உள்ளடக்கத்துக்குச் செல்

திருகோணமலை மாவட்ட தொல்லியல் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருகோணமலை மாவட்ட தொல்லியல் வரலாறு என்பது, 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின் மூலம் பல தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு, அக்கல்வெட்டுக்களின் மையப்பிரதிகளிலிருந்து[1] கிடைத்த பின்வரும் விபரங்களைக் கொண்டதாகும். அவை சோழர் காலத்தைச் சேர்ந்தவையெனக் கருத இடமுண்டு.

Trincomalee district

கந்தளாய் சிவன் கோயில் கல்வெட்டு

[தொகு]

இது சிறி சங்கவர்மன் சிறி சோழ இலங்கேஸ்வர தேவர் என்பவனின் பத்தாவது ஆட்சியாண்டில், ராஜராஜச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குடிப் பெருமக்கள் ஒன்றுகூடி நீர்ப்பாசனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி பதிவு செய்வதற்காகப் பொறிக்கப்பட்டதாகும். தென்னிந்தியாவில் சோழப் பேரரசின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளங்கிக் கொள்வதன் மூலம், இச் சாசனத்தின் செய்தியையும் விளங்கிக் கொள்ள முடியும். தென்னிந்தியாவில் பரப்பளவிலும், அதிகாரத்திலும் சோழப்பேரரசு விரிவடைந்தபோது, அதை ஆட்சி செய்த மன்னர்கள் தமது நிர்வாகப் பொறுப்புக்களை இலகுவாக்கிக் கொள்ளவும், பிற இடங்களில் தாம் மேற்கொண்ட படையெடுப்புக்களில் தமது கவனத்தை ஒருமுகப்படுத்திக் கொள்ளவும், தாம் கைப்பற்றிய பகுதிகளுக்கு தமது ராஜப்பிரதிநிதிகளை அனுப்பி ஆட்சி புரிந்தனர். இதனைத் தென்னிந்தியாவிலுள்ள சோழ மன்னர்களின் சாசனங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. கைப்பற்றப்பட்ட வெளிநாடுகளுக்குப் பிரதிநிதிகளை அனுப்பியபோது, அவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களோ அந்த நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய விருதுப் பெயர்களுடன் அனுப்பப்பட்டார்கள். உதாரணமாக, பாண்டி நாட்டுக்கு அனுப்பப்பட்ட பிரதிநிதி "சோழபாண்டியன்" என்றும், சேர நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதி "சோழகேரளன்" என்றும் பெயர் பெற்றனர். இவ்வாறு சோழ மன்னர்களினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு பிரதிநியாகவே சோழ இலங்கேஸ்வரனும் காணப்படுகின்றான். அத்துடன் அவன் இலங்கைச் சிங்கள மன்னர்களின் சிம்மாசனப் பெயர்களுள் ஒன்றான "சங்கவர்மன்" என்ற பெயரையும் பெற்றிருந்தான்.[2]

இக்கல்வெட்டில் பிரமதேயம் ராஜராஜச் சதுர்வேதி மங்கலம் எனக் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும். சதுர்வேதி மங்கலம் பற்றிய குறிப்பு இக்கல்வெட்டில் மட்டுமன்றி, முதலாம் விஜயபாகுவின் பானமோட்டைச் சாசனத்திலும், நிஸங்கமல்லனின் கந்தளாய்ச் சாசனத்திலும் காணப்படுகின்றது. பானமோட்டைச் சாசனத்தில் இது "விஜயராஜ சதுர்வேதி மங்கலம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையில் சோழர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அரசாட்சியைத் தனதாக்கிக் கொண்ட விஜயபாகு, ராஜராஜச் சதுர்வேதி மங்கலம் என்பதைத் தனது பெயருக்கு மாற்றியமைத்துக் கொண்டதையே காட்டுகிறது. பிரமதேயம், சதுரவேதி மங்கலம் என்பன நன்கு வேதம் தெரிந்த பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புக்களைக் குறிக்கின்றன. சோழர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்குடியிருப்புக்கள் நிஸங்கமல்லன் ஆட்சிக் காலம் வரை இருந்திருக்கின்றன. சோழர் ஆட்சிக்காலத்திலும், அதனைத் தொடர்ந்தும் நலிவுற்றிருந்த பெளத்த மதத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த விஜயபாகு, ஒரு பிராமணக் குடியிருப்புக்குத் தனது பெயரிட்டு அழைத்திருப்பது, இந்துமதச் செல்வாக்கு திருகோணமலைப் பிரதேசத்தில் நிலைபெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.[3]

மேலும், பெருங்குடிப் பெருமக்கள் ஒன்றுகூடி நீர்ப்பாசனம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் தென்னிந்திய தமிழ்ச் சாசனங்களில் இடம் பெற்றுள்ளன. சோழப் பேரரசின் உள்ளூர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் இவர்களே. சோழர் காலத்து நிர்வாக அமைப்பில் சிறப்பான அம்சமாகக் காணப்படுவது உள்ளூராட்சி அமைப்பாகும். இந்தச் சபையினரே பெருங்குடிப் பெருமக்கள் என்போர். தென்னிந்திய தமிழ்ச் சாசனங்களிலும் இவர்கள் எப்போதும் சதுர்வேதி மங்கலத்தோடு தொடர்புபடுத்தியே கூறப்படுகின்றனர். இச் சபை குறிப்பிட்ட பிராமண சமூகத்ததிற்குரிய ஒன்றாக இருந்த போதிலும், தனது செயற்பாட்டைப் பொறுத்து பலவகையான உள்ளூர் விவகாரங்களையும் கவனித்து வந்தது.[4]

மானாங்கேணி கோயிற் சாசனம்

[தொகு]

இச்சாசனத்தில் "மச்சகேஸ்வரம்" பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. கோணேஸ்வரக் கோயில் மச்சகேஸ்வரம் எனவும் அழைக்கப்பட்டது என்பதற்கு, பிற்காலத்தில் எழுதப்பட்ட "தட்ஷிண கைலாச புராணம்", "சிறி கோணாசல புராணம்" போன்ற இலக்கிய நூல்களில் சான்றுகளிருந்த போதிலும், மச்சகேஸ்வரம் தொடர்பான மிகப் பழைமையான தகவல்களைத் தருபவை இந்த மானாங்கேணி கோயிற் சாசனம் மற்றும் நிலாவெளி சாசனம் ஆகியவைதான்.[5]

நிலாவெளிச் சாசனம்

[தொகு]

இச் சாசனத்தில் "கோணபர்வதம் திருகோணமலை மச்சகேஸ்வரமுடைய மஹாதேவர்க்கு" என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. மேலும், "உரா கிரிகாம கிரிகண்ட கிரிகாமம்" என்னும் இடத்தையும், வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட கல்லையும் எல்லைகளாகக் கொண்ட 250 வேலி (ஏறத்தாள 1710 ஏக்கர்) நிலம் மச்சகேஸ்வரக் கோயிலுக்குத் தானமாக அளிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எல்லைகளை வைத்துப் பார்க்கும்போது, வடக்கே 'திரியாய' என்னுமிடத்திலிருந்து தெற்கே ஆகக்குறைந்தது நிலாவெளி வரையுள்ள கடலுக்குச் சமீபமாக உள்ள நிலப்பரப்பு, சோழர் ஆட்சிக் காலத்தில் கோணேஸ்வரக் கோயிலுக்குச் சொந்தமாக இருந்தது எனக் கொள்ளலாம். ஏறத்தாள 1710 ஏக்கர் நிலம் அரச வம்சத்தினரைத் தவிர வேறு எவராலும் கோயிலுக்கு அன்பளிப்புச் செய்திருக்க முடியாது. இப்படியான பெருமளவு தானத்தை கோணேஸ்வரக் கோயில் பெற்றதற்கு, சமகாலத்தில் சோழமன்னர்களினால் தமிழ் நாட்டில் இடம் பெற்ற இந்துக் கோயில்களின் அபிவிருத்தியும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏனெனில் பல்லவர் காலம் முழுவதிலும் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் முழு விளைவுகள் சோழர் காலத்திலேயே பெருந் தாக்கத்தினை ஏற்படுத்தின. மேலும், சாசனத்திலுள்ள இச்செய்தி, "தக்ஷிண கைலாச புராணம்" மற்றும் "கோணாசல புராணம்" ஆகியவற்றில் உள்ள, கோணேஸ்வரக் கோயில் பெற்றிருந்த பெருந்தொகையான நிலத் தானங்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற செய்திகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.[6]

இச் சாசனம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், நூல்கள் சிலவற்றில் திருகேணமலையை 'கோகண்ண' எனவும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' எனவும் அழைக்கப்பட்டது என்று நாம் அறிந்துள்ளோம். தற்காலத்தில் திருகோணமலை என அழைக்கப்படுவது போல், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் திருகோணமலை என்றே அழைக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள உதவியது இந்த நிலாவெளிச் சாசனமே என்ற விதத்தில் இது தனித்தன்மை கொண்டதாக விளங்குகின்றது. இலங்கையிலுள்ள ஏனைய இடப்பெயர்கள் காலத்துக்குக் காலம் திரிபடைந்து பல்வேறு வடிவங்களைப் பெற்ற போதிலும், திருகோணமலை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்களினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்யப்பட்டும், அந்தப் பெயரின் வடிவம் மாற்றமடையாமல் இருப்பது, அப்பகுதியில் தமிழ் மக்களின் இருப்பு மிக நீண்ட காலமாக இருந்துள்ளது என்பதற்கு பலமான ஆதாரமாக உள்ளது.[7]

சோழப் பேரரசின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் இலங்கை இருந்தபோது, ஆட்சி நிர்வாகத்தை இலகுபடுத்துவதற்கும், பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் தலைநகராக பொலன்னறுவ மற்றும் அநுராதபுரம் ஆகியவற்றை வைத்திருந்தனர். ஆனால் இவ்விரு நகரங்களிலும் சோழர்களின் எந்தக் கல்வெட்டுக்களும் காணப்படாமல் திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஐந்து கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்தே வழங்கப்பட்டன. இவற்றையெல்லாம் கவனித்துப் பார்க்கும்போது, சோழர்களின் ஆட்சியின்போது இலங்கைத் தீவின் திருகோணமலையே அவர்களின் கவனத்தை மிகக் கூடுதலாக ஈர்த்துள்ளதாகத் தெரிகிறது.

சோழப் பேரரசில் ஆட்சி புரிந்த பெரும் வலிமை கொண்ட முதலாம் இராஜேந்திரன் தென்கிழக்காசிய நாடுகளின் வலிமையினை ஒடுக்கி இந்து சமுத்திரத்தில் சோழ ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்றபோது. தனது எண்ணத்தை முழுமையாகச் செயற்படுத்திக்கொள்ள இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. அக்காலத்தில் கிழக்கத்திய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற வர்த்தகத்தில் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் மிகப் பிரசித்தி பெற்றதாயிருந்தது. அனைத்து வர்த்தகக் கப்பல்களும் தென்கிழக்காசியாவுக்கு மிக அண்மையிலுள்ள திருகோணமலைத் துறைமுகத்தினூடாவே பயணம் செய்தன. இதனாலேயே இந்த மாபெரும் வர்த்தகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்க வேண்டிய கடப்பாடு சோழர்களுக்கு ஏற்பட்டு, தமது கவனம் முழுவதையும் திருகோணமலை மாவட்டத்தில் செலுத்தினர் என்பதே உண்மையாகும்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1972ம் ஆண்டு வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் (வீரகேசரி, தினகரன், ஈழநாடு)
  2. Tow Inscription of Chola Ilankeswara Deva, Trincomalee Inscription. Series No.1, S. Gunasingam, Peradeniya-1974
  3. "கோணேஸ்வரம்", செ.குணசிங்கம், பேராதனை-1973, பக்கம்.92
  4. Tow Inscription of Chola Ilangeswara Deva, S.Gunasingam, P.18-19
  5. Tow Inscription of Chola Ilangeswara Deva, S.Gunasingam, P.18-19
  6. "A Tamil Slab - Inscription at Nilaveli", Srilanka Journal of Humanities, Vol.1,S.Gunasingam, Peradeniya-1975
  7. "A Tamil Slab - Inscription at Nilaveli", Srilanka Journal of Humanities, Vol.1, S.Gunasingam, Peradeniya-1975
  8. Some Aspect of the Impact of Chola Rule in the Trincimalee District, A paper read before the Ceylon Studies seminar, 19th Sept.1973, S.Gunasingam