நரம்புசார் உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரம்புசார் உளவியல் (Neuropsychology) மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணமாகின்றன, அவை எவ்வாறு சிந்தனைத்திறன், உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பனவற்றை உட்பொருளாகக் கொண்ட உளவியலின் கிளைத்துறை ஆகும்

நரம்புசார் உளவியலாளர்கள் மருத்துவமனைகளில் நரம்பியல் நோய் காரணமாக உளவியல் பூர்வமான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாக அதிகம் இருந்தாலும், வேறு சிலர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் எவ்வாறு நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பவர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.[1]

இந்தத் துறை நரம்பியலுடனும், மன நல மருத்துவத்துடனும் அதிகத் தொடர்பு கொண்டது.

வரலாறு:[தொகு]

நரம்புசார் உளவியல் என்ற துறை மிகவும் புதிய துறை என்றாலும் இதன் வரலாறு கி.மு 3500வில் எகிப்தின் இம்போடெப் என்ற பெயர் கொண்ட முன்னோடி மருத்துவர் எழுத்துக்களில் தொடங்குகிறது.[2] இந்தப் பகுதியில் நரம்புசார் உளவியலின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்த சில முன்னோடிகள் பற்றிப் பார்க்க இருக்கிறோம்

இம்போடெப்[தொகு]

இம்போடெப் அவர்கள் மூளை பற்றியும், அது எவ்வாறு உடலின் மற்ற பாகங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் அறிவியல் பூர்வமான கருத்துக்களைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார்.[2] அவர் காலத்தில் எகிப்து நாட்டில், மூளை என்பது அவ்வளவு முக்கியமான உறுப்பாகக் கருதப்படவில்லை. இதயத்தையே ஆன்மா உறைந்திருக்கும் இடமாகக் கருதினர்.

இப்போக்கிரட்டீசு[தொகு]

கிரேக்கநாட்டிலும் மூளையே ஆன்மா உறைந்திருக்கும் இடமாகக் கருதினர் என்றாலும், கிரேக்கத்தை சார்ந்த இப்போக்கிரட்டீசு மூளையை ஒரு முக்கிய உறுப்பாகக் கருதி, மனிதன் மீது மிகப்பெரிய அதிகாரம் கொண்டது மூளை என்று கூறியிருக்கிறார்.[3] மனம் என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியது ஹிப்போகிரேட்டஸ் என்றாலும், மனம் என்று தனியாக ஓர் உறுப்புக் கிடையாது, மனம் என்பது மூளையின் செயல்பாடுகளே என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவரும் ஆன்மா என்ற கருத்தாக்கத்தையே நம்பினார்; எனினும் அந்தக் காலகட்டத்தில் மூளையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசியது, அவருக்குப் பின்னர் வந்தவர்களை மூளையின் செயல்பாடுகளைப் பற்றி ஆராய வைத்தது.

ரெனே டேக்கார்ட்[தொகு]

ரெனே டேக்கார்ட் என்ற தத்துவியலாளர் மனம்-உடல் பற்றிய தத்துவங்களுக்கு அதிகம் பெயர்போனவர். அவர் இப்போகிரட்டீசுவின் கருத்துக்களை விரிவுபடுத்தி, தலைப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை ஆன்மா இருக்கும் இடமாகக் கருதினார். அவரும் ஆன்மீகத்தின் அடிப்படையில் ஆன்மா என்ற கருத்தாக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார். மனமும், உடலும் சந்திக்கும் இடமாகப் பீனியல் சுரப்பியை குறிப்பிட்டார். மனம் உடலை கட்டுப்படுத்துவதாகவும், அதேபோல் உடலால் மனதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பினார். உடலிடம் மனதை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்ற கருத்து அப்போது பல உடற்செயலிலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அதுவே பின்னர் உடல் பகுதியான மூளை எவ்வாறு மனதை கட்டுப்படுத்துகிறது என்று பலரை சிந்திக்கவைத்து, வெவ்வேறு வகைகளில் மூளையின் செயல்பாடுகள் பற்றிய கொள்கைகளை அறிமுகப்படுத்த வைத்தது என்று கூறலாம்.

தாமஸ் வில்லிசு[தொகு]

17-ம் நூற்றாண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த தாமஸ் வில்லிஸ், மூளைக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பை அறிய உடலியல் பூர்வமான (Physiological) அணுகுமுறையை கையாண்டார்¢. மூளைக்கு இரத்தம் அளிக்கும் இரத்த குழாய்களை அவர் கண்டுபிடிக்க, அந்த இரத்த குழாய்கள் வில்லிஸ்-ன் சர்க்கிள் (Willis’ Circle) என்று அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மூளையின் அமைப்பினை ஆழமாக ஆராய்ந்து அவர் தந்த கொள்கை இன்று வழக்கற்று போனாலும், மூளையை அவர் ஆராய்ந்த விதம் அவருக்குப் பின்னால் வந்த ஆய்வாளர்களுக்கு மூளையைப் பற்றி முறையாய் புரிந்துகொள்ளவும், நரம்புசார் உளவியல் என்ற துறை உருவாகவும் வழிகாட்டியது.

பிரான்ஸ் ஜோசப் கால்[தொகு]

இவர் ஆளுமை என்பது மூளையின் அம்சங்களுடனும், அமைப்புடனும் தொடர்பு கொண்டது என்றும், முக்கியமாக மண்டையோட்டின் வடிவம் ஒருவரின் நுண்ணறிவுத்திறனையும், ஆளுமையையும் நிர்ணயிக்கிறது என்றும் நம்பினார். இவரின் கொள்கைகள், அறிவியல் பூர்வமாக நிருபிக்கபடாததால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகின. எனினும் ஆளுமையை நிர்ணயிக்கும் வகையில் மூளையில் 27 பகுதிகள் இருப்பதாகவும், ஒவ்வொரு பகுதியுடனும், ஒவ்வொரு நடத்தை சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இவர் அளித்த கருத்துக்கள் நரம்புசார் உளவியல் உருவாக ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

ஜீன் பாப்டைஸ்ட் பௌல்லாட்[தொகு]

கால் அவர்கள் அளித்த கொள்கைகளின் அடிப்படையில், 19ம் நூற்றாண்டில் ஜீன் பாப்டைஸ்ட் பௌல்லாட் ((Jean Baptiste Bouillaud) என்ற மருத்துவர் ஆராய்ச்சிகள் செய்து பெருமூளை பகுதி, தனிப்பட்ட செயல்பாடுகள் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். பேச்சு என்ற நடத்தை எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ந்த அவர் மூளையின் முன்புற பகுதியே அதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். ஒருவருக்கு மூளையின் முன்புற பகுதியில் காயம் ஏற்படும்போது, அவர் வார்த்தைகளை உருவாக்கும் திறனையும், அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறனையும் இழப்பதால் பேச முடியாமல் போவார் என்ற கருத்தை கூறினார். இவரின் கருத்துக்கள் மூலம் மூளையின் எந்ததெந்த பகுதிகள், எந்தெந்த நடத்தையுடன் தொடர்புகொண்டவை என்பதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடங்கின.

பால் புரோக்கா[தொகு]

பௌல்லாட்-ன் கருத்துக்களால் உந்தப்பட்ட ப்ரோகா என்பவர் பேச்சு எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தார். மூளைக்காயத்தால் பேசமுடியாமல் போனவர்களின் இறப்பிற்குப் பிறகு அவர்களது உடல்களைப் பிரேத பரிசோதனை செய்து, அவர்கள் பேச முடியாமல் போனதற்கு, பெருமூளையின் இடது புற முன்மடலின் (Frontal Lobe) ஒரு குறிப்பிட இடத்தில் ஏற்படும் சிதைவே காரணம் என்று கண்டறிந்தார். இவரின் கண்டுபிடிப்புக்கு பிறகு, பேச்சின் மையமான அந்தக் குறிப்பிட்ட இடம் ப்ரோகா பகுதி (Broca’s Area) என்று அழைக்கப்படுகிறது. இவரின் ஆய்வுகளின் மூலம் மூளை என்பது நுண்ணியச் செயல்பாடுகளைச் செய்யும் சிக்கலான உறுப்பு என்று புரிந்துகொள்ளப்பட்டது. இவரே மூளைக்கும், நடத்தைக்கும் உள்ள தொடர்பினை, இவருக்கு முன்னர் இருந்தவர்களை விட மிகவும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தவர் என அறியப்படுகிறார்.

கார்ல் ஸ்பென்சர் லாசுலி[தொகு]

இவர் 'என்கிராம்' (Engram) என்ற கொள்கையின் மூலம் நினைவாற்றல் மூளையில் உயிரி வேதிப் பொருளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படுகிறது என்று கூறினார். அதனை நிரூபிக்க எலிகளுக்குக் கற்றலை நிகழவைத்து பின்னர் மூளையில் அவர் குறிப்பிட்ட பகுதிகளை நீக்கி, கற்றவற்றை அவை மறந்துவிட்டனவா என ஆராய்ந்து பார்த்த போது, அவை கற்றவற்றை மறக்கவில்லை. இதனால் அவரின் கொள்கையை அவரே மாற்றிக்கொண்டார். இது ஏன் இவ்வாறு நடந்தது என்று ஆராய்ந்த போது, கற்றலில் பல்வேறு மூளைப்பகுதிகள் ஈடுபட்டு இருப்பதனால், ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் நீக்கினால், அவை கற்றவற்றை மறக்காது என்று மூளையின் பெரிய பகுதிகளை நீக்கினால் அவை அவற்றை மறக்கின்றன என்றும் கண்டறிந்தார். அதே போல், மூளையின் ஒரு குறிப்பிட்ட இடத்தை நீக்கிவிட்டாலும் கூட, அவற்றைச் சார்ந்த இடங்கள் நீக்கிவிட்ட இடத்தின் வேலைகளைச் செய்து கொள்கின்றன என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

கார்பினியன் பிராட்மேன்[தொகு]

ஜெர்மன் நரம்பியலாளரான இவர், பெருமூளை புறணியில் உள்ள நியூரான்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பதை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து, பெருமூளை புறணியின் நியூரான்களின் ஒழுங்கமைப்பை 52 பரப்புகளாகப் பிரித்தார். இந்த 52 பரப்புகளும் எந்ததெந்த நடத்தைகளுக்குப் பொறுப்பாக உள்ளன என்ற கொள்கையை வெளியிட்டார். இன்று அவர் தந்த கொள்கைகள் நடப்பில் இல்லாவிட்டாலும் கூட, எந்தெந்த நடத்தைகள் நரம்பு மண்டலத்தின் எந்தெந்த பகுதிகளோடு தொடர்பு கொண்டுள்ளன என்று ஆய்வு செய்யப் பெரிதும் உறுதுணையாய் இருந்தது பிராட்மேனின் 52 பரப்புகள் கொள்கைதான்.

டொனால்ட் ஓல்டிங் ஹெப்[தொகு]

இவரே நரம்புசார் உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வேறு பல கொள்கைகள் நிரூபணம் ஆகாத நிலையில், இவரின் ஹெப்பியன் கொள்கை மூளையின் செயல்பாடுகளை மற்ற கொள்கைகளை விடச் சிறப்பாக விளக்கியது.

ஹெப்பியன் கொள்கையின் சாராம்சம்: நியூரான் 'ஏ'-வின் ஆக்சான், நியூரான் 'பி'-ஐ தூண்டும் அளவுக்கு மிக அருகில் இருந்து, அதனைத் தொடர்ந்து தூண்டி விட்டுக்கொண்டே இருந்தால், அந்த இரு நியூரான்களிலோ அல்லது ஒரு நியூரானிலோ மாற்றங்கள் ஏற்பட்டு அதன் திறன் அதிகரிக்கிறது. இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்த நியூரான்கள், செல் அஸெம்பிளிஸ் (Cell Assermblies) என்று அழைக்கப்படுகின்றன. நியூரான்களுக்கு இடையே உள்ள இணைப்புகள் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பவை.

அயனிகள் அடிப்படையில் நரம்பு இணைப்புப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன என்று இன்று நிருபிக்கபப்பட்டுள்ள மூளை செயல்பாட்டுக்கொள்கைகளுக்கு ஹெப் அவர்களின் கொள்கைகளே அடிப்படையாகும்.

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தாண்டி பல்வேறு ஆய்வாளர்களும் நரம்புசார் உளவியலின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள். இன்று தொழில் நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஸ்கேன் போன்ற அதி நவீன கருவிகளின் மூலம் நரம்புசார் உளவியல் ஓர் உச்சத்தைத் தொட்டு மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

நரம்புசார் உளவியல் முறைகள்[தொகு]

நரம்புசார் உளவியலில் நரம்பு மண்டலத்திற்கும், நடத்தைக்கும் இருக்கும் தொடர்பை அறிய பயன்படுத்தப்படும் முறைகளை இங்குக் காண இருக்கிறோம்.

நரம்புசார் உளவியல் கருவிகள்[தொகு]

இன்று எந்தெந்த நடத்தைகள் எந்தெந்த நரம்பு மண்டலத்தின் பகுதியுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விட்டதன் காரணமாக, உளவியல் சோதனைகளை நிகழ்த்தி, அவற்றின் முடிவுகளை வைத்து நரம்பு மண்டலத்தின் எந்தப் பகுதிகள் நோயினாலோ அல்லது காயத்தினாலோ பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறிய முடிகிறது. இவ்வாறு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் உளவியல் கருவிகள் நரம்புசார் உளவியல் கருவிகள் (Neuropsychological Tools) என்று அழைக்கப்படுகின்றன.

வெஷ்லர் நுண்ணறிவுத்திறன் (Weshler’s Intelligence) உளவியல் கருவி, நினைவுத்திறனை அறிய உதவும் பல்வேறு உளவியல் கருவிகள், மொழித்திறன், திட்டமிடுதல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற சிந்தனைத்திறன் சம்பந்தப்பட்டவற்றை அளவிடும் கருவிகள் அனைத்தும் நரம்புசார் உளவியல் கருவிகளே!

மூளை மேவல்[தொகு]

சி.டி. (Computed-axial Tomography) ஸ்கேன், எம்.ஆர்.ஐ (Magnetic Resonance Imaging) ஸ்கேன், பெட் (Positron Emission Tomography) ஸ்கேன், எப்.எம்,ஆர்.ஐ (Functional Magnetic Resonance Imaging) ஸ்கேன் போன்ற படக்கருவிகள் மூளையையும், மற்ற நரம்பு மண்டல பகுதிகளையும் மிகத் துல்லியமாகக் காட்டுவதால், அவற்றின் மூலமும் பிரச்சனை மூளையின் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது.

மின்உடலியல் கருவிகள்[தொகு]

நரம்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் மின் அல்லது காந்த புலத்தை அளவிட்டு அதன் மூலம் மூளை செயல்பாடுகளை அறியும் வகையிலான ஈ.ஈ.ஜி (Electro Encephalo Graphy), எம்.ஈ.ஜி (Magneto Encephalo Graphy) கருவிகள் பெரிதளவில் இப்போது நரம்புசார் உளவியலில் பயன்படுத்தப்படுகிறது.

கணினிகள்[தொகு]

கணினியால் கட்டுப்படுத்தப்படும் சில வேலைகளை அளித்து, அதற்கு மனிதர்கள் பதிலீடு அளிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு, துல்லியம் போன்றவற்றைக் கணிணியின் மூலமே பதிவு செய்து எந்த அளவுக்கு அவர்களின் சிந்தனைத்திறன் இருக்கிறது என்று அறியும் முறைகள் இன்று புழக்கத்திற்கு வந்துவிட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Posner, M. I.; Digirolamo, G. J. (2000). "Cognitive neuroscience: Origins and promise". Psychological Bulletin 126 (6): 873–889. doi:10.1037/0033-2909.126.6.873. பப்மெட்:11107880. https://archive.org/details/sim_psychological-bulletin_2000-11_126_6/page/873. 
  2. 2.0 2.1 Finger, Stanley (2000). Minds Behind the Brain: A History of the Pioneers and their discoveries. New York: Oxford. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195181821. {{cite book}}: Invalid |ref=harv (help)
  3. Finger 2000, ப. 44
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்புசார்_உளவியல்&oldid=3520315" இலிருந்து மீள்விக்கப்பட்டது