தென்னிந்தியப் புதுப்பானைக் கள்ளிப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலக்காடு புலிகள் காப்பகத்தில் தென்னிந்தியப் புதுப்பானைக் கள்ளிப் புறா (S. orientalis erythrocephala)

தென்னிந்தியப் புதுப்பானைக் கள்ளிப் புறா[1] (peninsular turtle dove) விலங்கியல் பெயர் Streptopelia orientalis erythrocephala) என்பது செஞ்செதில் தவிட்டுப்புறாவின் கிளை இனம் ஆகும். இப்பறவை தீபகற்ப தென்னிந்தியாவில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை 33 செ. மீ நீளம் இருக்கும். அலகு கொம்பு நிறத்தில் இருக்கும். விழிப்படலம் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கால்கள் ஊதா நிறத்தில் இருக்கும். நெற்றியும், உச்சந்தலையும் இளஞ்சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிறமாக இருக்கும். கழுத்தின் இருபுறமும் கருப்பும் வெள்ளையுமான, சதுரங்கப் பலகையை ஒத்த கட்டங்களைக் காணலாம். முதுகு கருஞ்சிவப்பான பழுப்பாக இருக்கும். இறக்கைகளின் நடுப்பகுதிகளில் பட்டை பட்டையான தோற்றம் காணலாம். பின் முதுகும் பிட்டமும் சிலேட் சாம்பல் நிறத்தில் இருக்கும். வால் கறுப்பு கலந்த பழுப்பு நிறமாக சிலேட் நிற நிற விளிம்புப் பட்டைகளோடு இருக்கும்.[2] மோவாயும், தொண்டையும் வெண்மையாக இருக்கும். முன் கழுத்தும் மார்பும் சிவப்புத் தோய்ந்த பழுப்பாக இருக்கும். வாலும் வாலடியும் வெண்மை நிறத்தில் இருக்கும். ஆண் பெண் என இருபறவைகளும் ஒன்று போல இருக்கும்.

நடத்தை[தொகு]

இப்பறவைகள் தென்னிந்தியா முழுவதும் இளையுதிர் காடுகளிலும், மூங்கில் காடுகளிலும், விளை நிலங்களை அடுத்தும் ஆங்காங்கே காணப்படும். இப்பறவை தரையில் மேயக்கூடியது. இணையாகவோ, சிறு கூட்டமாகவோ காணப்படும். கட்டு நிலங்களில் விதைகளைப் பொறுக்கித் தின்னும். இது விரைந்து நேராக பறக்கும் தன்மை கொண்டது.[1]

இனப்பெருக்கம்[தொகு]

இப்பறவைகள் நவம்பர் முதல் பெப்ரவரி வரை இனப்பெருக்கம் செய்யும். தொண்டையை உப்பி வைத்தபடி உரக்கக் குரல் கொடுத்து ஆண் பறவை பெண் பறவையை நெருங்கி காதல் புரியும். மரங்களில் இரண்டு முதல் நான்கு மீட்டர் உயரம் வரையிலான பகுதியில் குச்சிகளைக் கொண்டு கூடு அமைக்கும் இரண்டு முட்டைகளை சிலசமயம் மூன்று முட்டைகளை இடும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 219-220. 
  2. Ali, Salim; Ripley, S. Dillon (1981). Handbook of the Birds of India and Pakistan. Volume 3. Stone curlews to owls. (2 ). Delhi: Oxford University Press. பக். 142–146.