தனியுடைமை குடியேற்றம்
தனியுடைமை குடியேற்றம் (proprietary colony) என்பது 17ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவிலும் கரிபியனிலும் பெரும்பாலும் அமைந்திருந்த ஆங்கிலக் குடியேற்ற வகையைக் குறிப்பதாகும். பிரித்தானியப் பேரரசில், அனைத்து நிலங்களும் மன்னருக்கே உரிமையானது; அதனை தமது விருப்பப்படி பிரிப்பதற்கான மேதகு உரிமை அவருக்கே உடையது. எனவே அனைத்து குடியேற்றச் சொத்துக்களும் அரசப் பட்டயங்கள் மூலம் தனியுரிமை, அரசுடைமை, இணையுடைமை,வரைமொழியுடைமை என்ற நான்கு வகைகளில் ஒன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு தனது கவனம் முழுமையாக பிரித்தானியாவின் மீதிருக்க வசதியாக தனது கூட்டாளிகளுக்கு குடியேற்றங்களை தனியுடைமை பகுப்பில் பகிர்ந்தளித்திருந்தார். அவரது அரச பட்டயங்கள் மூலம் அளிக்கப்பட்ட இந்தக் குடியேற்றங்களில் அவர்கள் முதலீடு செய்யவும் தன்னாட்சி புரியவும் வாய்ப்பு நல்கியது. தனியுரிமையாளர் ஆட்சியாளராக இருப்பினும் மன்னருக்கும் ஆங்கில சட்டத்திற்கும் கட்டுப்பட்டவராக இருந்தார். இவ்வாறாக சார்லசு II நியூ ஆம்ஸ்டர்டாமை தனது தம்பி யார்க் இளவரசருக்கு அளித்தார்; அவர் அதனை நியூயார்க் மாகாணம் எனப் பெயரிட்டார்.[1] இதேபோன்று வில்லியம் பென் என்பாருக்கு அளிக்கப்பட்ட குடியேற்றம் பென்சில்வேனியா என அழைக்கப்படலாயிற்று.[2]
இவ்வாறான மறைமுக ஆட்சி குடியேற்றங்களின் வளர்ச்சியாலும் நிர்வாக சிக்கல்கள் குறைந்தமையாலும் நாளடைவில் மறைந்தது. பிந்தைய ஆங்கில மன்னர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் தங்களிடமே குவியப்படுத்த விரும்பியதால் பிற்காலங்களில் குடியேற்றங்கள் அரசக் குடியேற்றங்கள் என அழைக்கப்பட்டன; இவற்றை மன்னரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆண்டு வந்தனர்.