துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எழுத்தச்சன்‍

துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்(மலையாளம்: തുഞ്ചത്തു രാമാനുജന്‍ എഴുത്തച്ഛന്‍),நவீன மலையாளத்தின் தந்தை என அறியப்படும் கவிஞர். இன்று வழங்கும் மலையாள எழுத்துக்கள் இவரால் ஒழுங்குபடுத்தப்பட்டவை. இவர் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் பதினாறாம் நூற்றாண்டிற்கும் இடையே வாழ்ந்திருந்ததாக கருதப்படுகிறது. எழுத்தச்சன் என்பது குலப்பெயர் அல்லவென்றும் இவரது இயற்பெயர் இராமானுசன் எனவும் சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.[1] எழுத்தச்சன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் நகரை அடுத்துள்ள இடத்தில் பிறந்தார். இவ்விடம் தற்காலம் இவரது நினைவைப் போற்றி துஞ்சன்பரம்பு என அழைக்கப்படுகிறது.பிராமணராக இல்லாதபோதும் வேதங்களையும் சமசுகிருதத்தையும் கற்றறிந்த எழுத்தச்சன் பல நாடுகளையும் சுற்றிவந்து இறுதியில் திருக்கண்டியூர் என்னுமிடத்தில் தங்கினார் என அறியப்படுகிறது.

படைப்புகள்[தொகு]

இராமானுசன் எழுத்தச்சன் இராமாயணத்தின் பல்வேறு வடிவங்களை ஒருங்கிணைத்து அத்யாத்மராமாயணம் என்ற காவியத்தைப் படைத்தார்.மகாபாரத்தையும் மொழிபெயர்த்து மகாபாரதம் என்னும் நூலை எழுதினார். இவை தவிர இவர் எழுதிய பிற நூல்கள்[2]:

 • கேரளோபதி
 • அரி நாம கீர்த்தனம் - அரியை போற்றி பசனைப்பாடல்கள்
 • கணபதிஸ்தவம்
 • கிளிப்பாட்டு பிரஸ்தானம்
 • தேவி மகாத்மயம்
 • கேரளா நாடகம்

மலையாள எழுத்துகள் ஒருங்கிணைப்பு[தொகு]

எழுத்தச்சன் காலம் வரை மலையாள மொழியில் பலரும் தனித்தனி எழுத்து அமைப்புகளை கொண்டிருந்தனர். அவற்றில் சில:

 • 1. வட்டெழுத்து - பல்வேறு களரி (பள்ளி)களில் கற்பித்து வந்த 30 எழுத்துகள்கொண்ட (தமிழினை ஒத்த) மலையாள அரிச்சுவடி.
 • 2. சமசுகிருதத்தை ஒத்த அரிச்சுவடி.
 • 3. நம்பூதிரிகள் பயன்படுத்திய சமசுகிருத அரிச்சுவடி.
 • 4. கிரந்தமும் வட்டெழுத்தும் பல்வேறு வகைகளில் இணைந்த பல்வேறு மலையாள அரிச்சுவடிகள்.

இவ்வாறான பல்வேறு எழுத்து வகைகளால் பள்ளிகளிலும் அறிஞர்களிடத்தும் மிகுந்த குழப்பம் நிலவியது.சமசுகிருதத்தின் தாக்கத்தால் சமசுகிருத ஆக்கங்களை மலையாளத்தில் எழுத வட்டெழுத்துகளும் இடையிடையே கிரந்த எழுத்துக்களும் கொண்டு எழுதப் பட்டன. இவற்றை சரிசெய்ய ஓர் புதிய அரிச்சுவடியை ஏற்படுத்தினாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளுதல் கடினமாகும். ஆதலினால் எழுத்தச்சன் அரிநாம கீர்த்தனையை தான் உருவாக்கிய 51 எழுத்துகள் கொண்ட அரிச்சுவடியை பயன்படுத்தி எழுதினார். அவரது பாடல் பிரபலமானதால், அவர் அமைத்த எழுத்துமுறையும் பிரபலமாயிற்று.31 எழுத்துகள் கொண்ட வட்டெழுத்துகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தபோதும், பிரித்தானிய அரசு பத்திரங்களையும் பிற ஆவணங்களையும் பதிய கொண்டுவந்த ஆணைகள் மூலம் எழுத்தச்சனின் எழுத்துமுறை சீர்தரமாக்கப் பட்டது.

துஞ்சன் பரம்பு[தொகு]

ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ என்பது மலையாள மொழியில் 51 எழுத்துக்களைக் கொண்டதாக உள்ளது. இவ்வாசகத்தைக் கொண்டே சிறார்களுக்கு அரிச்சுவடி பாடத்தை துவங்கும் வழக்கத்தையும் எழுத்தச்சன் தொடங்கி வைத்தார்.இன்றைய கேரளத்தில் விசயதசமி அன்று அவர் வசித்த துஞ்சன்பரம்பு வந்து அங்குள்ள மண்ணைக் கொண்டு அனைத்து சமயத்தினரும் இவ்வாசகம் கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வியைத் துவக்குகிறார்கள்.

அம்பத்தோரக்சரமும் ஓரோண்ணிதென்மொழியில் அன்போடு சேர்க்க ஹரி நாராயண நம - அரி நாம கீர்த்தனம் 14ஆம் பத்தி

சிலை சச்சரவு[தொகு]

சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தச்சனுக்கு திரூரில் சிலை எழுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு எதிர்ப்புகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. எழுத்தச்சன்
 2. Travancore State Manual by V.Nagam Aiya, Volume II, page 432
 3. த இந்து :செய்தி