தொல்லியல் அருங்காட்சியகம், பாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், பாதமி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதமியில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் கள அருங்காட்சியகம் ஆகும். பாதமி, பாகல்கோட்டுக்கு தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், பீசாப்பூருக்குத் தெற்கே 132 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பாதமி, கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடையே ஆட்சி செலுத்திய முன்னைப் பாதமிச் சாளுக்கியரின் தலைநகரமாக விளங்கியது. இவர்களுடைய காலத்துக்குப் பின்னரும் 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை பாதமி, ஒரு அரசியல் முக்கியத்துவம் கொண்ட இடமாகவே விளங்கி வந்தது. இக் காலப் பகுதியில் பல சமயம் சார்ந்த கட்டிடங்களும், பாதுகாப்புக்குரிய கட்டிடங்களும் இங்கே கட்டப்பட்டன. இந்து, சமண, பௌத்த மதங்களைச் சேர்ந்த குகைக் கோயில்களும், திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த கோயில் கட்டிடங்களும் இங்கே காணப்படுகின்றன.

இந்த அருங்காட்சியகம், வடக்குக் கோட்டை அமைந்துள்ள வடக்கு மலையடிவாரத்தில், நரசிம்ம பல்லவனின் கல்வெட்டு அமைந்துள்ள இடத்துக்கு அருகே உள்ளது. 1979 ஆம் ஆண்டில், அகழ்வாய்வுகளின் போது கிடைத்த தொல்பொருட்களைச் சேகரித்துப் பேணுவதற்கான ஒரு சிற்பக் கொட்டகையாக இது அமைக்கப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டில் ஒரு முழுமையான தொல்லியல் அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் பெரும்பாலும் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்குக் இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள், வரலாற்றுக்கு முந்தியகாலக் கற்கருவிகள், சிற்பங்கள், கட்டிடக்கலைக் கூறுகள், கல்வெட்டுக்கள், நடுகற்கள் என்பவை அடங்கும்.

இந்த அருங்காட்சியகத்தில் நான்கு காட்சிக்கூடங்களும், விறாந்தையில் ஒரு திறந்த காட்சிக்கூடமும், ஒரு திறந்தவெளிக் காட்சிக்கூடமும் உள்ளன. ஒரு காட்சிக்கூடத்தில் பாதமிக்கு அகுகில் உள்ள சித்லபாடி குகை எனப்படும் வரலாற்றுக்கு முந்தியகாலக் குகை வாழிடத்தின் மாதிரியுருவும், பலவையான வரலாற்றுக்கு முந்தியகாலக் கருவிகள், கலைப் பொருட்கள் என்பனவும் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]