தில்லியில் தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் என்பது 2017, மார்ச், 14 ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவின் தலைநகரான தில்லியில் தமிழ்நாட்டு விவசாயிகளால் நடத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட போராட்டமாகும்.

போராட்டத்தின் துவக்கம்[தொகு]

விவசாயிகள் போராட்டமானது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் தில்லி ஜந்தர் மந்தரில் 2017 மார்ச் 14 அன்று துவக்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஏறக்குறைய 100 விவசாயிகள் ஈடுபட்டனர்

முன்வைக்கப்படும் கோரிக்கைகள்[தொகு]

  • விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்
  • விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும்
  • ஓய்வூதியம் வழங்க வேண்டும்
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

போராட்ட வகைகள்[தொகு]

போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதுமையான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருந்தனர் மண்டையோடுகளை மாலையாக அணிந்தும், மண் சட்டி ஏந்தியும், தூக்குக் கயிறு அணிந்தும் அரைநிர்வாணமாக அமர்ந்தும், எலி உண்ணும் போராட்டம், பாம்புக்கறி உண்ணும் போராட்டம், மண்சோறு உண்ணும் போராட்டம், பாதி மீசை எடுக்கும் போராட்டம், பாதி மொட்டை அடிக்கும் போராட்டம், கோரிக்கை வாசகங்களை உடலில் எழுதிக்கொள்ளும் போராட்டம், புடவை அணியும் போராட்டம், வளையல் அணிந்து அதை உடைக்கும் போராட்டம், தாலி அறுக்கும் போராட்டம், சாட்டையடி வாங்கும் போராட்டம், புல் திண்ணும் போராட்டம், சிறுநீர் குடிக்கும் போராட்டம் என பலவகையில் போராடினர். போராட்டத்தின்போது இந்திய ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்மீது காவல் துறையினர் தடியடி நடத்திக் கைது செய்தனர்.[1] பின்னர் விடுவிக்கப்பட்ட விவசாயிகள் 2017 ஏப்ரல் 10 அன்று பிரதமரை சந்தித்து மனுகொடுக்கச் சென்றனர், ஆனால் பிரதமரை சந்திக்க இயலாமல் வேறு வழியின்றி, பிரதமர் அலுவலகத்தில் மனுகொடுத்துவிட்டு வெளியே வந்து பிரதமர் அலுவலகம் முன்பு சில விவசாயிகள் தங்கள் ஆடைகளை முழுமையாக அவிழ்த்து முழு நிர்வாணமாக நின்றும், சாலையில் உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாயினர்.[2]

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்[தொகு]

இந்தப் போராட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரியானா மாநில விவசாயிகள், தில்லி விவசாயிகள், பஞ்சாப் விவசாயிகள் ஆகியோர் ஆதரவாக ஒரு சில நாட்கள் உடன் கலந்துகொண்டனர். போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதவு அளித்த அரசியல்வாதிகள்; திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், காங்கிரசின் ராகுல் காந்தி இந்தியப் பொது உடமைக்கட்சியின் டி. இராஜா, அதிமுகவின் மு. தம்பித்துரை, தேமுதிகவின் பிரேமலதா விசயகாந்த் ஆதரவு அளித்தது ஆல்லாமல் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு உண்டும் போராட்டத்திலும் கலந்துகொண்டார், நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், ரமணா, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்கொடுத்தனர்.[3] தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 2017 ஏப்ரல் 10 அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர்.[4]

முடிவு[தொகு]

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை 2017 ஏப்ரல் 24 அன்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிரைவேற்ற பாடுபடுவதாக உறுதியளித்தார் இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து தமிழகம் திரும்பினர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக விவசாயிகள் மீது டெல்லி காவல்துறை தடியடி". செய்தி. புதிய தலைமுறை (2017 ஏப்ரல் 7). பார்த்த நாள் 11 ஏப்ரல் 2017.
  2. "பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு". செய்தி. ஆனந்த விகடன் (2117 ஏப்ரல் 11). பார்த்த நாள் 11 ஏப்ரல் 2017.
  3. "டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு". செய்தி. பிபீசி தமிழ் (2017 மார்ச் 25). பார்த்த நாள் 11 ஏப்ரல் 2017.
  4. "விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு; மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்". செய்தி. http://m.tamil.eenaduindia.com.+பார்த்த நாள் 12 ஏப்ரல் 2017.
  5. 1017 ஏப்ரல் 25. "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம்". செய்தி. தினமணி. பார்த்த நாள் 25 ஏப்ரல் 2017.