தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிரியர் கூட்டணி இதழ்

தோற்றம்[தொகு]

இந்தியாவில் ஆசிரியர் சங்கம் 1920ல் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. அதன் பெயர் சென்னை ஆசிரியர்கள் கில்ட். அப்போது தான் பெண் ஆசிரியர்களுக்காகவும் சங்கம் தோன்றியது. 1919ல் அமைக்கப்பட்ட ஊதியக்குழு ஆணைதான் இது தோன்றக் காரணம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணம் என்று இருந்தபோது தென் இந்திய ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் இருந்தது. அதில் கல்லூரி முதல் தொடக்கப்பள்ளி வரை அனைத்து ஆசிரியர்களும் இடம் பெற்று இருந்தனர். அதன் பதவிகளை கல்லூரி ஆசிரியர்களே வகித்தனர் (மேலவை உறுப்பினர் உள்பட) இதனால் கிராமங்களில் இருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் அடைந்தனர். இச்சங்கத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதிநிதித்துவம் சரியாக அளிக்கப்படவில்லை

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1946ல் கர்னூலில் நடைபெற்ற மாநாட்டில் இருந்து வெளியேறி தங்களுக்கெனத் தனியான இயக்கத்தை மாஸ்டர் இராமுன்னியை அமைப்பாளராக கொண்டு சென்னை மாகாண ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது. இயக்கத்தை வளர்க்க மாஸ்டர் இராமுன்னியின் தலைமையில் 19 பேர் மிதிவண்டிகளில் சென்று மலபார் மாவட்டத் தலைநகர் கோழிக்கோட்டில் இருந்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இயக்கத்தை வளர்க்க பாடுபட்டனர்.

முதல் போராட்டம்[தொகு]

1946ல் சென்னை மாகாண ஆசிரியர் சம்மேளனம் என்று பெயரில் முதல் இயக்கம் தொடங்கப்பட்டது. இச்சம்மேளனம் 1947 ல் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்து, அன்றைய அரசுக்கு அறிவிப்பு அனுப்பியது. 56 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அதன் காரணமாக அரசு இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இடைக்கால நிவாரணம் வழங்கி ஊதிய பரிசீலனைக்குழு அமைத்தது. இதன் பரிந்துரையால். ஆசிரியர்கள் ஊதிய மாற்றம் பெற்றனர்.


வெளி இணைப்புகள்[தொகு]