தூலிப் வெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூலிப் வெறி என்பது 1630-களில் நெதர்லாந்தில் அப்போதுதான் அறிமுகமாயிருந்த தூலிப் மலர்க் குமிழ்களின் விலை விண்ணளாவ உயர்ந்து திடீரென வீழ்ந்த நிகழ்வைக் குறிக்கிறது. இதுவே பொதுவாக வரலாற்றில் முதலாவதாகப் பதிவுசெய்யப்பட்ட ஊக வணிகப் "பொருளியல் குமிழி" எனக் கருதப்படுகிறது.

பெயரிடப்படாத 17-ஆம் நூற்றாண்டு நீர்வண்ண ஓவியம் - தூலிப் மோகத்தின்போது மிகவும் அதிக விலைக்கு விற்கப்பட்ட குமிழான செம்பெர் அகஸ்டஸ் வகை

1630 வாக்கில் தூலிப் மலர் வாணிகத்தில் கொழுத்த லாபம் கிடைப்பதாகப் பரவிய கதைகளைப் பயன்படுத்தி தொழில்முறை மலர் வணிகர்கள் மலர் விரும்பிகளையும், ஊக பேரத்தில் ஈடுபடுபவர்களையும் அணுகினர். விதையிலிருந்து வளர ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொள்வதோடு குறைந்த ஆயுளே கொண்டுள்ளவை என்பதால் தூலிப் குமிழ்களின் தேவை அதிகரித்த அளவு உற்பத்தி இல்லை. இதனால் அவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்தது. உழவர்களும், நெசவாளர்களும்கூட கைப்பொருளை எல்லாம் அடகு வைத்தாயினும் தூலிப் வணிகத்தில் ஈடுபடலாயினர். 1633இல் மூன்றே மூன்று அரிய குமிழ்களுக்காக ஒரு பண்ணை வீடே கைமாறியதெல்லாம் நடந்தது. 1636 - 37இல் தூலிப் வெறி உச்சத்தில் இருந்தபோது சில குமிழ்கள் ஒரே நாளில் பத்து முறை கூட கைமாறின. ஏழு ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக அவர்களது தந்தை விட்டுச்சென்ற 70 தூலிப் மலர்களை ஏலம் விட்ட ஒரு நிகழ்வில், ஒரு அரிய வகை குமிழ் அதுவரை இல்லாத சாதனை அளவாக 5200 கில்டர்களுக்கு விலைபோனது. ஆனால் அதன் பிறகு நடந்த ஒரு வழமையான ஏலத்தில் வாங்குவோர் இல்லாமல் போக பீதி பரவி விலைகள் திடுமெனச் சரிந்தன. சின்னாட்களுக்கு முன்பு வரை 5000 கில்டர்களுக்கு விற்றவற்றை அதில் நூற்றில் ஒரு பங்கு கொடுத்து வாங்கக்கூட யாரும் துணியவில்லை.[1].

1636 தொடக்கத்தில் செம்பெர் அகஸ்டஸ் என்ற சிற்றினத்தைச் சேர்ந்த இரண்டே இரண்டு குமிழ்களே மொத்த டச்சுப் பகுதியிலும் இருந்ததாகவும், அதில் ஒன்றுக்கு விலையாக 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாகவும் "தூலிப் வெறி" நிகழ்வை 1841இல் பிரபலப்படுத்திய சார்லசு மேக்கே குறிப்பிடுகிறார். இன்னொரு குமிழுக்கு விலையாக 4600 கில்டர்கள், ஒரு வண்டி, இரு சாம்பல் நிறக் குதிரைகள், அவற்றுக்கான சேணங்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம். [2]அந்நாட்களில் ஒரு தேர்ந்த கைவினைஞரின் ஆண்டு வருவாயே ஏறத்தாழ 300 கில்டர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mark Frankel (ஏப்ரல் 24, 2000). "When the Tulip Bubble Burst". TULIPOMANIA The Story of the World's Most Coveted Flower By Mike Dash புத்தக மதிப்புரை. Bloomberg Business Week. http://www.businessweek.com/2000/00_17/b3678084.htm. பார்த்த நாள்: திசம்பர் 13, 2015. 
  2. The Tulipomania (1852 [2nd ed, First Edition: 1848]). Memoirs of Extraordinary Popular Delusions and the Madness of Crowds. London: Office of the National Illustrated Library. http://www.econlib.org/library/Mackay/macEx3.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலிப்_வெறி&oldid=1982463" இலிருந்து மீள்விக்கப்பட்டது