உள்ளடக்கத்துக்குச் செல்

தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி (Cryogenic electron microscopy) என்பது அமைப்பினை ஆய்விட வேண்டிய பொருளின் மாதிரிகளை மிகத்தாழ் வெப்பநிலைக்கு உட்படுத்தி பனிக்கட்டி போன்ற தன்மையுடைய நீர்ச்சூழலில் வைத்து நோக்கும் மின்னணுவியல் நுண்ணோக்கியாகும். எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரியின் நீர்க்கரைசலானது சல்லடை வலை அமைப்பில் வைக்கப்பட்டு திரவ ஈத்தேனில் உறைநிலையில் மூழ்கவைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது 1970 ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருந்தாலும், சமீபத்தில் ஏற்பட்டுள்ள கண்டறிவான்களின தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் படிமுறைத் தீர்வுகளும் உயிரிய மூலக்கூறுகளின் அமைப்பினை அணுவளவு நுணுக்கத் துல்லியத்தில் கண்டறிய வழிவகுத்துள்ளது.[1] இந்த முறையானது X கதிர் படிகவியல் அல்லது அணுக்கருக் காந்த உடனிசைவு நிறமாலைமானி முறைகளுக்கு மாற்றாக பெரியமூலக்கூறுகளின் அமைப்பினைக் கண்டறிய படிகமாக்குதலுக்கான அவசியமிற்ற ஒன்றாக மாறி வருகிறது.

2017 ஆம் ஆண்டு, ஜாக்ஸ் துபோகேத், யோக்கிம் பிராங்கு மற்றும் ரிச்சர்டு ஹென்டர்சன் ஆகியோருக்கு கரைசலில் உள்ள உயிரிய மூலக்கூறுகளின் அமைப்பினை உயர் பிரிதிறனில் கண்டறிவதற்கான தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கியின் மேம்பாட்டிற்காக வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A primer to single-particle cryo-electron microscopy". Cell 161 (3): 438–449. April 2015. doi:10.1016/j.cell.2015.03.050. பப்மெட்:25910204. 
  2. "Cryo-electron microscopy wins chemistry Nobel". nature. 4 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2019.