நேரடி விளம்பர முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நேரடி விளம்பர முறை என்பது சந்தைப்படுத்தல் விளம்பர முறையின் ஒரு வகை ஆகும். இரண்டு குணநலன்கள் இதனை மற்ற வகை சந்தைப்படுத்தல்களில் இருந்து வேறுபடுத்துகின்றன. முதலாவதாக, இது இடை ஊடகத்தைப் பயன்படுத்தாமல் செய்திகளை நேரடியாக நுகர்வோருக்கு அனுப்ப முயற்சிக்கிறது. இரண்டாவதாக, ஒரு குறிப்பான "நடவடிக்கைக்கான அழைப்பை" கோருவதன் மீது இது கவனம் குவிக்கிறது.

விளம்பரமானது ஆர்வமுள்ளவரை ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு கோருவதாய் இருந்தால், உதாரணமாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவோ அல்லது ஒரு இணையதளத்தை பார்வையிடவோ கோருவதாய் இருந்தால், அப்போது அந்த செயல் நேரடி மறுமொழி விளம்பரமாகக் கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

நேரடி விளம்பர முறை (டைரக்ட் மார்க்கெட்டிங்) என்கின்ற பிரயோகம் முதன்முதலில் லெஸ்டர் வுன்டர்மேன் ஆற்றிய ஒரு உரையில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதாய் நம்பப்படுகிறது. இவர் தான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் போன்ற வர்த்தகப் பெயர்களுக்கு நேரடி விளம்பர முறை உத்திகளைப் பயன்படுத்தி முன்னோடியாய்த் திகழ்ந்தார்.[மேற்கோள் தேவை] அஞ்சல் அலுவலகம் வழியாக அல்லது நேரடியாக நுகர்வோரின் அஞ்சல் பெட்டிகளில் விடப்படுகிற விரும்பியிராத வர்த்தக விளம்பரங்களைக் குறிப்பிடும் கூள அஞ்சல் (junk mail) என்கிற பதம் 1954 ஆம் ஆண்டுவாக்கில் தோன்றியிருக்கலாம்.[1] "விரும்பியிராத வர்த்தக மின்னஞ்சலை"க் குறிக்கும் ஸ்பேம் என்கிற பதம், மார்ச் 31, 1993[2] சமயத்தில் தோன்றியிருக்கக் காணலாம்.

வுன்டர்மேன் தான் நேரடி விளம்பர முறை என்கிற பதத்தைப் பிரயோகித்த முதல் மனிதராக இருக்கலாம். என்றாலும் கூட அஞ்சல் வழி நேரடி விளம்பர முறை என்பது அடிப்படையில் 1867 ஆம் ஆண்டில் தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அமெரிக்காவில் துவங்கி விட்டது.[மேற்கோள் தேவை]

முதல் நவீன கால அஞ்சல் வழி நேரடி விற்பனை விளம்பரப் பட்டியல் ஆரோன் மோன்ட்கோமெரிவார்டு மூலம் 1872 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.[மேற்கோள் தேவை] [மேற்கோள் தேவை] மூன்றாம் வகுப்பு கத்தை அஞ்சல் கட்டண விகிதங்கள் 1928 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டன.[மேற்கோள் தேவை]

ஐரோப்பாவில் நேரடி விளம்பர முறையின் வரலாற்றைப் பின்தொடர்ந்தால் அது 15 ஆம் நூற்றாண்டு வரை பின்செல்வதைக் காணலாம். குடென்பெர்க் நகரும் அச்சைக் கண்டுபிடித்ததையொட்டி, சுமார் 1450 ஆம் ஆண்டுவாக்கில் அச்சு இயந்திர வெளியீட்டாளர்களிடம் இருந்தான முதல் வர்த்தக விளம்பர பட்டியல் தோன்றியது.[மேற்கோள் தேவை]

அனுகூலங்களும் குறைகளும்[தொகு]

நேரடி விளம்பர முறை என்பது பல விளம்பரதாரர்களுக்கு ஈர்க்கத்தக்கதாய் இருக்கிறது. ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் அதன் நேர்மறை விளைவானது (எதிர்மறை விளைவு அல்ல) நேரடியாக கணக்கிடப்பட முடியும். உதாரணமாக, ஒரு விளம்பரதாரர் அஞ்சல் வழியே ஒரு மில்லியன் விளம்பர கோரிக்கைகளை அனுப்பி, பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்திற்கு மறுமொழி செய்திருக்கிறார்கள் என்றால், இந்த பிரச்சாரம் நேரடியாக மறுமொழிகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை விளம்பரதாரர் நம்பிக்கையுடன் தெரிவிக்கலாம். ஆயினும், கூள அஞ்சல் மூலம் எரிச்சலுற்ற பெறுநர்களின் எண்ணிக்கையை எளிதாய் கணக்கிட முடியாது. இதற்கு மாறாய், மற்ற ஊடகங்கள் வழியான கணக்கீடு பல சமயங்களில் மறைமுகமானதாய் இருக்கும். ஏனெனில் நுகர்வோரிடம் இருந்து நேரடியான மறுமொழியை அது பெறுவதில்லை. வெற்றிகரமான நேரடி விளம்பர முறைக்கு அத்தியாவசிய அடிப்படைக் கூறுகளில் ஒன்றான, முடிவுகளை அளவிடுவது குறித்து இந்த கட்டுரையில் பிற இடங்களில் விரிவாக ஆராயப்படுகிறது. ஆயினும், இணையக் காலம் துவங்கியதில் இருந்தே, நேரடி விளம்பர மறுமொழிகளை பின்தொடர்வதும் முடிவுகளை அளவிடுவதும் தலைமை விளம்பர அதிகாரிகளின் (சிஎம்ஓ) சவால்களாய் அமைந்துள்ளன.[மேற்கோள் தேவை]

பல சந்தையாளர்களுக்கு இந்த விளம்பர முறையில் விருப்பம் இருக்கிறது என்றாலும், குறிப்பிட்ட ஊடகத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் சில நேரடி விளம்பர முயற்சிகள் தேவையில்லாத விளம்பர கோரிக்கைகளை உருவாக்குவதாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பெறுநருக்கு பொருத்தமுறாத நேரடி அஞ்சல் கூள அஞ்சலாகக் கருதப்படுகிறது. தேவையற்ற மின்னஞ்சல் செய்திகள் குப்பைஅஞ்சல்களாய் கருதப்படுகின்றன. நேரடி விளம்பரதாரர்கள் "விலகும் விருப்ப" பட்டியல்கள் போன்ற திறன் பெற்றிருக்கிற போதிலும்,[மேற்கோள் தேவை] தனியுரிமை மற்றும் சூழல் காரணங்களுக்காக நேரடி விளம்பர முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் சில நுகர்வோர்கள் கோருகின்றனர்.

கார்ல்சன் மார்க்கெட்டிங், பிராக்சிமிட்டி மற்றும் ஐரிஷ் நேஷன் (Iris Nation) போன்ற உலகின் மிகப்பெரிய சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர முகமைகளில் பலவும் நேரடி விளம்பர முறையில் தனித்துவம் வாய்ந்த முகமைகளாகத் தான் துவங்கின. வாடிக்கையாளரின் திட்டச்செலவினம் குறைந்தது மற்றும் பெறுநர் எண்ணிக்கை பன்மடங்காய் பெருகியது போன்ற காரணங்களால், இந்த முகமைகளில் பலவும் வெறுமனே நேரடி விளம்பர சேவைகளை மட்டும் விற்பதைக் காட்டிலும் "ஒருங்கிணைந்த விளம்பர முறை"யில் சேவைகளை வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்து கொண்டன. விற்பனைக்கு தாங்கள் பயன்படுத்தும் நேரடி விளம்பரம், மக்கள்தொடர்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் விளம்பரம் ஆகியவை அடங்கிய முழுமையான சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பு தொகுப்பை குறிப்பிட முகமைகள் இந்த "ஒருங்கிணைந்த விளம்பர முறை" என்கிற பதத்தைப் பயன்படுத்துகின்றன.

வழிகள்[தொகு]

நேரடி அஞ்சல்[தொகு]

நேரடி விளம்பர முறையின் மிக பொதுவான வடிவம் நேரடி அஞ்சல்[மேற்கோள் தேவை] ஆகும். இது சில சமயங்களில் கூள அஞ்சல் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு பகுதியில் இருக்கக் கூடிய அனைத்து அஞ்சல் வாடிக்கையாளர்கள் அல்லது ஒரு பட்டியலில் இருக்கும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் காகித அஞ்சல்களை அனுப்பும் விளம்பரதாரர்களால் இது பயன்படுத்தப்படுகிறது.

ஒரு வாடிக்கையாளருக்கு தகவல் தொடர்பை கொண்டு சேர்க்கக் கூடிய எந்த ஒரு குறைந்த செலவு ஊடகமும் நேரடி விளம்பர முறையில் பயன்படுத்தப்பட முடியும். இதில் அஞ்சல் சேவையைப் பயன்படுத்தியும் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. நேரடி அஞ்சல் என்பது நேரடி விளம்பரத் துறையில் அஞ்சல் அலுவலகம் மூலமான தகவல் தொடர்பு வெளியீடுகளைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. "கூள அஞ்சல்" அல்லது "விளம்பர அஞ்சல்" அல்லது "தொல்லை அஞ்சல்" என்றும் குறிப்பிடப்படும் இது கத்தை அஞ்சல்களையும் அடக்கியிருக்கலாம்.

விளம்பர சுற்றறிக்கைகள், விற்பனை விளம்பரப் பட்டியல்கள், இலவச சோதனைக் குறுந்தகடுகள், முன்கூட்டிய ஒப்புதலளிக்கப்பட்ட கடன் அட்டை விண்ணப்பங்கள், மற்றும் அஞ்சல் வழியாக வீடுகளுக்கு அல்லது வர்த்தகங்களுக்கு, அல்லது அஞ்சலகம் தவிர்த்த மற்ற விநியோக சேவைகள் மூலம் நுகர்வோரின் அஞ்சல்பெட்டிகளில் விநியோகிக்கப்படும் பிற விரும்பிக்கோராத விற்பனை மைய ஸ்தாபக அழைப்புகள் ஆகியவை கூள அஞ்சலில் அடங்கும். கத்தை அஞ்சல்கள் எனப்படுபவை நிதி சேவைகள், வீட்டு கணினி, மற்றும் சுற்றுலா மற்றும் பயணத் துறைகளில் செயல்படும் வர்த்தகங்களுக்கு குறிப்பாக பிரபலமானதொரு விளம்பர வழிமுறையாக இருக்கிறது.

பல வளர்ந்த நாடுகளில், நேரடி அஞ்சல் மொத்த அஞ்சல் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பதால் அவற்றுக்கென சிறப்பு விகிதங்கள் நிறுவப்பட்டுள்ளன. உதாரணமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், வழக்கமான முதல்-வகுப்பு விகிதங்களை விடக் குறிப்பிடத்தக்க அளவு குறைவாயிருக்கும் விகிதத்தில் அஞ்சல்களை அனுப்ப விளம்பரதாரர்களுக்கு வசதியளிக்கும் கத்தை அஞ்சல் விகிதங்கள் உள்ளன. இந்த விகிதங்களுக்குத் தகுதி பெற, அஞ்சல் துறைக்கு கையாளும் செலவைக் குறைக்கும் வகையில் இந்த அஞ்சல்கள் குறிப்பிட்ட முறைகளில் அமைக்கப்பட்டிருக்கவும் அடுக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.

பல சமயங்களில் நேரடி அஞ்சல் வழிமுறைகளை இலக்குற்ற அஞ்சல் முறையாக விளம்பரதாரர்கள் மெருகேற்றுகின்றனர். இதில் சாதகமான மறுமொழி பெறக் கூடிய சாத்தியமிருப்பதாகக் கருதப்படும் பெறுநர்களை மட்டும் தரவுத்தளத்தில் இருந்து தெரிவு செய்து அவர்களுக்கு மட்டும் இந்த அஞ்சல் அனுப்பப்படும். உதாரணமாக, கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமுடைய ஒரு நபர் கோல்ஃப் தொடர்பான தயாரிப்பு பொருட்களுக்கு அல்லது கோல்ஃப் விளையாடுபவர்களுக்கு பொருத்தமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நேரடி அஞ்சல்களை மட்டுமே பெறலாம். தரவுத்தள ஆய்வின் இந்த பயன்பாடு தரவுத்தள விளம்பர முறையின் ஒரு வகையாகும். அஞ்சலின் இந்த வடிவத்தை "விளம்பர அஞ்சல்" (admail ) என்று அமெரிக்க அஞ்சல் சேவைத் துறை அழைக்கிறது.

தொலைபேசி வழி விளம்பரம்[தொகு]

நேரடி விளம்பர முறையில் மிகவும் அதிகமாய் பயன்படுத்தப்படும் வடிவத்தில் இரண்டாமிடத்தில் இருப்பது தொலைபேசி வழி விளம்பரங்கள் ஆகும்.[மேற்கோள் தேவை] இதில் சந்தைதாரர்கள் நுகர்வோரை தொலைபேசி வழி தொடர்புகொள்கிறார்கள். எரிச்சலூட்டும் விளம்பர அழைப்பு (cold call telemarketing) சம்பாதித்த வெறுப்பின் காரணமாக (இதில் நுகர்வோர் விற்பனை அழைப்பை எதிர்பார்த்திருக்கவோ அல்லது வரவேற்கவோ மாட்டார்) சில அமெரிக்க மாகாணங்களும் அமெரிக்க பெடரல் அரசாங்கமும் "அழைப்பு விரும்பாதோர் பட்டியல்கள்" உருவாக்கவும் கனமான அபராதங்களுக்கான சட்டங்கள் இயற்ற நேர்ந்துள்ளது.

அமெரிக்காவில் தேசிய அளவிலான அழைக்காதீர் பட்டியல் அக்டோபர் 1, 2003 அன்று செயல்பாட்டிற்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், இந்த பட்டியலில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள எவரொருவரையும் தொலைபேசி விளம்பரதாரர்கள் அழைப்பது சட்டவிரோதமாகும். இந்த பட்டியல் செயல்பாட்டிற்கு வந்த ஒரு வருட காலத்தில், 62 மில்லியனுக்கும் அதிகமான பேர் இதில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.[3] தொலைபேசி விளம்பரத் துறை இந்த பட்டியல் உருவாக்கத்தை எதிர்த்தது என்றாலும் அநேக தொலைபேசி விளம்பரதாரர்கள் சட்டத்திற்கு இணக்கமாய் நடந்து கொண்டதோடு பட்டியலில் இருக்கும் நபர்களை அழைப்பதைத் தவிர்த்து விடுகின்றனர்.[மேற்கோள் தேவை]

இதே போன்றதொரு அழைக்காதீர் பட்டியலை உருவாக்க கனடா சட்டம் நிறைவேற்றியுள்ளது. மற்ற நாடுகளில் இது நியூசிலாந்து பெயர் அகற்ற சேவை (New Zealand Name Removal Service) போல தன்னார்வப்பட்டதாய் இருக்கிறது.

மின்னஞ்சல் விளம்பரம்[தொகு]

இன்றைய தேதியில் மின்னஞ்சல் விளம்பரமுறை தொலைபேசி விளம்பர முறையை எண்ணிக்கையில் கடந்திருக்கிற ஒன்றாகும்.[மேற்கோள் தேவை] இது ஒரு மூன்றாவது வகையான நேரடி விளம்பர முறையாகும். இதில் பெரிய கவலை தரும் அம்சமாக இருப்பது தொல்லை அஞ்சல் (ஸ்பேம்) ஆகும். இது சட்டப்பூர்வமான மின்னஞ்சல் விளம்பரத்தை உண்மையில் அச்சுறுத்துவதாய் அமைந்திருக்கிறது. பெரியளவு தொல்லை அஞ்சல் முறைகள் பெருகியதால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களும் மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களும் மிகத் திறம்பட்ட மின்னஞ்சல் வடிகட்டி நிரல்களை உருவாக்கியுள்ளன.[4]

வீட்டுக்கு வீடு துண்டுப்பிரசுரம் மூலமான விளம்பரம்[தொகு]

துண்டுப்பிரசுர விநியோக சேவைகள் துரித உணவுத் துறைகள், மற்றும் உள்ளூர் நுகர்வோரில் கவனம் செலுத்தும் மற்ற வர்த்தகங்களில் விரிவான அளவில் பயன்படுகின்றன. நேரடி அஞ்சல் விளம்பரத்தை ஒத்த வகையிலான இதில், பகுதி வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்படுவதோடு, அஞ்சல் தலைகள், உறைகள் வாங்க வேண்டியதில்லை, முகவரிப் பட்டியல்களையும் வீட்டிலிருப்போர் பெயர்களையும் வாங்க வேண்டியதில்லை என்பதால் அஞ்சல் விளம்பர செலவில் ஒரு சிறு பகுதி மட்டுமே இதற்கு செலவாகிறது.

குரல்அஞ்சல் விளம்பரம்[தொகு]

ஐந்தாவது வகையான நேரடி விளம்பர உத்தி ஒன்று எழுந்திருக்கிறது. மின்னஞ்சல் எல்லா இடங்களிலும் நிரம்பியிருக்கிறது என்பதாலும் நேரடி அஞ்சல் மற்றும் தொலைபேசி விளம்பரங்களின் செலவைப் பார்ப்பவர்களுக்கும், மக்களை நேரடியாக குரல் வழியாய் அணுகுவதற்கான ஒரு செலவு குறைந்த வழியை குரல்அஞ்சல் விளம்பர உத்தி வழங்கியுள்ளது.

குரலஞ்சல் விளம்பரங்களின் நுகர்வோர் விளம்பர பயன்பாடுகள் ஏராளமாய் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு "குரல் தொல்லை அஞ்சல்கள்" பெருகியதையடுத்து, பல பகுதிகளும் நுகர்வோர் குரலஞ்சல் விளம்பர கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டங்களை இயற்ற தள்ளப்பட்டன.

தனிநபர் தேவைக்கேற்ற விளம்பர உத்தியை சாதிக்க, சமீபத்தில் நிறுவனங்கள் வழிகாட்டப்படும் குரல் அஞ்சலைப் பயன்படுத்தின. இப்பயன்பாட்டில் நேரலை அழைப்பாளர்களின் தேவைக்கேற்ற வகையில் வழிநடத்தப்பட்டு முன்கூட்டி பதிவு செய்யப்பட்ட குரலஞ்சல்கள் வெளியாகும். வழிகாட்டப்படும் குரல் அஞ்சல் வர்த்தகங்களை தொடர்பு கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படுவதால், குரலஞ்சல் விளம்பரத்தின் மற்ற வடிவங்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் அழைக்காதீர் பட்டியல் கட்டுப்பாடுகளில் இருந்து இது விதிவிலக்கு பெற்றுள்ளது.

கூப்பன் வழங்கும் முறை (Couponing)[தொகு]

கூப்பன் வழங்கும் முறை என்பது பத்திரிகை ஊடகத்தில் வாசகரிடம் இருந்து மறுமொழியை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது. வாசகர் ஒரு விளம்பரத்தை வெட்டி அதை ஒரு பேரங்காடியில் கொடுத்தால் ஒரு தள்ளுபடி பெறலாம் என்று கூறப்படுவதை இதற்கொரு உதாரணமாய்க் கூறலாம். செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வரும் கூப்பன்கள் நேரடி விளம்பரங்களாகக் கருதப்பட முடியாது. ஏனென்றால் விளம்பரதாரருக்கு ஒரு மூன்றாம் தரப்பு ஊடகத்தை (செய்தித்தாள் அல்லது பத்திரிகை) ஆதரிக்க வேண்டிய செலவு ஏற்படுகிறது.

நேரடி மறுமொழி தொலைக்காட்சி விளம்பர முறை[தொகு]

தொலைக்காட்சியில் நேரடி விளம்பரம் (பொதுவாக DRTV என்று குறிப்பிடப்படுகிறது) இரண்டு அடிப்படை வடிவங்களைக் கொண்டுள்ளது. நெடிய வடிவம் பொதுவாக அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர துண்டுகளாக இருக்கும். இதில் தயாரிப்பு பொருள் குறித்து விரிவாக விளக்கப்படும். இது தகவல்விளம்பரம் (infomercials) என பொதுவாக குறிப்பிடப்படுகின்றன. குறுகிய வடிவம் பொதுவாக 0:30 விநாடி அல்லது 0:60 விநாடி விளம்பரங்களாக இருக்கும். இந்த குறுகிய வடிவத்தில் பார்வையாளர்கள் உடனடியாய் மறுமொழியளிக்க (பொதுவாக திரையில் காண்பிக்கப்படும் ஒரு தொலைபேசி எண்ணை அழைக்கவோ அல்லது ஒரு இணையதளத்திற்கு செல்லவோ) கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

தொலைக்காட்சி மறுமொழி விளம்பரங்களை - அதாவது தகவல் விளம்பரங்களை - நேரடி விளம்பரத்தின் ஒரு வடிவமாகக் கருதலாம். ஏனென்றால் மறுமொழிகள் காட்சி வழி ஒளிபரப்பப்படும் தொலைபேசி எண்களின் வழியான அழைப்புகளின் வடிவத்தில் உள்ளன. இது விளம்பரதாரர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட விளம்பர பரப்புரை மூலம் கிட்டிய அழைப்புகளை ஓரளவுக்கு சரியாக அடையாளம் காண முடிவதற்கு, மற்றும் தொலைபேசி விளம்பரத்திற்கான இலக்குகளாக மறுமொழியளிக்கும் வாடிக்கையாளர் எண்களைப் பெறுவதற்கு ஆகிய இரண்டு நோக்கங்களுக்கும் உதவி புரிகிறது. அமெரிக்காவில் அழைக்காதீர் பட்டியல் விதிகளின் கீழ், அழைக்கும் நிறுவனம் அழைக்கப்படும் வாடிக்கையாளருடன் ஏற்கனவே வர்த்தக உறவு கொண்டிருக்கும்பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த அழைக்காதீர் பட்டியல் கட்டுப்பாடுகளில் இருந்து இந்த விளம்பரதாரர் விதிவிலக்கு பெறுவார். அதன் பின் இந்த மறுமொழியளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அது சார்ந்த பிறபொருட்கள் விளம்பரம் செய்வது மற்றும் அவர்களுக்கு இன்னும் விலையுயர்ந்த பொருட்களை விளம்பரம் செய்வது போன்ற சேவைகளை நிறுவனங்கள் செய்கின்றன.

DRTV விளம்பரங்களில் மிகப் புகழ்பெற்றவற்றுள் ஒன்றாக கின்சு கத்திகள் (Ginsu Knives) விளம்பரத்தைக் கூறலாம். சலுகையில் பல்வேறு அம்சங்களைச் சேர்த்துப் பயன்படுத்துவது மற்றும் திருப்திக்கான உத்தரவாதம் வழங்குவது போன்று, இந்த விளம்பரத்தின் பல அம்சங்களும் மிக அதிகமாய் நகலெடுக்கப்பட்டன என்பதோடு குறுகிய வடிவ நேரடி மறுமொழி தொலைக்காட்சி விளம்பரங்களில் (DRTV) வெற்றிச் சூத்திரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டன.

நேரடி விற்பனை[தொகு]

நேரடி விற்பனை என்பது தயாரிப்பு பொருட்களை வாடிக்கையாளரின் முகத்துக்கு நேராய்ப் பார்த்து பேசி நேரடியாய் விற்பனை செய்வதாகும். வாங்கும் சாத்தியம் கொண்ட நபர்களை விற்பனைப் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று பார்ப்பதன் மூலமாகவோ அல்லது விருந்து நிகழ்ச்சிகள் போன்ற மறைமுக வழிகள் மூலமாகவோ இந்த சந்திப்பு நிகழலாம்.

ஒருங்கிணைந்த பரப்புரைகள்[தொகு]

பல விளம்பரதாரர்களுக்கு, திறம்பட்டதொரு நேரடி விளம்பர பரப்புரை என்பது பல்வேறு வழிகளை செயல்படுத்துவதாகும். ஒரு பெரிய பரப்புரையில் நேரடி அஞ்சல், வானொலி மற்றும் தொலைக்காட்சி, அத்துடன் மின்னஞ்சல், இணைய தேடல் விளம்பர முறை, சமூக வலைப்பின்னல் வழிமுறைகள் மற்றும் காணொளி ஆகிய அனைத்தும் கலந்திருக்கும். ஒரு ஆய்வறிக்கையில்[5], ஆராயப்பட்ட பரப்புரைகளில் 57% ஒருங்கிணைந்த உத்திகளைப் பயன்படுத்தியிருந்ததாகக் கண்டறியப்பட்டது. இவற்றில் ஏறக்குறைய பாதி (47%) ஒரு நேரடி அஞ்சல் பரப்புரை மூலம் துவங்கப்பட்டு, பின் பொதுவாக மின்னஞ்சல் விளம்பரம் மற்றும் தொலைபேசி வழி விளம்பரம் மூலம் பின்தொடரப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Entry for junk, Online Etymology Dictionary. பிப்ரவரி 19, 2008 இல் பெறப்பட்டது.
  2. Origin of the term "spam" to mean net abuse, Brad Templeton's website. பிப்ரவரி 19, 2008 இல் பெறப்பட்டது.
  3. National Do Not Call Registry Celebrates One-Year Anniversary, Federal Trade Commission, ஜூன் 24, 2004. பிப்ரவரி 19, 2008 இல் பெறப்பட்டது.
  4. "What is a "Whitelist" and why do I want to work with a "Whitelisted" Mail Distributor?". Archived from the original on 2011-05-01. Retrieved 2010-01-18.
  5. "The Integrated Marketing Mix," Use of digital Media Rising, 'BtoB Magazine பரணிடப்பட்டது 2009-09-07 at the வந்தவழி இயந்திரம்,' ஜூலை 14, 2008

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரடி_விளம்பர_முறை&oldid=3700121" இலிருந்து மீள்விக்கப்பட்டது