டிரிஃக்லெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோஃகான் பிட்டர் குஸ்ட்டாஃவ் லெயூன் டிரிஃக்லெ (Johann Peter Gustav Lejeune Dirichlet)

டிரிஃக்லெ (Dirichlet, [diʀiˈkle] ) (1805-1859) 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர். அவருடைய முழுப்பெயர் யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ(Johann Peter Gustav Lejeune Dirichlet).

இளமைப்படிப்பு[தொகு]

டிரிஃக்லெ ஜெர்மனியில் டியூரென் இல் பிறந்தார். அவர் தந்தை ஓர் அஞ்சல் அலுவலகத் தலைவர்.பெல்ஜியத்தில் ரிச்லெட் நகரிலிருந்து வந்த குடும்பமானதால் அவருக்கு செல்லப் பெயர் 'லாழ்ஜூன் டிரிஃக்லெ'.பெற்றோர்கள் அவரை வியாபாரத்தில் ஈடுபடுத்த முயன்றபோதிலும் சிறுவயதிலேயே கணிதத்தில் ஆர்வத்தைத் தெரியப்படுத்தியவர். 'ஓம் விதி'(Ohm's Law) என்று இயற்பியலில் புகழ்பெற்ற ஜார்ஜ் ஸைமன் ஓம் (George Simon Ohm) (1787-1854)கோலோனில் அவருடைய ஆசிரியர்களில் ஒருவர். 1821 இல் தன் பள்ளிப் படிப்பை முடித்தபோது பாரிஸ் நகர் உலகமறிந்த கணித இயலர்களைப் பெற்றிருந்ததாலும் அங்கு அவருடைய உறவினர்கள் இருந்ததாலும் அங்கு போய் ஜெனெரல் ஃபாய் என்ற ஒரு பண்புள்ளவரின் குடும்பத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகத் தொழில் புரிந்து தன் மேல்படிப்பைத் தொடர்ந்தார். அவ்வில்லத்தில் அவருக்கு பல பெரிய மனிதர்களையும் அறிவாளிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

காஸ், லெஜாண்டர், ஃபொரியர்[தொகு]

இக்காலத்தில் தான் அவர் காஸ் இனுடைய 'எண்கணித உரைகள்' என்ற பெரும் நூலைப் படிக்கும் பேறு பெற்றார். அச்சமயம் அந்நூலை முழுதும் கற்றறிந்தவர் சிலரே இருந்தனர். டிரிஃக்லெ அந்நூலின் ஒரு கிழிந்த படியை (பிரதியை) தன்னுடன் எப்பொழுதும், ஏன், தான் பயணங்களில் இருந்தபோதும் கூட, வைத்திருந்தாராம். கடினமான அந்நூலை பிற்காலத்தியவர் படித்துப் புரிந்துகொள்வதற்காகக் கடுமையாக உழைத்தவர் டிரிஃக்லெ. பாரிஸ் அகாடெமி க்கு அவர் அனுப்பிய முதல் ஆய்வுக்கட்டுரை எண் கோட்பாட்டைப் பற்றியதுதான். அக்கட்டுரையைத் தரம் பார்த்து வெளியிட அனுமதித்தது லெஜாண்டர். இதற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதே லெஜாண்டரின் ஒரு யூகத்திற்கு டிரிஃக்லெ நிறுவல் கொடுத்தார். ஆனால் அப்பொழுது லெஜாண்டர் காலமாகியிருந்தார்.

ஃபொரியர் (1768-1830) -- இயற்பியலில் வெப்பக்கோட்பாட்டுப் பிரிவுக்கு வித்திட்டவர் -- டிரிஃக்லெயின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்தார். டிரிஃக்லெயை கணித இயற்பியலில் ஈர்த்து அவர் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.

பெர்லின், கெட்டிங்கென்[தொகு]

1827 இல் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் டிரிஃக்லெக்கு ப்ரெஸ்லௌ பல்கலைக்கழகத்தில் ஒரு உபகாரச் சம்பளம் வாங்கிக் கொடுத்தார். பிறகு பெரிலினிலேயே ஒரு பணியில் அமர்த்தினார். அங்கு டிரிஃக்லெ 27 ஆண்டுகள் பணி புரிந்தார். 1855 இல் கெட்டிங்கென் பல்கலைக் கழகத்தில், புகழ்பெற்ற காஸ் அமர்ந்திருந்த பதவியில் அவருக்குப் பின் அமர்ந்தார். ஆனால் நான்கே ஆண்டுகள் தான் அங்கிருந்தார். 1859 இல் இருதய பாதிப்பினால் இறந்தார். அவர் இறந்தபின் அவரைத் தொழில் அடிப்படையில் அறிந்தவர்கள் அவர் இன்னும் சில ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்திருந்ததாகவும் ஆனால் அவருடைய அந்த எழுத்துப் படிகள் (பிரதிகள்) கிடைக்காமலே போய்விட்டதால் கணித உலகத்திற்கு அவை பெரிய இழப்பென்றும் கூறினர். ஓர் ஆய்வின் கடைசி முடிவு வரும் வரையில் அதை மனதிலேயே வைத்திருக்கும் அவருடைய பழக்கம் தான் இதற்குக்காரணமென்று ஊகிக்கவேண்டியிருக்கிறது.

ஐஸென்ஸ்டைன், க்ரானெக்கர், லிப்ஷிட்ஸ் டெடிகிண்ட் ஆகியோர் அவருடைய மாணவர்களாயிருந்தவர்கள். கெட்டிங்கெனின் வரலாற்றில் காஸுக்கும் ரீமானுக்கும் இடையில் போற்றப்படவேண்டியவர் டிரிஃக்லெ. பகுவியலை எண் கோட்பாட்டில் பயன்படுத்தும் முறைக்கு மிகவும் பங்களித்தவர் டிரிஃக்லெ.

ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்திற்கு ஒரு நிறுவலை கம்மர் அனுப்பியபோது பெரிய கணித இயலர் கோஷியே அதை நம்பிவிட்டார். டிரிஃக்லெதான் தவற்றைக் கண்டுபிடித்து எண்கணிதத்தின் அடிப்படைத்தேற்றம் கம்மர் பயன்படுத்திய களத்திற்கு செல்லாது என்பதைக் குறிப்பிட்டு கம்மருடைய சீர்மங்கள் கோட்பாட்டிற்கு வழிவகுத்தார்.

அவர் பெயரைப் பெற்ற கணித ஆய்வுகள்[தொகு]

கூட்டுத்தொடரில் பகா எண்கள் என்ற தேற்றமும் இன்னும் பலவும் அவர் பெயர் பெற்றவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரிஃக்லெ&oldid=2713363" இலிருந்து மீள்விக்கப்பட்டது