மறுக்கிறதென்றால், அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு, நாமாகவே சில அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, பல மாற்று உத்திகளையும் பரீட்சித்துப் பார்த்து, காரணத்தை அறிந்து, அடுத்த தடவை சரியான முறையில் சரியான வேகத்தில் பாவிப்பதன் மூலம் சில தவறுகளை நாமே இயல்பாக நீக்க வழி பிறக்கும்.

கணினிப் பாவனையின் போது நிகழக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக கணிப்பொறியில் ; (hard drive) ஏற்படும் தவறையும், மேய்ப்பானில் (browser) ஏற்படும் பிழைகளையும் குறிப்பிடலாம். கணிப்பொறி சார்ந்த தவறுகள் தான் என்பதை நாம் சில பரிசோதனைகளைச் செய்து கண்டறிவது அவசியம். கணிப்பொறியுடன் சார்ந்த பிழைகளென்பதை ஊர்ஜிதம் செய்யும் பட்சத்தில், அதற்கு கணினி விற்பன்னரின் உதவியைப் பெறுவது அவசியம். காய்ச்சலுக்கும் தலையிடிக்கும் நாமே மருந்து எடுப்பது போன்று மூளை மற்றும் இருதய வருத்தங்களுக்கு நாம் மருந்து செய்ய முடியாது என்பதைப் பாவனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனினும், மேய்ப்பானில் ஏற்படும் தவறுகள் அப்படிப் பாரதூரமானவையல்ல. இன்ரநெற் எக்ஸ்புளோரர் (Internet Explorer or IE) அல்லது நெற்ஸ்கேப் (Netscape) என்ற இரு பிரதான மேய்ப்பான்களையே பல பாவனையாளர்கள் நடைமுறையில் பாவிக்கிறார்கள். ஓப்பேரா (Opera) போன்ற வேறு பல மேய்ப்பான்கள் ஆங்காங்கே பாவிக்கப்பட்டாலும், சாதாரண பாவனையாளர்களில் கணிசமான தொகையினர் இன்ரநெற் எக்ஸ்புளொரரையும், மீதியானோர் நெற்ஸ்கேப்பையுமே பாவிக்கிறார்கள். இவற்றின் தரவிறக்கம் (download) இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதனால் எம்மிடம் இந்த மேய்ப்பானின் மிக இறுதியான வெளியீடு உள்ளதா என்பதை அவ்வப்போது பார்த்துக்கொள்வது அவசியம். 1998ம் ஆண்டு வெளியான மேய்ப்பான் பிரதியை எமது கணினியில் வைத்திருந்தால், 2004ம் ஆண்டு வெளியாகும் பிறிதொரு மென்பொருளுடன் இணைந்து இயங்க முற்படும்போது சில முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பிருப்பது இயல்பான விடயம். அதனால், அந்தந்த ஆண்டுகளில் இலவசமாக வெளியாகும் இந்த மேய்ப்பானுக்கான புதிய பிரதியை உள்ளீடு செய்துகொண்டால், பல தவறுகள் முளையிலேயே தவிர்க்கப்பட வாய்ப்பு உருவாகும்.

இவ்வாறு பல விடயங்களை கணினியின் பாவனையாளனே ஆராய்ந்து மதிநுட்பத்துடன் செயற்பட்டு, அவ்வப்போது தோன்றும் சிக்கல்களுக்கு குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு, நாமே நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பதன் மூலம், நேரம், பணம், கோபம், உறவில் நெரிசல், அவசியமற்ற இரத்த அழுத்தம், பிரயாணம் என்று எத்தனையோ விடயங்களில் நன்மைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்து செயற்படுவது விவேகமானது.

கணினி சார்ந்த எழுத்துலகில், டம்மீஸ் (dummies) என்ற சொற்பதம்; பிரபலமானது. பி.சி. போஃர் டம்மீஸ் (PC for Dummies), கொம்பியூட்டர் போஃர் டம்மீஸ் (Computer for Dummies), ரபிள்சூட்டிங் யுவர் பி.சி. போஃர் டம்மீஸ் (Troubleshooting your PC for Dummies) போன்ற பல நூல்கள், அடிப்படை அல்லது ஆரம்ப கணினிப் பாவனையாளர்களுக்கான அத்தனை தகவல்களையும் தாங்கி வருடாவருடம் வெளிவரும் மிகப் பயனுள்ள நூல்கள். மிக இலகுவான விளக்கங்கள் படங்களுடன், அத்தனை நடைமுறைக் கணினிப் பிரச்சனைகளையும் கையாளக்கூடிய விளக்கங்களுடன் இந்நூல்கள் வெளிவருகின்றன. இவற்றை இங்குள்ள நூலகங்களிலிருந்து இலவசமாக எடுத்துவந்து வாசிப்பதன் மூலமும் நாம் எமது கணினி அறிவை வளர்த்துக்கொள்வதுடன், அடுத்தவர்களின் கணினிப் பிரச்சனையின்போது கூட நாம் அவர்களுக்குக் கைகொடுக்கும் வாய்ப்பைப் பெறுவோம். கடல்போன்ற கணினியுலகில் கரையிலாவது நீந்தத் தெரிந்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்து, அடிப்படைகளை அறிந்துகொள்ள முயற்சிப்போம்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்

(வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது. – கலைஞர் உரை).