தானே தூய்மையாதல் கண்ணாடி
தானே தூய்மையாதல் கண்ணாடி (self-cleaning glass) என்பது, மழையின் போது தானே தூய்மையாகிக் கொள்ளும் வகையைச் சேர்ந்த கண்ணாடியைக் குறிக்கும். தற்காலத்தில் கட்டிடங்களின் பெருமளவு வெளிப்புறப் பரப்புக்கள் கண்ணாடிகளினால் ஆனவையாக இருப்பதால் தூசி முதலியன அடைந்து தூய்மை கெடுவதும், மழையின் போது மழை நீருடன் கலக்கும் இத் தூசிகள் கண்ணாடி வழியே வழிந்து செல்லும்போது அழகற்ற தன்மையைக் கொடுக்கும் வரிவரியான அடையாளங்கள் ஏற்படுவதும் கட்டட முகப்புக்களைப் பேணுவதை கடினமாக்குகின்றன. இது அதிக செலவில் கட்டிட முகப்புக்களை அடிக்கடி தூய்மைப்படுத்தும் தேவையை உருவாக்குகின்றது. இப்பின்னணியில் தானே தூய்மையாதல் கண்ணாடிகளின் உருவாக்கம் கண்ணாடியிடலில் ஒரு மைல்கல் எனலாம். கண்ணாடிகளை உற்பத்தி செய்யும் போதே அதன் மேற்பரப்பில் குறித்த வகைப் பூச்சுக்களைப் பூசுவதனால் இவ்வகைக் கண்ணாடிகள் உருவாக்கப்படுகின்றன.[1][2][3]
பூச்சுக்கள்
[தொகு]தானே தூய்மையாகும் தன்மையைக் கொடுப்பதற்காகப் பயன்படுத்தும் பூச்சுக்களை இரண்டு வகைகளுள் அடக்கலாம்.
- நீர்தள்ளு பூச்சுக்கள்
- நீர்கவர் பூச்சுக்கள்
நீர்தள்ளு பூச்சுக்கள்
[தொகு]இவ்வகைப் பூச்சுக்கள் அவற்றின் பெயருக்கு ஏற்ப நீரைத் தமது மேற்பரப்பில் ஒட்டவிடாது தள்ளுகின்றன. இதனால் மழையின்போது மழை நீரும் அதனுடன் கலக்கும் தூசியும் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு காய்ந்துவிடாமல் வழிந்தோடிவிடுகின்றன. எனினும் பெரும்பாலான இவ்வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகளுக்குப் போதிய அளவு நீர்தள்ளும் தன்மையைக் கொடுப்பதில்லை. இதனால் தூசியுடன் கலக்கும் நீர் முற்றாகவே வழிந்துவிடாமல் கண்ணாடி மேற்பரப்பில் காய்ந்துவிடுவதற்கான சாத்தியங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இப்பூச்சுக்கள் கண்ணாடிகளுக்கு இலகுவாகத் தூய்மையாக்கத்தக்க தன்மையைக் கொடுக்கின்றன.
நீர்கவர் பூச்சுக்கள்
[தொகு]இவ்வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகள் தூய்மையாவதற்கு முதல் வகையிலும் வேறான முறையொன்றைப் பயன்படுத்துகின்றன. இவ்வகையின் பெயர் குறித்துக் காட்டுவதுபோல் நீர் மூலக்கூறுகளைக் கவர்வதன் மூலம் கண்ணாடியில் விழும் நீர் கண்ணாடியில் பரவிச் செல்ல உதவுகின்றன. தூசி கலந்த நீர் கண்ணாடி முழுவதும் சீராகப் பரவாமல் குறித்த வழிகளில் வழிந்தோடுவதாலேயே காயும்போது அழுக்குக் கோடுகள் உருவாகின்றன. இவ்வகைப் பூச்சுக்கள் நீரைச் சீராகப் பரவச் செய்வதால் கண்ணாடி மேற்பரப்பில் உருவாகும் மெல்லிய நீர்ப்படலம் அழுக்கு அடையாளங்களை உருவாக்காமல் விரைவில் காய்ந்து விடுகிறது. நீர்கவர் பூச்சுக்கள் முதல்வகைப் பூச்சுக்களிலும் கூடிய நிலையான தன்மை கொண்டவை. எனினும் மழை நீருடன் கலந்திருக்கும் உலோக அயனிகள் இவற்றின் செயல்திறனைப் படிப்படியாகக் குறைத்துவிடுவது இப்பூச்சுக்களின் ஒரு குறைபாடு ஆகும்.
குறைபாடுகள்
[தொகு]இவ்வகைக் கண்ணாடிகளின் தூய்மையாதல் தன்மை மழையில் தங்கியிருப்பதால். அடிக்கடி மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே இவை முறையாகப் பயன்படக்கூடும். மிக அரிதாக மழை பெறும் மையக் கிழக்குப் போன்ற பகுதிகளில் இக்கண்ணாடிகளினால் அதிக பயன் விளையும் சாத்தியம் இல்லை. எனினும் கண்ணாடி உற்பத்தியாளர்கள் இவ்வகைக் கண்ணாடிகளை மையக் கிழக்கு நாடுகளிலும் விற்பனை செய்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marmur, A. Langmuir 20, 3517–3519, (2004).
- ↑ Roach, P., Shirtcliffe, N. J. & Newton, M. I. Soft Matter 4, 224–240, (2008).
- ↑ Paz, Y.; Luo, Z.; Rabenberg, L.; Heller, A. (1995-11-01). "Photooxidative self-cleaning transparent titanium dioxide films on glass" (in en). Journal of Materials Research 10 (11): 2842–2848. doi:10.1557/JMR.1995.2842. பன்னாட்டுத் தர தொடர் எண்:2044-5326. Bibcode: 1995JMatR..10.2842P. https://doi.org/10.1557/JMR.1995.2842.