தாமரைக் கோயில்
தாமரைக் கோயில் | |
---|---|
தாமரைக் கோயில், டில்லி | |
பொதுவான தகவல்கள் | |
வகை | வழிபாட்டு மாளிகை |
கட்டிடக்கலை பாணி | வெளிப்பாடுவாதி |
இடம் | புது தில்லி, இந்தியா |
நிறைவுற்றது | 1986 |
திறக்கப்பட்டது | டிசம்பர், 1986 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | கான்கிரீட் சட்டம் & முன் வடிவமைக்கப்பட்ட கான்கிரீட் கூரை |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பாரிபோர்ஸ் சாபா |
அமைப்புப் பொறியாளர் | பிளின்ட் & நெயில் |
முதன்மை ஒப்பந்தகாரர் | பொறியியல்கட்டுமானம்& ஒப்பந்த நிறுவனம்,லார்சன்& டூப்ரோ |
தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக "தாமரைக் கோயில்" (கமல் மந்திர்) என அறியப்படுகிறது. இந்த பகாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. மற்ற அனைத்து பகாய் வழிபாட்டு இல்லங்களைப் போலவே, தாமரை கோயிலும் மதம் அல்லது வேறு எந்த தகுதியையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்காகவும் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் தாமரை இதழ் போன்ற வடிவத்தில் தனித்தனியாக நிற்கும் 27 வெண் பளிங்குக் கற்களாலான அமைப்புகள் உள்ளன. இவை மூன்று சேர்ந்த ஒரு தொகுதியாக அடுக்கப்பட்டாற்போன்று ஒன்பது பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.[1] 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்தத் தாமரைக்கோயிலில் சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மத்திய மண்டபமும்[1] அதில் ஒன்பது கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1300 பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.[2],[3] இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான செய்தித்தாள் மற்றும் நாளிதழ் கட்டுரைகளில் தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது.[4]
பின்னணி
[தொகு]பாதி மலர்ந்த தாமரை இதழ்போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாமரைக்கோயிலானது பத்துமில்லியன் அமெரிக்க டாலர்[5]செலவில் கட்டப்பட்டதாகும். 1953 இல் இந்தக் கோவிலுக்கான நிலம் கொள்முதல் செய்யப்பட்டு கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.[6] இந்த நிலத்தை வாங்குவதற்கு ஐதராபாத்தின் ஆர்திசிர் ருசுடாம்பூர் (Ardishír Rustampúr) பெரும்பகுதி நிதியைக் கொடையாக அளித்தார். அவர் 1953 ஆம் ஆண்டில் தனது முழு வாழ்க்கைச் சேமிப்பையும் இதன் கட்டுமானத்திற்காக வழங்கினார்.[7]ஆனால் 1980 ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு 1986 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டன. 1986 டிசம்பர் 23 ஆம் நாளில் திறக்கப்பட்டு 27 ஆம் நாள் மக்களின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. 107 நாடுகளில் இருந்து 8,000 பஹாய்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவில் உள்ள 22 மாகாணங்களில் இருந்து சுமார் 4,000 பஹாய்களும் அடங்குவர். ஜனவரி 1 ஆம் தேதி கோயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. முதல் நாளில் 10,000இற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர்.
2001 இன் பிற்பகுதியில், இது 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது என்று சிஎன்என் நிருபர் மன்பிரீத் பிரார் குறிப்பிட்டார்.[8] ஏப்ரல் 2014இல் தாமரைக் கோயிலுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்ததாக யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு தெரிவித்தது.[9]
வழிபாடு
[தொகு]பஹாய் வழிபாட்டு இல்லமானது அனைத்து மதத்தினரும் கூடி, சிந்தித்து, வழிபடுவதற்கான இடமாக இருக்க வேண்டும் என்று பஹாய் நம்பிக்கை கற்பிக்கிறது. அனைத்து பஹாய் வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளதைப் போல, மதப் பின்னணி, பாலினம் அல்லது பிற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் எவரும் தாமரைக் கோயிலுக்குள் நுழையலாம். மற்ற பிற பகாய் வழிபாட்டுத் தலங்களைப் போன்றே தாமரைக் கோயிலானது மதத்தைப் பொருட்படுத்தாத அல்லது பகாய் புனித நூல்களில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மற்ற தனித்துவங்கள் கொண்ட அனைவருக்குமான கோயிலாக இருக்கிறது. அனைத்து மத மக்களும் ஒன்று கூடி கடவுளை எந்த இனப்பாகுபாடுகளும் இன்றி வழிபடுவதிலேதான் வழிபாட்டுத் தலத்தின் ஆன்மா உள்ளது என பகாய் விதிகளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.[10] மேலும் பஹாய் நம்பிக்கை கொண்ட புனித நூல்களை மட்டுமே பஹாய் விதிகள் வலியுறுத்துகின்றன. மேலும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலின் உட்பகுதியில் எந்த மொழியிலும் படிக்கலாம் அல்லது மந்திரம் ஓதலாம்; பிரசங்கங்கள், விரிவுரைகளை வழங்குதல், நிதி திரட்டுதல், வேதப்பூர்வமற்ற நூல்களைப் படித்தல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. அதேசமயம் படித்தல் மற்றும் பிரார்த்தனைகளை குழுக்களாக இணைந்து பாடலாம். ஆனால் கோவிலில் உட்புறத்தில் எந்த இசைக்கருவிகளும் இசைக்கப்படக் கூடாது. இங்கு எந்த சமயபோதனைகளும் வழங்கப்படுவதில்லை. சடங்கு ரீதியான நடைமுறைகள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை.[10]
கட்டமைப்பு
[தொகு]தாமரைக் கோயில் உள்ளிட்ட அனைத்து பஹாய் சமயக் வழிபாட்டுத் தலங்களும் அவற்றின் கட்டிடக்கலை சிறப்பிற்காக நன்கு அறியப்பட்டவை. அவற்றில் சில பகாய் புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுடுள்ளன. இந்த மதத்தை உருவாக்கியவரின் மகனான `அப்து'ல்-பகாய், வழிபாட்டுத் தலத்திற்குத் தேவையான கட்டடக்கலைப் பண்புகளை நிர்ணயித்தார். வழிபாட்டு இல்லத்தின் முக்கிய கட்டிடக்கலை தன்மை ஒன்பது பக்க வட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்று விதித்தார்.[11] தற்போதுள்ள அனைத்து பகாய் வழிபாட்டுத் தலங்களும் குவிமாடத்தைக் கொண்டிருந்த போதும் அவை அதன் கட்டுமான அமைப்பிற்குத் இன்றியமையாத பகுதியாகக் கருதப்படவில்லை. வழிபாட்டுத் தலத்தினுள் உருவப்படங்கள், சிலைகள் அல்லது உருவங்கள் ஆகியவை இடம்பெறக்கூடாது; மேலும் போதனை மேடைகள் அல்லது பூஜை மாடங்கள் போன்றவை கட்டடக்கலைக் கூறுகளில் இருக்கக் கூடாது எனவும் அந்த நூல் கூறுகிறது.
வடிவமைப்பு
[தொகு]நாட்டின் தலைநகரமான தில்லியில் உள்ள பாகாபூர் என்ற கிராமத்தில் கட்டப்பட்ட தாமரை வடிவிலான வழிபாட்டு இல்லம், இந்த வளமான பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். இதன் வடிவமைப்பாளர் பரிபோர்ஸ் சாபா என்ற ஈரானிய கட்டிடக்கலை வடிவமைப்பாளர் ஆவார். 1976 ஆம் ஆண்டில் அவர் இதனை வடிவமைப்பதற்காக அணுகினார். கோவிலின் வடிவமைப்பை மேற்கொள்வதற்கு முன்பு, இந்தியாவின் அதன் நிலத்திற்கேற்ற கட்டிடக்கலையை ஆய்வு செய்வதற்காக இந்தியா முழுக்க விரிவாகப் பயணம் செய்தார். இந்தியாவின் அழகான கோயில்களின் வடிவமைப்புகளாலும் கலைகளாலும் மத அடையாளங்களாலும் அவர் ஈர்க்கப்பட்டார்.[12] மேலும் பஹாய் நம்பிக்கையின் தூய்மை, எளிமை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை வெளிக்கொணரும் முயற்சியில் தாமரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவர் டெல்லியில் ஒரு தாமரை வடிவில் கோவிலை உருவாக்கினார். அவர் தற்போது கனடாவில் வசிக்கிறார். மேலும் பசுமைக்குடில் உருவாக்குவதற்கு அந்த இடத்திற்கு ஏற்ற உள்நாட்டுத் தாவரங்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் கட்டுமான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பணத்தை மிச்சப்படுத்தினார்.[13][14] இதன் ஆலோசகர்களாக லண்டனைச் சேர்ந்த பிளின்ட் & நீல் பங்குதார நிறுவனமும், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் பொறியியல் கட்டுமானம் மற்றும் ஒப்பந்த நிறுவனம் (ECC) கட்டுமானக் குழுவும் இணைந்து கோவிலை நிர்மாணிப்பதற்கான பொறுப்பான ஒப்பந்தக்காரர்களாக இருந்தனர். 26.5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் கோயில் வளாகம் முக்கிய வழிபாட்டுத் தலம், நூலகம், மாநாட்டு மண்டபம் மற்றும் நிர்வாக கட்டிடம் ஆகியவற்றைக் கொண்ட துணைத் தொகுதி ஆகியவற்றைக் கொண்டது. 2003 இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட தகவல் மையம் மற்றும் 2017 இல் திறக்கப்பட்ட கல்வி மையம் ஆகியவை வளாகத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டவையாகும். [15] இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. மேலும் அதன் புறப்பரப்பு வெள்ளைப் பளிங்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலமும் அதனைச் சூழ்ந்துள்ள ஒன்பது தூண்களும், தோட்டங்களும் 26 ஏக்கர் (105,000 m²; 10.5 ha) நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
உட்கட்டமைப்புகள்
[தொகு]தாமரைக் கோயிலானது, தனித்தனியாக நிற்கும் 27 பளிங்குக் கற்களாலான அமைப்புகளினால் மிதந்து கொண்டிருக்கும் பாதி திறந்த தாமரை மலர், அதன் இலைகளால் சூழப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த கட்டிடத்தில் ஒரு சுற்றுக்கு ஒன்பது என மூன்று தொகுதியாக அடுக்கப்பட்டாற்போன்று ஒன்பது பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.[1] with nine doors opening onto a central hall with a height of slightly over 34 meters[1] 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்தத் தாமரைக்கோயிலில் சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மத்திய மண்டபமும்[1] அதில் ஒன்பது கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1300 பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.[16],[3] 2,500 பேர் வரை நிற்கத் தகுதி வாய்ந்ததாகும். கோடையில் வெளிப்புற வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும் அதே வேளையில், மேற்கட்டமைப்பைச் சுற்றியுள்ள ஒன்பது குளங்கள் காரணமாக உட்புற இடம் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாக உள்ளது, இது கோயிலின் அழகியலைக் கூட்டும் அதே வேளையில், கீழ் வைக்கப்பட்டுள்ள பல்வேறு குழாய்கள் வழியாக குளிர்ந்த காற்று உள்ளே நுழைய அனுமதிக்கிறது. வழிபாட்டு மண்டபத்தின் உள்ளே படிக்கட்டுகள், கான்கிரீட் அமைப்புகள் ஆகியவற்றைக் குளிர்விக்கவும், கோயிலுக்குள் வெப்பம் பரவாமல் தடுக்கவும், குவிமாடத்தில் வெளியேற்றும் மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மற்ற விசிறிகள் வழிபாட்டு மண்டபத்தில் இருந்து குளிர்ந்த அடித்தளத்திற்கு காற்றை புனல்போல வீசுகின்றன, அங்கு அது குளிர்ந்து மறுசுழற்சி செய்யப்படுகிறது.
கட்டுமான அமைப்பு
[தொகு]இக்கோயிலுக்குத் தேவையான 10,000 சதுர மீட்டர் பளிங்குக் கற்கள் கிரீஸிலிருந்து எடுத்து வரப்பட்டு, இத்தாலியில் கட்டுமானத்திற்கு தேவையான வடிவம், அளவில் வெட்டப்பட்டது. இந்தப் பளிங்கினை உட்புறமும் வெளிப்புறமும் இணைக்க, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்ட கொக்கிகள், இணைப்புக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
தாமரையைச் சுற்றிலும் வளைந்த நடைபாதைகள் உள்ளன. தாமரையின் மிதக்கும் இலைகளைக் குறிக்க ஒன்பது குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைச் சுற்றியுள்ல தூண்கம்பிகள், பாலங்கள் மற்றும் படிக்கட்டுகள். ஒரு வெளிப்படையான அழகியலை வழங்குகின்றன எனினும் அக்க்குளங்கள் கட்டிடத்தின் குளிர்ச்சி, காற்றோட்டத்திற்கு உதவுகின்றன. தாமரைக்கோயிலின் வெளிப்புறமிருந்து பார்த்தல் இதன் இதழ்கள் அல்லது இலைகள் மூன்று தொகுதியாகக் காணப்படும். இவை அனைத்தும் மெல்லிய கான்கிரீட் ஓடுகளால் ஆனது.
இதில் வெளிப்புறமாக திறந்தவாறு இருக்கும் இதழ்கள் 'நுழைவிதழ்கள்' என்று அழைக்கப்படும். இந்த அமைப்பானது ஒன்பது இதழ்கள் கொன்ட வெளிப்புற தொகுப்பாகும். இவை வெளிப்புறமாகத் திறந்து, மையமண்டபத்தைச் சுற்றி ஒன்பது நுழைவாயில்களை உருவாக்குகிறது. இந்த ஒன்பது நுழைவாயில்கள் அனைத்து மக்களுக்குமான அதன் திறந்த தனமையைக் குறிக்கிறது. ஒன்பது இதழ்களின் அடுத்த தொகுப்பு, 'வெளிப்புற இதழ்கள்' என்று அழைக்கப்படும். இவை உள்நோக்கி வளைந்தவண்ணம் (பாதி கூம்பியபடி) ஒன்பது இதழ்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அமைப்புகளும் வெளிப்புற மண்டபத்திற்கான கூரையாக அமைகின்றன. மூன்றாவது தொகுப்பானது 'உள் இதழ்கள்'என்று அழைக்கப்படுகிறது, இது ஓரளவு குவிந்த ஒன்பது இதழ்களால் மூடப்பட்டுள்ளது. இதன் முனைகள் மட்டுமே ஓரளவு திறந்த மொட்டு போல் திறந்தபடி உள்ளன. இந்த பகுதி, மற்ற பகுதிகளை விட உயர்ந்து, பிரார்த்தனை மண்டபத்தின் முக்கிய கட்டமைப்பை உருவாக்குகிறது. இதழ்கள் பிரிந்து செல்லும் மேற்பகுதிக்கு அருகில், பக்கவாட்டாக ஒன்பது கதிர்போன்ற விட்டங்கள் அதனைத் தாங்கி நிற்கிறன. தாமரை உச்சியில் திறந்திருப்பதால், இந்த விட்டங்களின் மட்டத்தில் கண்ணாடியால் வேயப்பட்ட எஃகு கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது மழையிலிருந்து பாதுகாப்பை வழங்குவதோடு வழிபாட்டு மண்டபத்திற்குள் இயற்கை ஒளி நுழைவதை எளிதாக்குகிறது. [17] இதன் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட தோட்டமானது மழைநீர் சேமிப்பு மற்ரும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
தாமரைக்கோவிலின் மொத்த மின் பயன்பட்டில் 500 கிலோவாட் மின்சாரத்தினை கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி சேமிப்பு மின்கலன்கள் மூலம் உபெறப்படுகிறது.[18] இதன் மூலம் கோவிலுக்கு மின்சாரக் கட்டணச் செலவு சேமிக்கப்படுகிறது. டெல்லியில் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் முதல் கோயில் இதுவாகும்.[18][19]
சுற்றுலா
[தொகு]1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக டெல்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத் தலம் திறந்து வைக்கப்பட்டது. அதுமுதல், 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை இங்கு 50 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உலகில் மிகவும் அதிகமாக வருகை தரப்பட்ட கட்டடங்களில் இதுவும் ஒன்றானது.[20] அந்த ஆண்டுகளில் அதனைப் பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ் மகால் ஆகியவற்றின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை முந்தியது. இந்து புனித நாட்களின் போது இங்கு 150,000 பேருக்கும் அதிகமானோர் வருகை தருகின்றனர்; ஒவ்வொரு ஆண்டும் நான்கு மில்லியன் பார்வையாளர்கள் இங்கு வருகை தருகின்றனர் (ஒவ்வொரு நாளும் சுமார் 13,000 மக்கள் அல்லது ஒவ்வொரு நிமிடமும் 9 பேர் இங்கு வருகை தருகின்றனர்).
இந்த வழிபாட்டுத் தலம் "தாமரைக் கோவில்" எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையான துர்கா பூஜையின் போது தாமரைக் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு அதன் பல்வேறு உருவப்படிமங்கள் அமைக்கப்படுகின்றன. பெண் கடவுள் துர்கா தேவியை வணங்குவதற்காக தற்காலிக அமைப்புகள் இங்கு அமைக்கப்படுகின்றன.[21] சிக்கிமில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தரமான இந்து காலடி வழிபாட்டு கோவிலின் உருப்படிமம் இருக்கிறது.[22]
தனிச்சிறப்புகள்
[தொகு]உலகெங்கிலும் பகாய் நம்பிக்கை பின்பற்றப்படும் ஒன்பது கோவில்களில் இந்தியாவில் உள்ள தாமரைக்கோவிலும் ஒன்றாகும்.[23] தில்லியில் மிகவும் சிறந்த மற்றும் வியப்பூட்டும் கட்டுமானமாக இருப்பதால் இது தில்லியின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.[24] அதன் கட்டிடக் கலை வடிவமைப்பிற்காகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் பல்வேறு சர்வதேச விருதுகளை இந்த கோவிலுக்கு அளித்துள்ளன. தொழில் ரீதியான கட்டுமானவியல், நுண்கலை, மதம், அரசு சார்ந்த மற்றும் பிற தரப்புகளிலும் இக்கோயில் பரவலான ஈர்ப்பினைப் பெற்றுள்ளது.
விருதுகள்
[தொகு]- 1987 ஆம் ஆண்டு, பாஹா வழிபாட்டுத் தலத்தின் கட்டடக் கலைஞரான ஈரானில் பிறந்த பாரிபோர்ஸ் சாபாவுக்கு, "மலரின் அழகுக்கு ஈடாகப் போட்டியிடும் மற்றும் அதன் காட்சித் தாக்கத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" கட்டடத்தை உருவாக்கியதற்காக ஐக்கிய இராட்சியம்-சார்ந்த கட்டமைப்புப் பொறியாளர்கள் நிறுவனத்திடம் சமயக் கலை மற்றும் கட்டடக்கலையில் மிகவும் சிறப்பான செயல்பாட்டுக்கான விருதினைப் பெற்றார்.[25]
- 1987 ஆம் ஆண்டு , வாஷிங்டன், D.C. இல் கட்டிடக் கலைஞர்களின் அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த சமயம், கலை மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றுக்கான மதநல்லிணக்க மன்றமானது புதுதில்லிக்கு அருகில் உள்ள பகாய் வழிபாட்டுத் தலத்தின் வடிவமைப்புக்காக திரு. எஃப். சாபாவுக்கு 1987 ஆம் ஆண்டில் "சமயக் கலை மற்றும் கட்டடக்கலையில் சிறப்பான செயல்பாட்டுக்கான" அதன் முதல் கெளரவ விருதை வழங்கியது.[4]
- 1988 ஆம் ஆண்டு, வட அமெரிக்காவின் ஒளிமயமான பொறியியல் சமூகம் வெளிப்புற ஒளியமைப்புக்கான சிறப்புச் சான்றாய் அமைதல் பிரிவில் பால் வாட்டர்பரி வெளிப்புற ஒளியமைப்பு வடிவமைப்பு விருதை வழங்கியது[4]
- 1989 ஆம் ஆண்டு, மஹாராஸ்டிரா-இந்தியா சேப்டர் ஆஃப் த அமெரிக்கன் கான்கிரிட் இன்ஸ்டியூட்டில் (Maharashtra-India Chapter of the American Concrete Institute) இருந்து "சிறப்பான கான்கிரீட் கட்டமைப்பிற்கான" விருதினைப் பெற்றது.[4]
- 1994 ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் பதிப்பில் அதன் 'கட்டடக்கலை' பிரிவில் அக்காலத்தின் ஈடுயிணையற்ற சாதனையாக அக்கோவிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.[4]
- 2000 ஆம் ஆண்டு, சீனாவின் கட்டடக்கலை அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட "வேர்ல்ட் ஆர்கிடெக்ச்சர் 1900-2000: எ கிரிட்டிகல் மொசைக், வால்யூம் எய்ட், சவுத் ஆசியா"வில் (World Architecture 1900-2000: A Critical Mosaic, Volume Eight, South Asia) 20வது நூற்றாண்டில் 100 ஒழுங்குமுறைப் பணிகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிட்டிருந்தது.[26]
- 2000 ஆம் ஆண்டு, தாமரைக் கோவிலின் கட்டடக்கலை நிபுணர், பாரிபோர்ஸ் சாபாவுக்கு வியன்னாவில் குளோப்ஆர்ட் அகாடெமி அதன் "குளோப்ஆர்ட் அகாடெமி 2000" விருதை வழங்கியது. "20வது நூற்றாண்டு தாஜ்மகாலாக இதன் சேவையின் பரிமாணம், அனைத்து நாட்டு மக்கள், சமயங்கள் மற்றும் சமுதாயப் படிநிலைகள் ஆகியவற்றில் உலகளவில் மற்ற கட்டடக்கலை நினைவுச்சின்னங்களால் முடியாதளவிற்கு விரிவாக ஒற்றுமை மற்றும் இணக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக" இந்த விருதினை வழங்குவதாக அது குறிப்பிட்டது.[26]
வெளியீடுகள்
[தொகு]கட்டுரைகள்
[தொகு]2003 ஆம் ஆண்டு முதல் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இக்கோயில் இடம்பெறுகிறது. கட்டடக் கலைஞர்கள் மற்றும் மற்றவர்களால் கட்டமைப்பைப் பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் போன்ற வடிவங்களில் கோயிலைப் பற்றியத் தகவல்கள் அடங்கிய 500க்கும் மேற்பட்ட வெளியீடுகளை பாஹாய் உலக நிலைய நூலகம் (The Baha'i World Centre Library) தொகுத்து வைத்துள்ளது.[4]
- 2000 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் பிரான்சின் "ஆக்சுவலிட் டெஸ் ரெலிஜியன்ஸ்" பத்திரிகையில் "Les religions et leurs chef-d'œuvres" (சமயங்கள் மற்றும் அதன் தலைசிறந்த படைப்புகள்) என்று அழைக்கப்பட்ட சிறப்புப் பதிப்பில் தாமரைக் கோயிலைப் பற்றிய நான்கு-பக்கக் கட்டுரை வெளியானது.[27][4]
- 2001 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றது
- 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ஆர்கிடெக்ச்சர் (பத்திரிகை)
- லைட்டிங் டிசைன்+அப்ளிகேசன் பகுதி 19, எண். 6, வட அமெரிக்காவின் ஒளிமயமான பொறியியல் அமைப்பின் "இருபதாம் நூற்றாண்டின் தாஜ்மகால்" கட்டுரை
- 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாத வால்பேப்பர்*
- 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி[4] மற்றும் டிசம்பர் மாத பொரொகிரசிவ் ஆர்கிடெக்ச்சர்
- கென்னத் ஃபிராம்ப்டன் எழுதி ஸ்பிரிங்கர்-வெர்லோக் வைன் வெளியிட்ட வேர்ல்ட் ஆர்கிடெக்ச்சர்: எ கிரிட்டிகல் மொசைக் 1900-2000, பகுதி 8 (World Architecture: A Critical Mosaic 1900-2000, Vol 8). நியூயார்க் - "சிறந்த எழிலின் ஆற்றல்மிகு உருவம் - நகரின் ஒரு முக்கிய அடையாளச்சின்னம்".
- ஃபெயித் & ஃபார்ம் - கட்டிடக் கலைஞர்களின் அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த IFRAA இன் இதழ், பகுதி XXI "கட்டுமானம் மற்றும் ஏற்புடைய வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றின் அபாரமான அருஞ்செயல்"
- ஸ்ட்ரக்ச்சுரல் எஞ்ஜினியர், UK (வருடாந்திர) டிசம்பர் 1987
- 1989 ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா ஈரானிகா
புத்தகங்கள்
[தொகு]- 1992 ஆம் ஆண்டு, ஃபாரெவர் இன் ப்ளூம்: த லோட்டஸ் ஆஃப் பாஹாபூர் (Forever in Bloom: The Lotus of Bahapur) - புகைப்படங்கள் ரகு ராய், எழுத்து ரோகர் ஒயிட், டைம் புக்ஸ் இன்டர்நேசனல்
- 2002 ஆம் ஆண்டு, த டானிங் பிளேஸ் ஆஃப் த ரிமம்பரன்ஸ் ஆஃப் காட் (The Dawning Place of the Remembrance of God), தாமஸ் பதிப்பகம், 2002
அஞ்சல்தலைகள்
[தொகு]- 6.50 ரூபாய் தபால் அஞ்சல்தலைகளானது இந்தியாவில் புதுதில்லியில் உள்ள பாஹாய் வழிபாட்டுத் தலத்தைக் கொண்டுள்ளன[28]
இசை
[தொகு]- கோவில் அர்ப்பணிப்புச் சேவை (1986).[29]
- 1987 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஓண்டாரியோவில் டோன்'ட் பிளிங்க் மியூசிக், இன்க்குக்காக ஜிவெல் இன் லோட்டஸ் என்ற ஆல்பத்தை கீபோர்டு கலைஞர் ஜேக் லென்ஸ் தயாரித்தார். இதில் சீல்ஸ் & க்ரோஃப்ட்ஸ், லேலி எரிக்ஸ் மற்றும் பலரது பாடல்கள் இடம்பெற்றன.[30]
பெருமளவு பார்வையாளர்கள்
[தொகு]- "CNN அறிக்கையின் படி உலகில் பெருமளவு பார்வையிடப்பட்ட கட்டடங்கள்" வரிசையில் இதுவும் ஒன்றாகும். [31]
- "இந்தியாவில் பெருமளவு பார்வையிடப்பட்ட கட்டடம், ஆண்டுக்கு சுமார் 4.5 மில்லியன் பார்வையாளர்களுடன் தாஜ் மகாலையும் முந்தியது".[32]
குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள்
[தொகு]- பண்டிட் ரவி ஷங்கர் சித்தார் மேஸ்ட்ரோ
- டான்சானியா, ஹங்கேரி மற்றும் பனாமா ஆகியவற்றின் தூதர்கள்
- பெருமுடா, ஹங்கேரி, இந்தியா, ஐவரி கோஸ்ட், நேபாளம், USSR/ரஸ்யா, ரோமானியா, சிங்கப்பூர், தாஜிக்ஸ்தான், ஏமன், யுகோஸ்லவியா, ஜாம்பியா ஆகியவற்றில் இருந்து அரசு அதிகாரிகள் (அமைச்சர்கள், பிரதமர்கள்)
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் உறுப்பினர்கள்
- காலம் சென்ற இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி
- நேபாள இளவரசர் நிரஞ்சன் ஷா
- டாக்டர் உடோன் முச்டர் ராஃபேய், மண்டல இயக்குநர், உலக சுகாதார அமைப்பு
- ஐஸ்லேண்டின் அதிபர் ஓலாஃபூர் ராக்னர் கிரிம்சன் அதிகாரப்பூர்வமாக பார்வையிட்ட முதல் தலைவர் ஆவார்[35]
- அம்ஜத் அலி கான்[36] பாரம்பரிய இந்திய இசையமைப்பாளர்
- ரோமானிய இளவரசி மார்கரிட்டா மற்றும் அவரது கணவர் இளவரசர் ராடு வோன் ஹோனன்சோல்லரன்-வெரிங்கன்
- ஸ்லோவோக் குடியரசின் முதல் பெண்மணி, சில்வியா காஸ்பரோவிகோவா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Architecture of the Baháʼí House of Worship". National Spiritual Assembly of the Baháʼís of India. 2020. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020.
- ↑ "Bahá'í Houses of Worship". Bahá'í International Community. 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-03-09.
- ↑ 3.0 3.1 Galloway, Lindsey. "The world's most beautiful places of worship". BBC Travel. BBC. பார்க்கப்பட்ட நாள் 18 June 2016.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 "Baháʼí Houses of Worship, India: The Lotus of Bahapur". Baháʼí Association at The University of Georgia. 9 February 2003. Archived from the original on 7 May 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
- ↑ https://dmsoutheast.delhi.gov.in/tourist-place/lotus-temple-delhi/
- ↑ https://bahaihouseofworship.in/architecture/
- ↑ Faizi, Gloria (1993). Stories about Bahá'í Funds. New Delhi, India: Bahá'í Publishing Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185091765.
- ↑ "Encore Presentation: A Visit to the Capital of India: New Delhi". Cable News Network. 14 July 2001. http://transcripts.cnn.com/TRANSCRIPTS/0107/14/i_hs.00.html.
- ↑ Perment Delegation of India to UNESCO 2014.
- ↑ 10.0 10.1 Rafati, V.; Sahba, F. (1989). "Bahai temples". Encyclopædia Iranica.
- ↑ `Abdu'l-Bahá (1982) [1912]. The Promulgation of Universal Peace (Hardcover ed.). Wilmette, Illinois, USA: Bahá'í Publishing Trust. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0877431728.
- ↑ https://bahaihouseofworship.in/architecture/
- ↑ "["Gardens of Worship"]". ["Recreating Eden"]. 2006. No. 30, season 03.
- ↑ https://dmsoutheast.delhi.gov.in/tourist-place/lotus-temple-delhi/
- ↑ https://bahaihouseofworship.in/plan-a-visit/
- ↑ "Bahá'í Houses of Worship". Bahá'í International Community. 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-03-09.
- ↑ https://bahaihouseofworship.in/plan-a-visit/
- ↑ 18.0 18.1 Sharma, Sameer (20 October 2015). "Baha'i House of Worship -Lotus Temple is on Solar Energy now". Ohindore.com இம் மூலத்தில் இருந்து 30 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160530210839/http://ohindore.com/indore-latest/bahai-house-of-worship-lotus-temple-is-on-solar-energy-now/.
- ↑ https://bahaihouseofworship.in/plan-a-visit/
- ↑ "கனடாவில் பகாய் சமூகம்". Archived from the original on 2004-10-27. பார்க்கப்பட்ட நாள் 2010-01-28.
- ↑ Chakraborty, Debarati. "Newsline 28 September 2006: Here's Delhi's Lotus Temple for you at Singhi Park!". Archived from the original on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.
- ↑ விக்கிமேப்பியாவில் செயற்கைக்கோள் உருவம்.
- ↑ https://www.britannica.com/topic/Lotus-Temple
- ↑ https://tamil.nativeplanet.com/noida/attractions/lotus-temple/#overview
- ↑ ஆன் ஆர்கிடெக்ச்சுரல் மார்வெல் அனில் சார்வால்லால், திரிபுரா, சண்டிகரில் வெளியிடப்பட்டது.
- ↑ 26.0 26.1 இந்தியாவின் பாஹாய் கோவில், விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெறுவதைத் தொடர்கிறது புதுதில்லி, 5 டிசம்பர் 2000 (BWNS)
- ↑ கட்டடக்கலை நிபுணர்களின் வலைத்தளம்(enter->publications)
- ↑ பாஹாய் அஞ்சல்தலைகள்
- ↑ பாஹாய் பிரார்த்தனைகள் மற்றும் பாடல்கள்
- ↑ ஜிவெல் இன் த லோட்டஸ்
- ↑ "கனடியன் பஹாயிஸ் இன் த நியூஸ் - ஃபாரிபோர்ஸ் சாபா". Archived from the original on 2004-10-27. பார்க்கப்பட்ட நாள் 2010-01-28.
- ↑ கம்மம்மரேசன்ஸ் இன் சிகாகோ ஹைலைட் த இம்மென்ஸ் இம்பேக்ட் ஆஃப் ஹவுஸ் ஆஃப் ஒர்ஷிப் ஒன்கன்ட்ரி, பகுதி 15, வெளியீடு 1 / ஏப்ரல்-ஜூன் 2003
- ↑ ஆன் ஆர்கிடெக்ச்சுரம் மார்வெல் பேராசிரியர் அனில் சார்வால்லால் எழுதப்பட்டது. முதலில் திரிபுரா, சண்டிகரில் வெளியிடப்பட்டது
- ↑ பாஹாய் கோவிலைப் பாராட்டும் மாறுபட்ட பார்வையாளர்கள்
- ↑ பிரெசிடண்ட் ஆஃப் ஐஸ்லேண்ட் விசிட்ஸ் பாஹா'ய் டெம்பிள் இன் நியூ டெல்லி பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம் புதுதில்லி, இந்தியா, 14 நவம்பர் 2000 (BWNS)
- ↑ அம்ஜத் அலி கான், பாரம்பரியமான இந்திய இசை வல்லுநர், தாமரைக் கோவிலில் இசை நிகழ்ச்சி நடத்துதல் புதுதில்லி, 22 நவம்பர் 2000 (BWNS