தாரைவார்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாரைவார்த்தல் அல்லது தாரைவார்த்துக் கொடுத்தல் என்பது தமிழர் வாழ்வியலின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். பழந்தமிழர் வாழ்வில் ஒருவர் இன்னொருவருக்கு ஒன்றை கொடையாகக் கொடுக்கும் பொழுது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக, கொடுப்பார் கொள்வார் கையில் நீரை வார்த்தல் வழக்காகும். [1] இது தற்கால உலகில் ஒன்றை இன்னொருவருக்கு கொடுக்கும் போது காகிதத் தாள்களில் கையெழுத்திட்டு உறுதியளிக்கும் வழக்கிற்கு ஒப்பானது என்றாலும், பழந்தமிழர் வாழ்வியலில் நம்பிக்கையையும் சொல்லுறுதியையும் முதன்மையாகக் கொண்டே இந்த தாரைவார்த்து கொடுக்கும் வழக்கு இருந்துள்ளது.

தமிழர் திருமணச் சடங்குகளில்[தொகு]

தமிழரின் திருமணச் சடங்குகளின் போது மணப்பெண்ணின் பெற்றோர் மணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணின் இடது கையை வைத்து நீர் வார்த்து தாரைவார்த்தல் அல்லது தாரைவார்த்துக் கொடுத்தல் பழங்காலம் தொட்டே இருந்துவந்துள்ள ஒரு வழக்காகும்.

மகாவம்சத்தில் தாரைவார்த்தல்[தொகு]

இலங்கையின் பௌத்த வரலாற்று நூலான மகாவம்சத்திலும் தாரைவார்த்துக் கொடுக்கும் செயல்பாடு காணப்படுகிறது. இலங்கை, அநுராதபுரத்தில் பௌத்தம் அறிமுகமாகும் கால கட்டத்தில் மன்னன் தேவநம்பிய தீசன், தேரர் மகிந்தாவின் கைகளில் நீரை வார்த்து மகாமேக எனும் பூந்தோட்டத்தை தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்வு மகாவம்சம் அத்தியாயம் 15இல் உள்ளது. [2] அதனடிப்படையில் தாரைவார்த்துக் கொடுக்கும் பழந்தமிழர் பண்பாட்டுக் கூறு ஆதி இலங்கையிலும் இருந்துள்ளதை அறியலாம்.

தற்காலத் தமிழர் பேச்சு வழக்கில்[தொகு]

"தாரைவார்த்தல்" எனும் சொல்லாடல் தற்காலத் தமிழரின் பேச்சு வழக்கில் அடிக்கடி பயன்படுகிறது. ஒன்றை ஒருவருக்கு அல்லது ஒரு அமைப்பிற்கு அல்லது ஒரு நாட்டிற்கு இலவசமாக, மக்களின் விருப்புக்கு மாறாகக் கொடுக்கப்படுவதனையும் "தாரைவார்த்தல்" என பேச்சு வழக்கில் கூறுவதும் உண்டு. "[3]

சான்றுகள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=256&pno=92
  2. http://mahavamsa.org/mahavamsa/original-version/15-acceptance-mahavihara/
  3. "கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்ட ஒப்பந்தம்". Archived from the original on 2012-10-14. பார்க்கப்பட்ட நாள் 2012-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரைவார்த்தல்&oldid=3557752" இலிருந்து மீள்விக்கப்பட்டது