டுபோலேவ் டு-144 (Tupolev Tu-144, நேட்டோ பெயர்: சார்ஜர்) ஒரு சோவியத் மீயொலிவேக பயண வானூர்தியாகும். உலகில் வணிகரீதியிலான மீயொலிவேக இரண்டு வானூர்திகளில் இது ஒன்றாகும். மற்றொன்று ஆங்கில-பிரெஞ்சு தயாரிப்பான கான்கார்ட். சனவரி 1962-ல் இதன் வடிவமைப்பு உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அலெக்சிஸ் டுபோலேவ் என்பவரின் தலைமையில் நடத்தப்பட்ட சோவியத் டுபோலேவ் வடிவமைப்பு மையத்தால் இவ்வானூர்தி வடிவமைக்கப்பட்டது. இதுவே டுபோலேவின் ஒரே வணிகரீதியிலான மீயொலிவேக வானூர்தியாகும். இம்மையத்தால் வடிவமைக்கப்பட்ட மற்ற மீயொலிவேக வானூர்திகள் ராணுவ பயன்பாடுகளுக்கானவை.