நான்காம் ஞானியின் கதை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
“நான்காம் ஞானியின் கதை” - முதல் பதிப்பு. வெளியீடு: ஹார்ப்பர் அண்ட் பிரதர்ஸ்

நான்காம் ஞானியின் கதை அல்லது மற்ற ஞானியின் கதை (The Story of the Other Wise Man) என்பது ஹென்றி வான் டைக் (Henry van Dyke) என்பவர் எழுதிய ஒரு குறு புதினம் அல்லது நெடும் குறுங்கதை ஆகும். இக்கதை முதலில் 1895ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[1][2]

இந்நூல் பல மறுபதிப்புகளைக் கண்டது. 1996இல் அந்நூலின் நூற்றாண்டுப் பதிப்பு பாலண்டைன் நூலகத்தினரால் வெளியிடப்பட்டது.[3]

கதைச் சுருக்கம்[தொகு]

இயேசு இந்த உலகத்தில் பிறந்தபோது, கீழ்த்திசை ஞானியர் விண்ணில் ஓர் அதிசய விண்மீன் எழுந்ததைக் கண்டதும், அதன் ஒளியைப் பின்பற்றிச் சென்று, பல தடைகளைத் தாண்டிச் சென்று, இயேசுவை அவருடைய பெற்றோரான மரியாவோடும் யோசேப்போடும் கண்டு, அவரை வணங்கி அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் காணிக்கையாக அளித்தார்கள் என்றும், இயேசுவை “யூதர்களின் அரசராக” வணங்கினர் என்றும் விவிலியம் கூறுகின்றது. இந்த விவிலிய வரலாற்றைப் புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு நற்செய்தி நூலில் காணலாம் (மத்தேயு 2:1-12).[4]

இந்த விவிலிய வரலாற்றை இன்னும் விரித்து, வேறு பல தகவல்களை அளித்து உருவாக்கப்பட்ட கதையே “நான்காம் ஞானியின் கதை” என்னும் குறு புதினம் ஆகும்.

நான்காம் ஞானி[தொகு]

எத்தனை ஞானியர் இயேசுவைக் கண்டு வணங்கினர் என்று மத்தேயு நற்செய்தியில் தகவல் இல்லை. ஆனால் அவர்கள் முறையே பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகிய மூன்று விலையுயர்ந்த பொருள்களைக் குழந்தை இயேசுவுக்குப் பரிசாக அளித்ததிலிருந்து அவர்கள் மூன்று பேர் என்றொரு மரபுச் செய்தி உண்டு.

விவிலியம் குறிப்பிடுகின்ற “மூன்று ஞானியர்” தவிர “மற்றொரு” (”நான்காம்”) ஞானியொருவரும் இயேசுவைத் தேடிச் சென்றார் என்ற கதையை ஹென்றி வான் டைக் தமது குறும் புதினத்தில் எடுத்துரைக்கிறார்.

இந்த நான்காம் ஞானியின் பெயர் அர்த்தபான். அவர் பாரசீக இராச்சியத்தின் மீதியர் இனத்தவர். பிற ஞானியரைப் போலவே இவரும் விண்ணகத்தில் ஓர் அதிசய விண்மீன் தோன்றியதைக் காண்கிறார். அந்த விண்மீன் “யூதர்களின் அரசர்” பிறந்திருக்கிறார் என்ற செய்தியை அறிவிப்பதாக அர்த்தபான் புரிந்துகொள்கிறார். உடனேயே, மற்ற ஞானிகளைப் போல அர்த்தபானும் நெடிய பயணம் மேற்கோண்டு பிற ஞானிகளோடு சேர்ந்து யூதர்களின் அரசரைச் சென்று சந்தித்து, அவருக்குப் பரிசுப் பொருள்கள் வழங்கப் புறப்பட்டுச் செல்கிறார்.

அர்த்தபான் கொண்டுசென்ற பரிசுகள்[தொகு]

யூதர்களின் அரசராகப் பிறந்த இயேசுவைக் கண்டு வணங்கச் சென்ற அர்த்தபான் தம் நாட்டில் கிடைத்த விலையுயர்ந்த பொருள்களை அவருக்குக் காணிக்கையாக்க எண்ணினார். எனவே அவர் மிகவே விலைமதிப்புள்ள மூன்று பொருள்களை எடுத்துக்கொள்கின்றார். அவை மாணிக்கம், நீலக்கல், முத்து ஆகியவை.

இந்த விலையுயர்ந்த பொருள்களைக் குழந்தை இயேசுவுக்குக் காணிக்கையாக வழங்கும் எண்ணத்தோடு புறப்பட்ட அர்த்தபான் மேற்கொண்ட பயணத்தின்போது அவருக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டன. அந்த அனுபவங்கள் வழியாக அவர் தம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் குறிக்கோளை எவ்வாறு கண்டுகொண்டார் என்பது கதையாகக் கூறப்படுகிறது.

சாவின் பிடியில் இருந்த ஒருவரைக் காப்பாற்றுதல்[தொகு]

அர்த்தபான் மேற்கொண்ட நெடிய பயணம் ஆபத்துகள் பல நிறைந்தது. தன்னந்தனியே பாலைவனத்திலும் காட்டுப் பகுதிகளிலும் குதிரையில் செல்வது எளிதல்ல. பயணியர் கூட்டமாகச் செல்லும்போது ஒருவர் ஒருவருக்குத் துணையாக இருக்க முடியும். உணவுப் பொருள்களைத் தமக்குள்ளே பகிர்ந்துகொண்டும், கள்வர் கூட்டத்திலிருந்தும் காட்டுவிலங்குகளிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்ளவும் இயலும்.

அர்த்தபான் தமக்கு முன் பயணம் செய்து, இயேசுவைச் சந்திக்கச் சென்ற மூன்று ஞானிகளையும் விரைந்து சென்று பிடித்துவிடத்தான் எண்ணினார். ஆனால் வழியில் அவருடைய குதிரை ஓரிடத்தில் திடீரென்று நிற்கிறது. அங்கே தரையில் ஒரு மனிதர் குற்றுயிராய்க் கிடக்கின்றார். குதிரையினின்று கீழே இறங்கிய அர்த்தபான் அந்த மனிதரின் கையைப் பிடித்துப் பார்க்கின்றார். அசைவு ஒன்றும் இல்லை. அம்மனிதர் இறந்துவிட்டார் என்று எண்ணுகிறார் அர்த்தபான். அவ்வாறு பாலைவனத்தில் இறந்துவிட்டால் கழுகுகளும் காட்டுவிலங்குகளும் ஓரிரு மணிகளில் அம்மனிதரின் உடலை அப்படியே பிய்த்துத் தின்றுபோடும்.

தரையில் கிடந்த அம்மனிதருக்கும் அதே கதிதான் என்று எண்ணும்போது அர்த்தபானுக்கு மனது கலங்குகிறது. ஆனால் என்ன ஆச்சரியம், திடீரென்று அம்மனிதரின் கையில் ஓர் அசைவு தெரிகிறது. ஆம், அம்மனிதர் இறக்கவில்லை. உடனே அம்மனிதரைத் தூக்கிச் சென்று அவருக்குத் தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஒரு மருந்தின் சில துளிகளைக் கொடுக்கிறார். படிப்படியாக அம்மனிதருக்கு உயிர் திரும்புகிறது. தன் உயிரைக் காப்பாற்றிய நல்ல மனிதராகிய அர்த்தபானுக்கு என்ன கைம்மாறு செய்வது என்று எண்ணிய அம்மனிதர் அர்த்தபானின் பயணத்தின் நோக்கம் யாதென்று கேட்கிறார். “நான் எருசலேம் சென்று, அங்கே பிறந்திருக்கின்ற யூதர்களின் அரசரான ஒருவரைச் சந்திக்கப் போகிறேன்” என்று அர்த்தபான் கூறியதும், யூதரான அந்த மனிதர், “எங்கள் சமய நூல்களில் கூறப்பட்டிருப்பது இதுவே: மீட்பர் ஒருவர் எருசலேமில் அல்ல மாறாக பெத்லகேமில் பிறப்பார்.”

இதைக் கேட்ட அர்த்தபான், எப்படியாவது விரைந்துசென்று மூன்று ஞானியரோடு சேர்ந்துவிட வேண்டும் என்று பயணத்தைத் தொடர்கிறார். வழியில் ஓரிடத்தில் ஓய்வுகொள்கையில் ஒரு கல்லின் கீழ் ஒரு சுவடி இருப்பதைக் காண்கிறார். அதை விட்டுச் சென்றவர்கள் மூன்று ஞானியரே என்பதை உணர்ந்துகொள்கிறார். தாங்கள் தொடர்ந்து பயணம் செய்வதாகவும் மிக விரைந்து வந்தால் ஒழிய அர்த்தபான் தங்களை வந்து அடைவது கடினம் என்றும் அச்சுவடியில் எழுதியிருந்தனர் அந்த மூன்று ஞானியர்.

குற்றுயிராய்க் கிடந்த ஒரு மனிதருக்கு உதவிசெய்யப் போய் தன்னுடைய பயணம் தாமதமானது பற்றி அர்த்தபானுக்கு வருத்தம்தான் என்றாலும் துணிந்து பயணத்தைத் தொடர்கிறார்.

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுதல்[தொகு]

பயணியர் கூட்டத்தைத் தவறவிட்ட பிறகு, தனியே காட்டுவழி செல்வதற்கு ஒரு குதிரை மட்டும் போதாது என்று உணர்கிறார் அர்த்தபான். தான் கொண்டுசெல்கின்ற விலையுயர்ந்த பரிசுப் பொருள்களில் ஒன்றை விற்றாலொழிய பயணத்திற்குத் தேவையான ஒட்டகங்களையும் உணவுப் பொருள்களையும் வாங்கமுடியாது. எனவே, அர்த்தபான் தம்மிடம் இருந்து விலையுயர்ந்த மூன்று பரிசுப்பொருள்களுள் ஒன்றாகிய நீலக்கல்லை விற்று, பயணத்திற்குத் தேவையான ஒட்டகங்களையும் உணவுப் பொருள்களையும் வாங்கிக்கொள்கிறார்.

பல இன்னல்களுக்குப் பிறகு அர்த்தபான் பெத்லகேம் வந்து அடைகிறார். ஆனால் அதற்கு முன்னரே இயேசு குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவருடைய தாய் மரியாவும் தந்தை சூசையும் எகிப்து நாட்டுக்கு ஓடிப் போயிருந்தார்கள். குழந்தையைக் கொல்வதற்கு ஏரோது அரசன் திட்டமிட்டிருந்ததால் அக்குழந்தையைக் காப்பாற்ற வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை.

இயேசுவைக் கொல்ல நினைத்திருந்த எரோது பெத்லகேம் பகுதியில் இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்றுபோட போர்வீரர்களை அனுப்பியிருந்தான். வீரர்களும் வீடு வீடாகச் சென்று ஆண் குழந்தைகளின் உயிரைச் சூறையாடத் தொடங்கினர். அப்போது அர்த்தபான் ஒரு வீட்டருகே வரும்போது அங்கே ஓர் இளம் பெண் தன்னுடைய ஆண்குழந்தையை மார்போடு அணைத்துப் பிடித்தவாறே உரத்த குரலில் அழுதுகொண்டிருப்பதைக் காண்கிறார். அவருக்கு இரக்கம் ஏற்படுகிறது. ஏரோதுவின் ஆணையின்படி ஆண்குழந்தைகள் கொல்லப்படுவதையும், தன் குழந்தையும் விரைவில் உயிரிழக்கப் போவது பற்றியும் அப்பெண் கூறக் கேட்டதும் அர்த்தபான் வீட்டு வாசலில் நின்றுகொள்கிறார். வீரர்களின் தலைவன் அவரை அணுகி வீட்டினுள் யார் இருக்கிறார்கள் என்று கேட்க, அவர் ஒருவருமில்லை என்று பதில் கூறுகிறார். பொய்சொல்லியாவது ஒரு மாசற்ற குழந்தையின் உயிரைக் காப்பாற்றிட எண்ணிய அவருக்கு இன்னொரு சிந்தனையும் வந்தது. வீரர் தலைவனுக்கு ஒரு விலையுயர்ந்த பொருளைக் கொடுத்துவிட்டால் அவன் வீட்டிற்குள் நுழையாமல் சென்றுவிடுவான் என்று அவர் கணிக்கிறார். அவ்வாறே தம்மிடம் இருந்த மாணிக்கக் கல்லைக் கொடுத்துவிடுகிறார்.

மூன்று விலையுயர்ந்த பொருள்களில் இரண்டினை இழந்துவிட்ட அர்த்தபான் எஞ்சியிருந்த ஒரு பரிசுப் பொருளையாவது யூதர்களின் அரசருக்குக் கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார்.

ஓர் இளம் பெண்ணைக் காப்பாற்றுதல்[தொகு]

பின்னர் அர்த்தபான் இயேசுவைத் தேடி எகிப்து நாட்டுக்கும் வேறு பல நாடுகளுக்கும் இடங்களுக்கும் செல்கிறார். எகிப்துக்குத் தப்பியோடிய இயேசுவையும் அவருடைய குடும்பத்தையும் அவர் காணவில்லை. பல ஆண்டுகள் கடந்துவிட்டன. சென்ற இடங்களில் எல்லாம் அர்த்தபான் ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்கின்றார்.

முப்பத்திமூன்று ஆண்டுகள் பயணத்திற்குப் பின் அர்த்தபான் மீண்டும் ஒருமுறை எருசலேம் நகருக்கு வருகிறார். அங்கே இயேசு சிலுவையில் அறையப்படும் செய்தி அவருடைய காதுகளை எட்டுகிறது. இயேசு என்ற ஒருவர் மக்களுக்கு நன்மை செய்துகொண்டே போனார் என்றும், அவர் தம்மைக் கடவுளின் மகன் என்று அறிவித்தார் என்றும், பிலாத்து என்ற உரோமை அதிகாரி இயேசுவை நோக்கி “நீ யூதர்களின் அரசரா?” என்று கேட்க இயேசு, “நீர் அப்படிச் சொல்கிறீர்” என்று பதில் இறுத்ததாகவும் அறிகிறார்.

யூதர்களின் அரசரைத் தேடி பல்லாண்டுகள் பயணியாக வழிநடந்த அர்த்தபான் உள்ளத்தில், “இவர்தான் தாம் தேடிவந்த இயேசுவாக இருக்க முடியுமோ” என்ற கேள்வி எழுகிறது. இயேசுவுக்குப் பரிசாகக் கொடுக்க அர்த்தபான் கொண்டுவந்த மூன்று மதிப்புமிக்க பொருள்களில் இரண்டு ஏற்கெனவே பிறருக்கு உதவி செய்வதெற்கென்று போய்விட்ட நிலையில் விலையுயர்ந்த முத்து ஒன்றே அவரிடம் எஞ்சியது.

அர்த்தபானும் வயது முதிர்ந்த நிலை அடைந்துவிட்டார். இனிமேல் தாம் இயேசுவைக் காணாமலே இறக்க வேண்டியது தான் என்று அவர் எண்ண ஆரம்பித்தார். அப்போதுதான் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. ஓர் இளம் பெண்ணைச் சில போர்வீரர்கள் இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்பெண்ணின் தந்தை கொடுக்க வேண்டிய கடன் பணத்தைக் கொடுக்காவிட்டால் அப்பெண்ணை அடிமையாக விற்று அப்பணத்தைப் பெறுவதெற்கென்று அவர்கள் துணிந்திருந்தனர்.

அர்த்தபானைக் கண்ட அப்பெண் தன்னை இழுத்துச்சென்ற வீரர்களின் கைகளிலிருந்து தப்பி அர்த்தப்பானை நோக்கி ஓடிவந்து, அவருடைய காலடிகளில் விழுந்து, தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கேட்கிறார்.

அர்த்தபானின் உள்ளத்தில் மீண்டும் ஒருமுறை ஒரு பயங்கர போராட்டம் எழுகிறது. கடவுளைத் தேடிச் சென்று அவரை வழிபடுவதா அல்லது ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதா? ஏற்கெனவே இரண்டு முறை அவர் இந்தப் போராட்டத்தைச் சந்தித்துவிட்டிருந்தார். கடவுளுக்கென்று எடுத்துச் சென்ற கருவூலங்களை அவர் பிறருக்கு உதவிசெய்யும் பொருட்டு இருமுறை ஏற்கெனவே செலவழித்திருந்தார். இங்கே, மீண்டும் ஒருமுறை, தன்னிடம் இருந்த ஒரே கருவூலமாகிய விலையுயர்ந்த முத்தை அந்த ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்து, அவளை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதா, அந்த முத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய திருப்பயணத்தைத் தொடர்வதா என்று அவர் முடிவுசெய்ய வேண்டியிருந்தது.

அர்த்தபான் ஒரு முடிவுக்கு வந்தார். யூதர்களின் அரசருக்கு, கடவுளுக்கு அவர் எடுத்துவந்த விலையுயர்ந்த முத்தை அவர் இந்த ஏழைப் பெண்ணின் விடுதலைக்காகக் கொடுத்துவிடப் போகிறார். அப்போது கட்டடம் திடீரென்று இடிந்துவிழவே, அவர்மீது ஒரு பெரிய கல்லும் விழுந்தது. உயிர்துறக்கும் நிலையில் இருந்த அர்த்தபானுக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது.

அர்த்தபானின் திருப்பயணம் முடிவுறல்[தொகு]

இறக்கும் தறுவாயில் இருந்த அர்த்தபான் ஒரு காட்சி காண்கிறார். அப்போது அவருடைய உதடுகளிலிருந்து மெதுவாக வெளிவந்த சொற்கள்: “இல்லை, ஆண்டவரே. நீர் எப்போது பசியுற்றிருக்க நான் உமக்கு உண்ணக் கொடுத்தேன்? நீர் எப்போது தாகமாயிருக்க நான் உமக்குக் குடிக்கக் கொடுத்தேன்? நீர் எப்போது அன்னியனாயிருக்க நான் உம்மை என் வீட்டில் வரவேற்றேன்? நீர் எப்போது ஆடையின்றி இருக்க நான் உமக்கு ஆடை கொடுத்தேன்? நீர் எப்போது நோயுற்றோ சிறையிலோ இருக்க நான் உம்மைச் சந்திக்க வந்தேன்? முப்பத்திமூன்று ஆண்டுகளாக நான் உம்மைத் தேடி அலைந்தேனே. நான் உமது முகத்தை ஒருமுறை கூட கண்டதில்லையே. உமக்கு நான் ஒருமுறைகூட பணிபுரிந்ததில்லையே.”

அர்த்தபானின் உயிர் பிரிகின்ற நேரம் வந்துவிட்டது. அப்போது ஒரு மெல்லிய குரல் அவருடைய இதயத்தில் ஒலித்தது: “ஏழை எளிய என் சகோதரர் சகோதரிகளுக்கு நீ செய்ததை எனக்கே செய்தாய், அர்த்தபான்!” (மத்தேயு 25:40).

அர்த்தபானின் முகத்தில் அமைதி தவழ்ந்தது. உயர்ந்தோங்கிய மலையின் உச்சியில் படிந்திருந்த பனிக்குவியலிலிருந்து பரவி வந்த ஒளிக்கீற்றுப் போன்று அவருடைய முகம் ஒளிவீசியது. இறுதி மூச்சு அவரை விட்டுப் பிரிந்தது.

அர்த்தபானின் பயணம் நிறைவுற்றது. நான்காம் ஞானி தான் தேடிச் சென்ற அரசரைக் கண்டுகொண்டார். அவர் கொண்டுவந்த விலைமிக்க பரிசுப் பொருள்களை அரசரும் ஏற்றுக்கொண்டார்.[5]

நான்காம் ஞானி கதையின் பிற வடிவங்கள்[தொகு]

 • நான்காம் ஞானி கதை நாடக வடிவில் பலமுறை வெளிவந்தது: ஆசிரியர்: பவுலீன் பெல்ப்சு (Pauline Phelps) 1951,[6]ஹேரல்ட் கே. ஸ்லிகெர் (Harold K. Sliker), 1952இல்;[7]எவரெட் ராட்ஃபோர்ட் (Everett Radford) 1956இல்;[8] எம். பெர்சி க்ரோசியெர் (M. Percy Crozier), மார்கரட் ப்ரூஸ் (Margaret Bruce) 1963இல்.[9]மேலும் பலர்.
 • தொலைக்காட்சியில் 1953இல், அர்த்தபானாக வெசுலி ஆடி (Wesley Addy) என்பவர் நடித்தார்.[10]தொலைக்காட்சியில் ரிச்சர்டு கைலி என்பவர் அர்த்தபானாக நடித்த நாடகக் கதை 1957இல் வெளியானது.[11] and on G.E. True Theater in 1960 (starry Harry Townes).[12]73 நிமிடத் தொலைக்காட்சித் திரைப்படம்; இதில் மார்ட்டின் ஷீன் (Martin Sheen) நடித்தார் (மார்ச்சு 30, 1985)[13]
 • சூசன் ஹல்ச்மன் பிங்ஹம் (Susan Hulsman Bingham) என்பவர் “நான்காம் ஞானியின் கதை” அடிப்படையில் எழுதிய வழிபாட்டு இசை நாடகம் 2000த்தில் முதன்முறையாக அரங்கேறியது.[14]
 • எம். ரயன் டெய்லர் (M. Ryan Taylor) அர்த்தபான் கதையைத் தழுவி எழுவிய அரங்கிசை 2006ஆம் ஆண்டில் அரங்கேறியது.[15]
 • 2010இல் அரங்கேறிய மற்றொரு நாடக இசை டாம்யன் ரக்கோன்யாக், டேவிட் வைஸ்கார்ட் என்பவர்களால் எழுதப்பட்டது.[16]
 • குழந்தைகளுக்கான எளிய வடிவத்தை எழுதியவர் ராபர்ட் பாரெட். அந்த அர்த்தபான் நாடகம் 2007இல் அரங்கேறியது.[17]
 • கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையில் அர்த்தபானின் படத்தை வரைந்துகொடுத்தவர் இசுக்கொட்லாந்து நாட்டுக் கலைஞர் பீட்டர் ஹௌசன் (Peter Howson) என்பவர். அதைத் தமது சொந்த வாழ்த்து அட்டையாக இசுக்கொட்லாந்து தலைமை அமைச்சர் அலெக்சு சால்மண்ட் (Alex Salmond) என்பவர் 2013 கிறிஸ்மஸ் விழாவின்போது பயன்படுத்தினார்.[18]

மதிப்பீடுகள்[தொகு]

 • ஹென்றி வான் டைக் (Henry Van Dyke):

"இந்தச் சிறு கதை எங்கிருந்து வந்ததோ, யானறியேன். ஒருவேளை வானிலிருந்து மாயமாக வந்ததோ. ஒன்றுமட்டும் உறுதி, இக்கதை வேறு எந்த நூலிலும் எழுதப்பட்டிருக்கவில்லை. கீழை நாடுகளின் மரபுக் கதையாக இது இருந்ததாகவும் தெரியவில்லை. அப்படியிருந்தும், இக்கதையை நானே கற்பனை செய்து உருவாக்கியதாக எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. உண்மையிலேயே இக்கதை எனக்கு ஒரு கொடையாக அளிக்கப்பட்டதே. அக்கொடையை எனக்கு அளித்த வள்ளல் யார் என்பதும் எனக்குத் தெரியும் என்று உணர்கிறேன்."[3]

 • ஹார்ப்பர் வெளியீட்டக மாத இதழ் (Harper's New Monthly Magazine):

"உண்மையான மனிதப் பண்பு இக்கதையில் வெளிப்படுகிறது. கிறிஸ்மஸ் விழாவின் பொருள் இதில் துலங்குகிறது. அவ்விழாவின்போது வழங்கப்படுகின்ற பரிசுகளுள் இதுவும் இடம் பெற வேண்டும்."[19]

 • ஜோ எல். வீலர் (Joe L. Wheeler):

"வான் டைக் எழுதிய இந்தக் கதை எளிமையும் அழகும் வாய்ந்தது. இயேசுவின் காலத்து உலகம் எவ்வாறு இருந்தது என்பதை இக்கதையின் பின்னணி விவரிப்புகள் எழிலுற எடுத்துக்காட்டுகின்றன. இக்கதையின் பின்னால் ஆழ்ந்த ஆய்வு உள்ளது.[20]

குறிப்புகள்[தொகு]

 1. Van Dyke, Henry (1896). The Story of the Other Wise Man. New York: Harper & Brothers Publishers. http://www.gutenberg.org/files/19608/19608-h/19608-h.htm. 
 2. “The Story of the Other Wise Man” Rare Antique Religious Book c.1895 / Author: Henry Van Dyke (Religious Books) at InSpirit Antiques[தொடர்பிழந்த இணைப்பு]
 3. 3.0 3.1 Van Dyke, Henry (1996). The Story of the Other Wise Man: 100th anniversary edition. Ballantine Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0345406958. http://www.amazon.com/Story-Other-Wise-Henry-Dyke/dp/0345406958. 
 4. Matthew 2: 1-12, King James version, biblegateway.com
 5. "Matthew 25:40". King James Version. Bible Gateway. 9 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. Phelps, Pauline (1951). The Other Wise Man: A Play in One Act. Wetmore Declamation Bureau. http://books.google.com/books?id=M_jkHAAACAAJ&dq=%22the+other+wise+man%22&hl=en&sa=X&ei=C-7cT8-qOYug8gSo07DfCg&ved=0CFIQ6AEwAw. 
 7. Sliker, Harold G. (1952). The Other Wise Man: A Dramatization of Henry Van Dyke's Short Story. Row, Peterson, and Company. http://books.google.com/books?id=CWvKO_akNYEC&printsec=frontcover&dq=%22the+other+wise+man%22&hl=en&sa=X&ei=C-7cT8-qOYug8gSo07DfCg&ved=0CEYQ6AEwAQ#v=onepage&q=%22the%20other%20wise%20man%22&f=false. 
 8. Radford, Everett G. (1956). The Other Wise Man: Pageant Play in Five Scenes. Theatre House. http://books.google.com/books?id=dleoHwAACAAJ&dq=%22the+other+wise+man%22&hl=en&sa=X&ei=C-7cT8-qOYug8gSo07DfCg&ved=0CF8Q6AEwBg. 
 9. Crozier, M. Percy; Bruce, Margaret (1963). The Other Wise Man: A Christmas Play in One Act. Oliver and Boyd. 
 10. "The Other Wise Man (1953)". IMDB. http://www.imdb.com/title/tt0595403/. பார்த்த நாள்: 16 June 2012. 
 11. "The Other Wise Man". Kraft Theatre. IMDB. December 25, 1957. 16 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 12. "The Other Wise Man". G.E. True Theater. IMDB. December 25, 1960. 16 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 13. "The Fourth Wise Man". syndicated TV feature-length movie. March 30, 1985.
 14. Bingham, Susan Hulsman (2000). "Liturgical opera: The Other Wise Man". Children's and Liturgical Opera Company, LLC. 28 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 15. Taylor, M. Ryan (December 23, 2006). "The Other Wise Man". 19 ஜூலை 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 16. "The Other Wise Man". Opera America. 7 மே 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
 17. Van Dyke, Henry; Barrett, Robert (October 1, 2007). The Other Wise Man. Ideals Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0824955656. http://books.google.com/books?id=F2hEPgAACAAJ&dq=%22the+other+wise+man%22&hl=en&sa=X&ei=C-7cT8-qOYug8gSo07DfCg&ved=0CEwQ6AEwAg. 
 18. "Peter Howson art features on Alex Salmond's Christmas card". BBC News. December 4, 2013. http://www.bbc.co.uk/news/uk-scotland-scotland-politics-25215881. பார்த்த நாள்: 5 December 2013. 
 19. Alden, Henry Mills (December 1895 – May 1896). "Literary Notes". Harper's New Monthly Magazine 92 (1): 3. http://books.google.com/books?id=joUAAAAAYAAJ&pg=PA979&dq=%22the+other+wise+man%22&hl=en&sa=X&ei=wvPcT6PREKiK6QHlydijCw&ved=0CGYQ6AEwBzgU#v=onepage&q=%22the%20other%20wise%20man%22&f=false. 
 20. Wheeler, Joe L. (2007). Christmas in My Heart. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0828020299. 

வெளி இணைப்புகள்[தொகு]

குட்டன்பர்க் திட்டத்தில் (Project Gutenberg) “நான்காம் ஞானியின் கதை” பாடம் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.