நைக்கல் பட்டகம்
நைக்கல் பட்டகம் (Nicol prism, நிக்கல் அரியம்) தள முனைவுற்ற ஒளியைப் பெறப் பயன்படும் ஓர் ஒளியியல் அமைப்பு ஆகும்; இதில் இரு கால்சைட்டு படிகத் துண்டுகள் கனடா பால்சம் என்ற ஒளிபுகும் ஒன்றிணைப்புப் பசையால் ஒட்டப்பட்டுள்ளன. இப்படிகத்தின் வழிச்செல்லும் ஒளிக்கதிர், இயல்பு ஒளிக்கதிர் (சாதாரண ஒளி), இயல்பிலா ஒளிக்கதிர் (அசாதாரண ஒளி) என இரு ஒளிக்கதிர்களாகப் பிரியும்; அதில் இயல்பு ஒளிக்கதிர், கனடா பால்சத்தினால் முழு அக எதிரொளிப்பு அடைந்து தனியாகப் பிரிக்கப்படுகிறது; இயல்பிலா ஒளிக்கதிர் ஊடுருவிச் செல்கிறது. இவ்விரு கதிர்களுமே தளவிளைவுற்ற (முனைவுற்ற) ஒளிக்கதிர்கள் என்பதால், நைக்கல் பட்டகம் தளவிளைவுற்ற ஒளியைப் பெற உதவும் அமைப்பாகச் செயல்படுகிறது. இப்பட்டகம் வில்லியம் நைக்கல் (1770 – 1851) என்ற இசுக்காட்லாந்து இயற்பியலாரால் 1828-இல் உருவாக்கப்பட்டது. இதன் உதவியுடன் மூலக்கூறுகளின் கட்டமைப்பையும் கரிமச் சேர்மங்களின் ஒளியியல் வினையையும் நைக்கல் ஆராய்ந்தார். முன்னர் நுண்ணோக்கியியலிலும் தளவிளைவாக்கியியலிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்ட நைக்கல் பட்டகத்தைத் தற்போது முனைவாக்கிகளும் கிளான் - தாம்சன் பட்டகமும் பயன்பாட்டில் பின்தள்ளி விட்டன.[1]
கலைச்சொற்கள்
[தொகு]- தள முனைவுற்ற ஒளி - plane polarized light
- இயல்பு ஒளிக்கதிர், இயல்பிலா ஒளிக்கதிர் - ordinary light-ray, extraordinary light-ray
- முழு அக எதிரொளிப்பு - total internal reflection
- தளவிளைவுற்ற (முனைவுற்ற) ஒளி - polarized light
- கட்டமைப்பு - structure
- ஒளியியல் வினை - optical activity
- நுண்ணோக்கியியல் - microscopy
- தளவிளைவாக்கியியல் - polarimetry
- முனைவாக்கி - polarizer
- ஒருதள முனைவாக்கி - Polaroid
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenslade, Thomas B., Jr. "Nicol Prism". Kenyon College. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)
- இயல்பியல் களஞ்சியம் -- தொகு. ப.க. பொன்னுசாமி -- பக். 137, 138