உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்தை நோர்மானியர் கைப்பற்றிய 1066 இல் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்த இடங்கள்.

நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் (Norman conquest of England) என்பது 11 ஆம் நூற்றாண்டில் வில்லியம் பிரபு தலைமையில் நோர்மானியர்களும் பிரெஞ்சுப் படையினரும் இங்கிலாந்தை வலிந்து கவர்ந்த நிகழ்வைக் குறிப்பதாகும். ஹேஸ்டிங்ஸ் சண்டையில் வில்லியம், இங்கிலாந்து அரசர் ஹெரால்டை 1066 அக்டோபர் 14 அன்று வென்று இங்கிலாந்தின் மன்னராக 1066ஆம் ஆண்டு கிறித்துமசு நாளன்று முடி சூட்டிக்கொண்டார். பின்னர் தமது கட்டுக்குள் கொண்டுவந்து பல மாற்றங்களை அரசாண்மையிலும் சமூகளவிலும் ஏற்படுத்தினார். இவரது நம்பிக்கைக்குரிய பலரை பிரான்சிலிருந்து இங்கிலாந்திற்கு வரச்செய்து பதவிகளை அளித்தார்.[1][2][3]

வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்ததற்கு அவரது குடும்ப தொடர்புகளும் ஓர் காரணமாக அமைந்தது. இங்கிலாந்து மன்னர் எட்வர்டுக்கு மக்கள் இல்லாத நிலையில் அவரது உடன்பிறப்பை மணந்திருந்த காரணத்தினால் அடுத்த வாரிசாக தாம் முடிசூட்டப்படுவோம் என நம்பினார். ஆனால் சனவரி 1066 இல் எட்வர்டின் மறைவிற்கு பின்னர், மற்றொரு வாரிசும் இங்கிலாந்தின் வெசெக்சின் மன்னருமான ஹெரால்டுக்கு முடி சூட்டப்பட்டது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதாக வில்லியம் கருதினார். இதேவேளையில் நோர்வேயின் அரசர் ஹரால்டு ஹார்ட்ரதாவும் இங்கிலாந்தைக் கைப்பற்ற வடக்கு இங்கிலாந்தை படையெடுத்தார். புல்போர்டு சண்டையில் வென்றபோதும் 1066 செப்டம்பர் 25 அன்று இசுடாம்போர்டு பிரிட்ஜ் சண்டையில் நோர்வே அரசர் கொல்லப்பட்டார். ஹெரால்டு வடக்கு இங்கிலாந்தில் இருப்பதை பயன்படுத்தி வில்லியம் தென் இங்கிலாந்துப் பகுதியில் தாக்குதல் நடத்தினார். வில்லியமை தடுக்க தென் இங்கிலாந்து வந்த ஹெரால்டு தமது படைகளில் பெரும்பகுதியினரை வடக்கிலேயே விட்டு வந்தார். 1066 அக்டோபர் 14 அன்று ஹேஸ்டிங்ஸ் என்றவிடத்தில் நாள்முழுவதும் நடந்த சண்டையில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

தமது முதன்மை எதிரிகள் வெல்லப்பட்டாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு வில்லியம் பல உள்நாட்டு எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. 1072 ஆம் ஆண்டுவரை அவரது பதவி உறுதியற்ற நிலையில் இருந்தது. தம்மை எதிர்த்த பல பிரபுக்களின் நிலங்களை பறிமுதல் செய்து தமது ஆதரவாளர்களுக்கு வழங்கினார்; இவரது அடக்குமுறைகளால் சிலர் மறைந்து வாழத் தொடங்கினர். தமது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள பல கோட்டைகளை கட்டியதோடு அலுவல் மொழியாக நோர்மன் பிரான்சிய மொழியை அறிமுகப்படுத்தினார். இம்மொழியே மேல்தட்டு பிரபுக்களின் மொழியாகவும் நீதிமன்றங்கள், அரசு ஆகியவற்றின் மொழியாகவும் கட்டாயப்படுத்தினார். தவிர அனைத்து நிலங்களும் அரசருக்கு உரிமையானதாக (Enfeoffment) அறிவித்து மேற்றட்டு சமூகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். இதனால் மெதுவாக சமூகத்தில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின: அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. அரசாண்மை முறைமையில் பெரும் மாற்றங்கள் நிகழவில்லை; முந்தைய ஆங்கிலோ சாக்சன் அரசின் வடிவங்களையே புதிய நோர்மானிய நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bates Normandy Before 1066 pp. 8–10
  2. Crouch Normans pp. 15–16
  3. Bates Normandy Before 1066 p. 12