நவிரம் (மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நவிரமலை சங்க கால இலக்கியத்தினுள் சுட்டப்பட்டுள்ள மலைகளில் ஒன்று. வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர், 'பல்குன்றக் கோட்டம்' என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசனாவான். இவனது மலையாகவே நவிர மலையை, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்ற புலவர் 'மலைபடுகடாம்' என்ற இலக்கியத்துள் காட்டியிருக்கின்றார்.


வள்ளலாகிய நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், வழியில் கண்ட தன்னையொத்த வறுமை நிலையில் இருந்த கூத்தனுக்கு நன்னன் நாட்டு இயல்பையும், மலை வளத்தையும், நன்னனின் கொடை வளத்தையும் சொல்வதாக இந்நூலைப் பெருங்கௌசிகனார் பாடியுள்ளார். அதில் நவிர மலை பற்றிக் கீழ்வருமாறு பாடியுள்ளார்.

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரி உண்டிக் கடவுள தியற்கையும் (மலை.81-84) எனவும்,

கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென (மலை,579)

எனவும் நவிரமலை மலைபடுகடாம் நூலில் பாடப்பட்டுள்ளது.


இன்று, இந்த நவிர மலை எனக் குறிப்பிடப்பட்டநன்னனின் மலை பர்வத மலை,திரிசூலகிரி (கிரி - மலை) என்று அழைக்கப்படுகிறது.


நவிரமலை என்ற பருவதமலையைப் போளூர் -செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்)சாலையில் உள்ள தென்மாதிமங்கலம் என்னும் ஊரில் இறங்கி அடையலாம். தென்மாதி மங்கலத்தை அடைய போளூரிலிருந்தும் (18. கி.மீ) செங்கத்திலிருந்தும் (32.கி.மீ) பேருந்துகள் நிறைய உள்ளன. திருவண்ணாமலையிலிருந்து (34 கி.மீ) மேல் சோழங்குப்பம் அல்லது வீரளூர் செல்லும் பேருந்துகளில் ஏறி அடையலாம்.

ஜவ்வாது மலையில் உள்ள  புதூர்நாட்டில் சங்ககாலப் பெயரான "நவிரமலை' எனும் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு  கண்டெடுக்கப்பட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  • மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை
  • முனைவர் இளங்கோவின் 'சங்ககால நவிர மலை'
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவிரம்_(மலை)&oldid=3175392" இருந்து மீள்விக்கப்பட்டது