தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் குடியிருந்து வரும் அனைவரது பொது நலனுக்காகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் செயல்படுத்தப்படும் நிதியுதவித் திட்டம் இது.

பயன்கள்[தொகு]

வாழ்க்கையின் எவ்வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த நிதித்திட்டத்தில் உதவி கோரி விண்ணப்பிக்க முடியும். படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் படிப்பைத் தொடர அதன் செலவுக்கு உதவி கேட்கலாம். எதிர்பாராத இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கலவரங்களால் பாதிக்கப்பட்டு உயிர், உடமைகளை இழந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், மருத்துவச் சிகிச்சைகளில் அறுவைச் சிகிச்சைக்குப் பணம் வேண்டுவோர் என அனைத்து நிவாரண உதவிகளையும் இந்நிதித் திட்டத்தின் கீழ் கோர முடியும்.

விண்ணப்பம் அளிக்கும் முறை[தொகு]

ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பத்தை எழுதி அத்துடன் நிதியுதவி தேவைக்கான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். உதாரணமாக, மருத்துவத் தேவைகளுக்கு மருத்துவமனை அளித்த செலவுத் தொகைக்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பம் அளிப்பவருக்கு வயது வரம்பு, பொருளாதார வரம்பு என்று எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்நிதியுதவிக்கான விண்ணப்பங்கள் "சிறப்பு அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம், தலைமைச் செயலகம், சென்னை." எனும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

நிதி அளிக்கப்படும் முறை[தொகு]

இந்நிதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பங்களும் விண்ணப்பித்தவர் வசித்து வரும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சர் அலுவலகத்திற்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளின்படி நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவி மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது குறிப்பிட்ட துறை அலுவலர்கள் வழியாகவோ அளிக்கப்படுகிறது. சில வேளைகளில் அரசு விழாக்களின் போது வழங்கப்படுகிறது.

சிறப்பு நிதியுதவி[தொகு]

இயற்கைப் பேரழிவுகள், பெரும் விபத்துக்கள் போன்றவைகளின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித விண்ணப்பங்களுமின்றி முதலமைச்சர் நேரடியாக இத்திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியுதவி அளிப்பதும் உண்டு.