தவறிய நாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு நாடு நல்ல முறையில் தனது ஆட்சிப்பகுதிகளில் கட்டுபாட்டை நெறிப்படுத்த முடியாமல், மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்க மூடியாமல், மனித உரிமைகளைப் பேண முடியாமல், வெளி நாடுகளுடன் ஊடாட முடியாமல் போனால் அதை தவறிய நாடு என்பர். ஊழல், குற்றச் செயல்கள் இந்த நாடுகளில் பெருகி காணப்படும். சட்டம், காவல், நிர்வாகம் போன்ற துறைகளூம் திறம்பட செயல்படா. மேலும், ஒரு நாடு தவறிவிட்டது என அறிவிப்பது, பொதுவாகச் சர்ச்சைக்கு உரியதாகும். இது குறிப்பிடத்தக்க பிரதேச அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
வரைவிலக்கணம்[தொகு]
மக்ஸ் வெபர் என்பவரின் கருத்துப்படி, தனது எல்லைகளுக்குள் முறைவழியான (legitimacy) நேரடிப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான தனியுரிமையைத் தக்கவைத்திருக்கும் நாடு வெற்றிபெற்றது எனலாம். பகுதித் தலைவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதம் போன்றவற்றால் இவ்வாறான ஒரு நிலை இல்லாது இருக்குமாயின் அந் நாடு ஒரு நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுத் தவறிய நாடு ஆகிறது. ஒரு அரசு, "பலத்தைப் பயன்படுத்துவதற்கான முறைவழித் தனியுரிமையை" தக்கவைத்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருப்பதால், ஒரு நாடு தவறிவிட்டது என்பதைத் துல்லியமாகக் கூறுவதற்கான நிலை தெளிவானதாக இல்லை. இப் பிரச்சினை முறைவழி என்றால் என்ன என்பது குறித்ததும் ஆகும். முறைவழி என்று குறிப்பிடும்போது வெபர் எதனைக் கருதினார் என்பதைப் புரிந்துகொண்டால் இது குறித்த பிரச்சினையைத் தீர்க்கலாம். நேரடிப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான வளங்களை அரசு மட்டுமே கொண்டிருக்கும் என்பது அவரது தெளிவான விளக்கம். இதன்படி, தனியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நாட்டுக்கு முறைவழியுரிமை தேவயில்லை, ஆனால் அத் தனியுரிமையைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு முறைவழியுரிமை தேவைப்படும். உயர்ந்த குற்ற வீதம், அளவு கடந்த அரசியல் ஊழல்கள், விரிவான முறைசாராச் சந்தை, வலுவற்ற நீதித்துறை, அரசியலில் படைத்துறைத் தலையீடு, மரபுவழித் தலைமைகள் தம் பகுதிகளில் அரசிலும் கூடிய செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பண்பாட்டு நிலை போன்ற பல பிற காரணிகளினால், அரசு சட்டத்தைப் பாதுகாப்பதில் தனது பலத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாமல் வலுவிழந்திருக்கும் நிலையில் இருக்கும் நாட்டையும் தவறிய நாடு எனலாம்.
தவறிய நாடுகள் சுட்டெண்[தொகு]
அமெரிக்காவின் சிந்தனையாளர் குழுவொன்றான அமைதிக்கான நிதியம் என்பதும், ஃபாரின் பாலிசி (Foreign Policy) என்னும் சஞ்சிகை வெளியீட்டாளரும் இணைந்து, 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், தவறிய நாடுகள் சுட்டெண் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதன் கீழ், ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்புரிமை கொண்ட இறைமையுள்ள நாடுகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன. பல ஆட்சிப்பகுதிகள், அவற்றின் அரசியல் நிலையும், ஐநா உறுப்புரிமையும் அனைத்துலகச் சட்டங்களின் மூலம் உறுதி செய்யப்படும் வரை, இப் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளன. தாய்வான், பாலஸ்தீனப் பகுதிகள், வடக்கு சைப்பிரஸ், கொசோவோ, மேற்கு சகாரா என்பன இத்தகையவை ஆகும்.
தரநிலைகள் 12 சுட்டிகள் தொடர்பில் நாடுகள் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சுட்டிக்கும் 0 தொடக்கம் 10 வரை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதில் 0 மிகக் கூடிய உறுதிப்பாட்டையும், 10 மிகக் குறைந்த உறுதிப்பாட்டையும் குறிக்கின்றன.
தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்[தொகு]
பாக்க: தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (குறிப்பு இது 2007 க்கான தரவுகள்)