தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே அல்லது புதுவையின் தமிழ்த் தாய் வாழ்த்து (அன்னை தமிழை பிரார்த்திப்பது) என்பது புதுச்சேரியின் மாநிலப் பாடல் ஆகும். இந்த பாடலை பிரபல கவிஞர் பாரதிதாசன் எழுதியிருந்தார். [1] இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.[2]

1991 ஆம் ஆண்டில், இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன் இப்பாடலுக்கு இசையமைத்தார். [3] பொதுவாக புதுச்சேரி அரசின் அதிகாரப்பூர்வ விழாக்கள் இந்த பாடலுடன் தொடங்கி இந்திய தேசிய கீதத்துடன் முடிவடையும்.

பாடல் வரிகள்[தொகு]

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி![4]

பாடல் விளக்கம்[தொகு]

தமிழரான நாங்கள்தான் மற்றோர் முன் உன் நிலையினை தாழ்த்திவிடுவோமோ ? நாங்களும் இப்பாரின் முன் தலை தந்திடுவோமோ ? பல இன்பம் ஒருங்கே தந்திடும் பைந்தமிழ் அன்னையே உன் புகழ் என் உயிர் உள்ளவரை மறப்பேனோ ?

செந்தமிழே ! என் உயிரே ! நறுந்தேனே !எனது செயல்களையும் மூச்சினையும் உனக்கு தந்துவிட்டேன் . நீ மடிவையெனில் நானும் உன்னுடன் சேர்த்தே மடிவேனே !! நீ உன்னிடம் அடைந்தால் நன்னிலை உனக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் !

முற்பிறப்பின் நினைவுகள் இன்றி இவுலகில் புதிதாய் பிறங்கும் மனிதயின் நெஞ்சில் சிவந்த தாமரைப் பூக்கள் பலவும் அடர்த்த காடாய் மலர்த்தது போல நினைவில் வளரும் என் தமிழ் ஒளியே நீ வாழ்க![5]

குறிப்புகள்[தொகு]