நேரலைத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேரலை தொலைக்காட்சி (Live television), நேரலை ஒளிபரப்பு அல்லது லைவ் டிவி என்பது ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்ற நேரத்திலேயே நிகழ்நேரத்தில் காட்சிப்பிடிக்கப்படும் ஒளிதங்கள் தொகுக்கப்பட்டு ஒளிபரப்பப்படுவதாகும். தொலைக்காட்சியின் துவக்க காலத்தில் அனைத்து ஒளிபரப்புகளுமே நேரலை ஒளிபரப்பாகவே இருந்தன; ஐ லவ் லூசி போன்ற ஒரு சில தொடர் நாடகங்கள் மட்டுமே ஒளிபிடிப்புத் தளத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. 1958ஆம் ஆண்டில் காணொளி நாடாக்கள் கண்டறியப்பட்ட பின்னரே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களைப் போன்றே, முன்னரே எழுதப்பட்ட வரிவடிவத்தில் தயாரிக்கப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டன; பின்னர் தொலைக்காட்சியில் இந்த ஒளித நாடாக்கள் மூலமாக ஒளிபரப்பப்படலாயிற்று. இன்று பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலையில் துவங்கும் நிகழ்ச்சிகள், வணக்கம் தமிழகம் போன்றவை நேரலை நிகழ்ச்சிகளாகத் தொகுக்கப்படுகின்றன. தொலைக்காட்சி நாடகங்களும் அரட்டை அரங்க நிகழ்ச்சிகளும் நிகழ்நேர விளையாட்டு நிகழ்ச்சிகளும் முன்னரே வடிவமைத்த வடிவங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டே ஒளிபரப்பாகின்றன. பல உள்ளூர் தொலைக்காட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை நேரலையாகவே ஒளிபரப்புகின்றன.

பொதுவாக ஒளிப்பதிவுக் கருவிகள் கண்டுபிடிக்கப்படும் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நேரலையாகவே இருந்தன; தற்போது விளையாட்டுப் போட்டிகள், விருது வழங்கும் விழாக்கள், பார்வையாளர் நேரடியாகப் பங்குபெறும் நிகழ்ச்சிகளைப் போன்றவை நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.

நேரலைத் தொலைக்காட்சியின்[தொகு]

பயன்கள்[தொகு]

ஒரு நிகழ்வு நடக்கின்ற போதிலேயே அங்கு நேரடியாக சென்று காண முடியாதவர்களுக்கு அவற்றின் ஒளிதங்கள் நேரலையாக காட்டப்படுவது மிகுந்த ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கூடுதலான பார்வையாளர்களைப் பெறுவதால் இந்த நிகழ்ச்சிகளுக்கு கூடுதலான விளம்பர வருவாய் கிடைக்கிறது. தற்கால தொழில்நுட்பங்களான தயாரிப்பு சரக்குந்திகள், செய்மதி தானுந்தி மேல்நோக்கிய இணைப்பு மற்றும் செய்தியாளர்களைக் கொண்டு நகரத்தின் எங்கு என்ன நடந்தாலும் உடனடியாக நிகழிடத்திலிருந்தே அறிவித்திட இயல்கிறது. நிகழ்வின் தாக்கம் குறித்தும் உடனடியாக கருத்துக்கள் பெற முடிகிறது. இருப்பினும் இத்தகைய நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிகழ்வுகளை பரபரப்பாக்கியும் நன்கு சிந்திக்கபட்ட தீர்வுகளுக்கு எதிராக உடனடி தீர்வுகளுக்கு வழிவகுத்தும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குவதாக சில சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.

சில நேரங்களில் தொகுக்கப்படாது நேரடியாகவே நிகழ்நேரத்தில் ஒளிதங்கள் பரப்பப்படுவது தொலைக்காட்சி நிலையங்களை சட்டப் பிரச்சினைகளில் தள்ளப்படக் கூடும். நாட்டில் நிலவும் சட்டங்கள் மற்றும் அரசியல் சரித்தன்மைக்காக தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும்பாலும் சற்று நேரத் தாமதம் (~ 20 விநாடிகள்) செய்து ஒளிபரப்புகின்றன. பார்வையாளர்களுக்கு இது நிகழ்நேர நிகழ்ச்சி போலத் தெரிந்தாலும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மனதைப் புண்படுத்தும் சொற்களை தணிக்கை செய்திட இந்த நேரத் தாமதம் உதவுகிறது.

பொதுவாக முதன்மை நிகழ்ச்சிகள் மட்டுமே நேரலையாகக் காட்டப்படும். இடையில் காட்டப்படும் விளம்பர ஒளிதங்கள் முன்னரே பதிவு செய்யப்பட்ட கருவியிலிருந்து ஒளிபரப்பாகும். மே 29, 2008இல் முதன்முதலாக ஹோண்டா தானுந்து தயாரிப்பு நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தில் தனது விளம்பரத்தை நேரலையாக ஒளிபரப்பியது; விளம்பரத்தில் வான்வெளிக் குதிப்பவர்கள் வான்வெளியில் ஹோண்டா என்ற ஆங்கிலச்சொல் அமையுமாறு தங்களை இணைத்துக் கொண்டனர்.


மேல் தகவல்களுக்கு[தொகு]

  • No Retakes, by Sandra Grabman and Wright King. BearManor Media, 2008.
  • Caesar's Hours: My Life in Comedy, with Love and Laughter, by Sid Caesar with Eddy Friedfeld. Public Affairs, 2003.
  • The Box: An Oral History of Television 1920-1961, by Jeff Kisseloff. Penguin Books, 1995.
  • The Live Television Generation of Hollywood Film Directors, by Gorham Kindem. McFarland, 1994.
  • Live Television: The Golden Age of 1946-1958 in New York, by Frank Sturcken. McFarland, 1990.
  • Golden Age of Television: Notes from the Survivors, by Max Wilk. Moyer Bell Limited, 1989.
  • Where Have I Been? An Autobiography, by Sid Caesar with Bill Davidson, Crown Publishers, Inc., 1982.

சான்றுகோள்கள்[தொகு]