தங்கைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கைல் (ஆங்கிலம்: Tangail; வங்காள மொழி : টাঙ্গাইল) என்பது வங்காளதேசத்தின் மத்திய பிராந்தியத்தில் உள்ள டாக்கா பிரிவின் தலைநகரான டாக்காவிலிருந்து 98 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரமாகும். இது தங்காயில் மாவட்டத்தின் முக்கிய நகர்ப்புறமாகும். நகரம் லூஹாஜாங் ஆற்றின் கரையில் உள்ளது.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குதிரை வண்டிகள் தற்போதைய நகரப் பகுதியில் பொருட்களையும் பயணிகளையும் கொண்டு செல்வதற்கான முக்கிய போக்குவரத்து ஊடகமாக இருந்தன. குதிரை வண்டிகள் என்று பொருள்படும் டங்கா என்ற வார்த்தையிலிருந்து டாங்கைல் என்ற பெயர் உருவானதாக கருதப்படுகின்றது.

வரலாறு[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து டாங்கைல் நகரம் பிரபலமான உள்ளூர் வணிக மையமாக திகழ்ந்தது. மாநகராட்சி அல்லது பவுராஷவா 1887 ஆம் ஆண்டு சூலை 1 அன்று நிறுவப்பட்டது. அதன் போது நகரம் ஐந்து வார்டுகளைக் கொண்டதாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர் 1999 ஆம் ஆண்டில் நகரம் 18 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு அதன் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.

நகரத்தின் முதல் தேர்தல் 1887 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் நான்கு வார்டுகளில் இருந்து எட்டு வார்டு தலைவர்கள் நகர குடிமக்களின் நேரடி வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தங்காயிலின் அப்போதைய துணைப்பிரிவு ஆணையர் சஷி சேகர் தத் என்பவர் தங்காயில் நகரத்தின் முதல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அப்போது இந்த நகரத்தின் சாலைகளில் விளக்குகள் காணப்படவில்லை. 1890 ஆம் ஆண்டுகளில் நகரத்திற்கு பாதுகாப்பான நீர் வழங்கல் இருக்கவில்லை. பிராந்திய ஜமீன்தார்கள் மற்றும் துணைப்பிரிவு வாரியம் முன் வந்து குளங்கள், ஏரிகள் மற்றும் கால்வாய்களை அமைப்பதற்கான நிதி உதவிகளை வழங்கினார்கள். அவற்றினால் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பான நீர் விநியோக சேவை கிடைக்கப் பெற்றது.

20 ஆம் நூற்றாண்டின் முதற் பாதியில் மாநகராட்சியின் மக்கட் தொகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. அச்சமயத்தில் ஊரில் பல குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக குதிரை வண்டிகள் காணப்பட்டன. மக்கள் கால்நடைகளையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தினர்.

1930 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் நகரத்தின்கு முதன்முதலில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. நகரின் தெருக்களில் ரிக்‌ஷாக்கள் வலம் வர ஆரம்பித்தன. 1960 ஆண்டுகளில் சாலைகள் கட்டப்பட்டன. மேலும் தங்காயில் நேரடியாக டாக்காவுடன் சாலை வழியாக இணைக்கப்பட்டது. இப்பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக பல பாலங்கள் மற்றும் வடிகால்கள் அமைக்கப்பட்டன. மேலும் நகரத்திற்கு குழாய் மூலம் நீர் வழங்கல் ஏற்படுத்தப்பட்டது.

1985 ஆம் ஆண்டில் தங்காயில் சிட்டி 'சி வகுப்பில் இருந்து' பி வகுப்பாக உயர்த்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் மாநகராட்சி முதற் தரமாக உயர்த்தப்பட்டது. 1990 ஆண்டுகளில் நகரத்திற்கு நீர் வழங்கல், சுகாதாரம், கழிவு நீர் வடிகால், பேருந்து முனையம், பல்பொருட் அங்காடிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்க ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வங்காளதேச அரசு என்பன நிதியளித்தன.[2]

விளையாட்டு[தொகு]

தங்காயில் நகரின் பிரபலமான விளையாட்டு துடுப்பாட்டம் ஆகும். கால்பந்து மற்றும் கபடி என்பனவும் பிரபலமாக உள்ளன. நகரின் அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்வுகளும் பாசானி மண்டபம் மற்றும் தங்காயில் ஈத்-கா என்பற்றுக்கு அருகிலுள்ள தங்காயில் அரங்கத்தில் நடைபெறுகின்றன. இந்த அரங்கம் தேசிய நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் கிரிக்கெட் அரங்கமாக மாற்றப்பட்டது.

நிர்வாகம்[தொகு]

தங்காயில் நகரத்தின் மொத்த பரப்பளவு 35.22 சதுர கிலோ மீற்றர் ஆகும். நகரத்தை விரிவாக்க வங்காளதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்தகரம் 81.75 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக விரிவாக்கப்படும். இந்த நகரம் 2016 ஆம் ஆண்டு வரை 18 வார்டுகளையும் 64 மஹாலாக்களையும் கொண்டுள்ளது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Grabbers choke Louhajang River in Tangail". The Daily Star (in ஆங்கிலம்). 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  2. "Tangail". tangailpourashava.gov.bd. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Tangail pourashava". tangailpourashava.gov.bd. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கைல்&oldid=2869183" இலிருந்து மீள்விக்கப்பட்டது