உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கழுங்குன்றம் குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கழுங்குன்றம் குடைவரை

திருக்கழுங்குன்றம் குடைவரை என்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தின், திருக்கழுங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில். திருக்கழுங்குன்றம் மலைக்குச் செல்லும் வழியில் மலைமீது உள்ள கிழக்கு நோக்கி அமைந்த பாறை ஒன்றைக் குடைந்து இக்குடைவரைக் கோயிலை அமைத்துள்ளனர். இந்தக் குடைவரை மண்டபத்தைக் கல்மண்டபம் என அழைக்கின்றனர்.[1]

இக்குடைவரை மண்டபத்தில் இரண்டு வரிசையில் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு தூண்கள் வீதம் மொத்தம் நான்கு முழுத்தூண்கள் உள்ளன. வரிசைகளின் இரு பக்கங்களிலும், பட்டச் சுவர்களையொட்டி அரைத் தூண்கள் உள்ளன. முழுத்தூண்கள் மேல் பகுதியும், கீழ்ப் பகுதியும் சதுர வெட்டுமுகத்துடன் கூடியனவாகவும், நடுப்பகுதி எண்கோணப்பட்டை அமைப்புடனும் காணப்படுகின்றன. மண்டபத்தின் பின்புறச் சுவரில் சதுர வடிவில் கருவறை ஒன்று குடையப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் கோட்டங்களும் அவற்றில் வாயிற் காவலர் சிற்பங்களும் உள்ளன. இச்சிற்பங்களுக்கு அப்பால் கருவறை வாயிலின் வலப் பக்கத்தில் அமைந்த கோட்டம் ஒன்றில் நான்முகன் சிற்பமும், இடப்பக்கத்தில் திருமால் சிற்பமும் உள்ளன.[2]

இக்குடைவரை பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்டது என்று கருதப்படுகின்றது. ஆனால், இங்கும் அயலிலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் இது நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 55
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 56