தரவு மையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணினி, அதனுடன் தொடர்புடைய பொருட்கள் ஆகியவற்றை வைத்திருக்கும் இடமே தரவு மையம் (data center) எனப்படும். கணினிக்குத் தேவையான நினைவகங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் தரவு மையத்தில் வைக்கப்படலாம். இங்கு பாதுகாப்பு சாதனங்கள், கட்டுப்படுத்தும் கருவிகள் உட்பட்டவற்றையும் வைக்கலாம்.
அமைப்பு[தொகு]
சில கணினிகளை வைத்திருக்க ஒரு அறை போதும். கணினி, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால் தரவு மையத்திற்கு அதிக இடம் தேவைப்படும். கணினிகளின் அளவைப் பொருத்து, கட்டிடத்தின் தளங்களையோ, ஒரு கட்டிடம் முழுதுமோ தேவைப்படும். தரவு மையங்களில் வைக்கப்பட்டுள்ள சாதனங்களில் பெரும்பான்மையானவை வழங்கி எனப்படும் சர்வர்கள். சர்வர்களின் அளவு வேறுபடும். இவற்றை அடுக்குகளில் வைத்திருப்பர். இதனால் இவற்றின் பயன்பாடு எளியது. ஆயிரக்கணக்கான சர்வர்களை சேர்த்து பெரிய பெட்டியில் வைத்திருப்பர். இத்தகைய சர்வர்கள் பெரிய அளவிலான தரவு மையங்களில் வைக்கப்படும். சர்வர்களில் மாற்றம் தேவைப்பட்டால், மொத்த பெட்டியையும் மாற்றிடுவர்.
இடத்தை தேர்வு செய்தல்[தொகு]
சில தேவைகளின் அடிப்படையில் தரவு மையத்திற்கான இடம் தேர்வு செய்யப்படும். ஆற்றல் மூலம், தொலைத்தொடர்பு வசதிகள், வலையமைப்பு, போக்குவரத்து வசதி, அவசர உதவிகள் ஆகியவற்றைப் பெற்றுள்ள இடம் தேர்வு செய்யப்படும். இதன் மூலம், கணிசமான அளவில் செலவு குறையும். எடுத்துக்காட்டாக, கணினி, சர்வர் போன்ற சாதனங்கள் அதிக நேரம் இயங்கினால் சூடாகிவிடுகின்றன. இவற்றைக் குளிர்விக்க, சாதனங்கள் பயன்படுத்துகின்றன. குளுமை நிறைந்த பகுதியில் தரவு மையம் அமைக்கப்பட்டால், குளிர்விப்பதற்கான செலவு மிச்சமாகும். இதைப் போன்றே மற்ற காரணங்களைப் பொருத்தே தரவு மையம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வசதிகள்[தொகு]
- மின்சார வசதி: தரவு மையங்களில் உள்ள கருவிகள் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். எனவே இவற்றிற்கு மின்சாரத்தை வழங்க மின்கலங்கள், டீசல் டர்பைன் உள்ளிட்டவற்றின் மூலம் மின்சாரம் வழங்கப்படும்.
- எதிர்பாராத மின் தடையிலிருந்து பாதுகாக்க, அனைத்துக் கருவிகளும் இரண்டு மின்சார இணைப்புகளுடன் இணைக்கப்படும். ஒன்று முடங்கினாலும், இன்னொன்றின் மூலம், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும்.
- மின்சாரக் கடத்திகள் எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் தயாரிக்கப்பட்டிருக்கும்.
- மின் தடை ஏற்பட்டால் அதற்கென் உள்ள உணரிகள் (சென்சார்கள்) உடனடியாக தகவல் தெரிவிக்கும்.
- பாதுகாப்பு: தரவு மையங்களுக்கு செல்ல அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனைத்து செயல்பாடுகளும் ஒளிப்படக் கருவி (வீடியோ கேமரா) மூலம் கண்காணிக்கப்படும். பாதுகாப்பு அதிகாரிகள் எல்லா நேரமும் ரோந்து செல்வர்.
- தீயில் இருந்து பாதுகாப்பு: கணினி உள்ளிட்ட சாதனங்கள் தீயினால் பாதிக்கப்படாதவாறு, பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும். புகையைக் கண்டறியும் உணரிகள் பொருத்தப்படும். புகை பரவினால், இவை அபாய ஒலி எழுப்பும். தரவு மையங்களில் தீயணைப்புக் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும். மேலும் நீர்க்கசிவு ஏற்பட்டாலும் அதைத் தெரிவிக்கும் உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும்.