தரவுப் பாட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4 PCI எக்சுபிரசு பாட்டை அட்டைத் துளைகள் (மேலிருந்து கீழ்: x4, x16, x1, x16), கீழே உள்ளது ஒரு பழைய 32 பிட் பாட்டை அட்டைத் துளையாகும்.

கணினி வடிவமைப்பில் தரவுப் பாட்டை அல்லது பாட்டை என்பது கணினியின் உள்ளே உள்ள கூறுகளுக்கிடையேயோ கணினிகளுக்கிடையேயோ தரவுகளை மாற்றும் ஒரு துணை அமைப்பாகும். முன்பு கணினியில் பாட்டைகள் என்பவை பல்வேறு இணைப்புகளுடைய இணையான மின்னணு இணைப்புகள் (பாட்டைகள்) எனப்பட்டன. நவீன பாட்டைகள் மின்னணு இணைப்புகளையும் இருமத் துணுக்கு இணைப்புகளையும் (Bit serial connections) சேர்த்துப் பயன்படுத்துகின்றன.

வரலாறு[தொகு]

முதல் தலைமுறை[தொகு]

முதல் தலைமுறை கணினிகளின் பாட்டைகள் நினைவகத்தோடும் புறக்கருவிகளோடும் (Peripheral Devices) இணைக்கப்பட்ட பல வடங்களின் தொகுப்பாக இருந்தன. அவை மின்னணுப் பாட்டைகள் என்றோ பாட்டைப் பட்டைகள் (Bus Bars) என்றோ அழைக்கப்பட்டன. எவ்வாறாயினும் நினைவகத்திற்கு ஒரு பாட்டையும் புறக்கருவிகளுக்காக ஒரு பாட்டையும் குறைந்தபட்சம் இருந்தன.[சான்று தேவை] இவை தனிப்பட்ட கட்டளைகள் மூலம் வெவ்வேறு நேரங்களிலும் வெவ்வேறு நெறிமுறைகளிலும் அணுகப்பட்டன.

முதன்முதலில் உணரப்பட்ட சிக்கலானது குறுக்கீடுகளின் பயனாய் ஏற்பட்டதாகும். முந்தைய கணினி நிரல்கள் உள்ளீட்டு வெளியீட்டுக் கருவிகளைச் செயல்படுத்த புறக்கருவிகள் அணியமாகும் வரை ஒரு சுற்றில் (சுழற்சியில்/மடக்கில்) காத்திருந்தன. இது கணினி நிரலின் நேரவிரயத்தைக் குறிக்கிறது. இந்நேரத்தில் அந்நிரல் வேறு பணிகளைச் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்யும் போது மீண்டும் நிரலைச் சோதிக்க வேண்டியிருந்ததால் தரவு இழப்பு ஏற்பட்டது. எனவே பொறிஞர்கள் (Engineers) புறக்கருவிகள் மையச் செயலகத்தைக் குறுக்கிடச் (இடையூறு) செய்தனர். இதன் மூலம் எப்புறக் கருவியும் நிரல் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் எவ்வேளையிலும் மையச் செயலகத்தைக் குறுக்கிட்டுத் தன் பணிக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இக்குறுக்கீடுகளும் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. அதாவது குறுக்கீடுகள் முதன்மைப் படுத்தப்பட்டன (Prioritized). ஏனெனில் மையச் செயலகமானது ஒரு நேரத்தில் ஒரு புறக்கருவியின் கட்டளையை மட்டுமே நிறைவேற்றத்தகு திறம் பெற்றிருந்தது.

பின்னாட்களில் கணினி நிரல்கள் தங்களுக்குத் தேவையான நினைவகங்களைப் பல மையச் செயலகங்களுக்குப் பொதுவாய்ப் பகிரத் தொடங்கின. அப்போதும் நினைவகப் பாட்டையை ஒவ்வொரு நிரலும் அணுகுவது முறைப்படுத்தப்பட்டன. அதாவது முதலில் வரும் நிரலே முதலில் நினைவகத்தை அணுகியது.

இம்மாதிரியான குறுக்கீட்டு முதன்மைப்பாடும் பாட்டை அணுகலும் டெய்சி சங்கிலி (Daisy Chain) என்ற வகை வலையமைப்பு இடவியலைப் (Network Topology) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

டி.இ.சி. நிறுவனமானது, அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் சிறு கணினிகளுக்கும் (Mini Computers) அமைவுப் புறக் கருவிகளுக்கும் (Mapped Peripherals) இருபாட்டைகள் இருப்பது தேவையற்ற ஒன்றென்றும் செலவை அதிகரிக்கும் செயல் என்றும் கருதியது.

முந்தைய நுண் கணினிகளில் (Micro Computers) ஓர் எதிரிடையான அச்சுச் சுற்று இணைப்புப் பலகையானது நேரடியாகவோ இடைநிலையின் மூலமோ மையச் செயலகத்துடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாக இருந்தது. மையச் செயலகத்தில் பயன்படுத்தப்பட்ட அதே தரவூசிகளையும் (Data Pins) முகவரியூசிகளையும் (Address Pins) பயன்படுத்தித்தான் நினைவகம் போன்ற இன்ன பிற கருவிகளும் தரவுப்பாட்டையுடன் இணையாக இணைக்கப்பட்டன. தகவல் தொடர்புகள் மையச் செயலகத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. அது சாதனங்களிலிருந்து தரவைப் படிக்கவும் எழுதவும் செய்தது. ஏனெனில் அவையே நினைவகக் கட்டமைப்பாக இருப்பவை. இவ்வனைத்தும் மையச் செயலகத்திலுள்ள ஒரு கடிகாரத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. இக்கடிகாரமே மையச் செயலகத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்தியது. இருப்பினும் அனைத்து சாதனங்களும் (கருவிகள்) மையச் செயலகத்தைத் தனித்த ஊசி மூலம் சமிக்ஞைகளைப் பிறப்பித்துக் குறுக்கிட்டன. எடுத்துக்காட்டாக வட்டு இயக்கியானது மையச் செயலகத்திற்கு ஒரு புதிய தரவு படிப்பதற்கு அணியமாக உள்ளதாக சமிக்ஞை அனுப்பும். அந்தக் குறிப்பிட்ட புள்ளியில் மையச் செயலகமானது அவ்வட்டு இயக்கிக்கு உண்டான "நினைவக இருப்பிடத்தைப்" படித்துத் தரவை நகர்த்துகிறது. கிட்டத்தட்ட S-100 என்ற பாட்டையைக் கொண்ட ஆல்டைர் முதல் அனைத்து நுண்கணினிகளும் இம்முறையிலேயே கட்டமைக்கப்பட்டன.

மூன்றாம் தலைமுறை[தொகு]

இவை 2001 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மீப்போக்குவரத்தையும் (HyperTransport) கந்தழிப் பட்டையையும் (InfiniBand) கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவுப்_பாட்டை&oldid=3463293" இலிருந்து மீள்விக்கப்பட்டது