தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட மசோதா 2023 (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Bill, 2023) 21 ஏப்ரல் 2023 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்மொழிவின் நோக்கம் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைப்பதாகும். இம்மசோதாவின்படி திட்டத்தை விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தின் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு மற்றும் நீரோட்டம் குறைக்கப்படமாட்டாது எனத்தெரிவித்துள்ளது. பல துறைகளால் வழங்கப்படும் பல்வேறு அனுமதிகளை ஒரே விண்ணப்பத்தின் கீழ் அரசு நிலத்தை பெருநிறுவனங்களுக்கு வழங்குவது தான் இச்சட்ட மசோதாவின் இலக்கு.[1]

நோக்கம்[தொகு]

இச்சட்ட முன்மொழிவில் 100 ஹெக்டேருக்கு (247 ஏக்கர்) குறையாத நிலத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து, அந்த இடத்தில் தொழிற்சாலைத் திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு மற்றும் நீரோட்டம் குறைக்கப்படமாட்டாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் அரசு, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அதைக் கருதினால் அத்திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும். நான்கு அரசு அதிகாரி, ஒரு அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட அக்குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன் கூடிய வரைவுத் திட்டம் ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கும்.

மாவட்ட ஆட்சியர் அத்திட்ட வரைவை மாவட்ட அரசிதழிலும் இரண்டு செய்தித்தாள்களிலும் வெளியிடுவார். யாருக்கேனும் இதில் மாற்றுக்கருத்தோ பரிந்துரையோ இருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சியருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.

விமர்சனங்கள்[தொகு]

இந்த சட்டமசோதா `நிலம் மற்றும் நீர்நிலைகளை சிறப்பு திட்டங்கள் எனும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சட்டபூர்வமாக தாரைவார்க்கும் திட்டம் என குற்றம்சாட்டி பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தை புறக்கணிக்க மக்களுக்கு வாய்ப்போ அல்லது நிபுணர் குழுவுக்கு திட்டத்தை தள்ளுபடி செய்யும் வாய்ப்போ அளிக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.

திட்டத்தின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் நிராகரிக்கலாம் என்ற வாய்ப்பே இல்லை. அரசு ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமிருக்கும் என்றால் திட்டத்தை நிராகரிக்கலாம் என்கிற விதிமுறையே இந்த சட்ட மசோதாவில் இல்லை. இந்த நடைமுறை முழுக்க திட்டங்களுக்கு சாதகமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. இந்த மொத்த செயல்முறையும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு (Environment Impact Assessment notification) எதிராக உள்ளது என்பதால் இந்த சட்ட மசோதவை அரசு திரும்பப் பெற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இம்மசோதாவின்படி திட்டத்தை விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தின் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு மற்றும் நீரோட்டம் குறைக்கப்படமாட்டாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளது. ஆனால் அதை மேற்பார்வை செய்து உறுதி செய்வதற்கு அதிகாரம் கொண்ட அரசு குழு நியமிக்கப்பட வேண்டும் என்பது மசோதாவில் இல்லை.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]