ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கான ஜூல்ஸ் ரிமெட் கோப்பையானது, 1966 இங்கிலாந்தில் உலகக்கோப்பை காற்பந்து போட்டி நடந்த இருந்த காலத்தில் திருடப்பட்டது. பின்னர் இந்தக் கோப்பை மீட்கப்பட்டது.

கோப்பையை கண்காட்சியில் வைத்தல்[தொகு]

1966 சூலையில் இங்கிலாந்தில் உலக காற்பந்து போட்டிகளை நடத்த காற்பந்துச் சங்கம் முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, இங்கிலாந்தின் சில இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மார்ச் 19 அன்று வெஸ்ட்மினிஸ்டர் சென்ட்ரல் ஹாலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கோப்பை £ 30,000 க்கு காப்பீடு செய்யப்பட்டது (அதன் உண்மை மதிப்பு £ 3,000 மட்டுமே). கோப்பையைப் பாதுகாப்பதற்கு காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

திருட்டு[தொகு]

மார்ச் 20, பகல் 12.10க்கு கோப்பை இருந்த அறையைத் திறந்து பார்த்த காவலர்கள் கோப்பை திருடப்பட்டதை உணர்ந்தனர்.

கோப்பை வைக்கப்பட்டிருந்த பெட்டியின் திருகு போன்றவை பின்பக்கமாகக் கழற்றப்பட்டிருந்தன. காவலாளர்களில் யாரும் சந்தேகத்திற்குரிய எதையும் காணவோ கேள்வப்படவோ இல்லை. அவர்களில் ஒருவர் முதல் தளத்து கழிப்பறைக்கு வந்தபோது பொது தொலைபேசி மையத்தில் சந்தேகப்படும்படியான ஒரு மனிதனைக் கண்டதாக தெரிவித்தார்.[1][2]

கோப்பை திருடப்பட்ட வழக்கை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. பல இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது அந்தக் கட்டிடத்தில் பணியில் இருந்த அனைவருமே விசாரிக்கப்பட்டனர். அடுத்த நாளே, உலகக் கோப்பை காணாமல் போன செய்தி உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது.

கோப்பையை ஒப்படைக்க தொகை கேட்பு[தொகு]

இங்கிலாந்து கால்பந்து சங்கத் தலைவர் ஜோ மியர்சுக்கு மார்ச் 21 அன்று, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், மறுநாள் ஜோவுக்கு ஒரு பொட்டலம் வரும் என்றார். மறுநாள் மார்ச் 22 அன்று செல்சீ கால்பந்துக் கழகத்துக்கு வந்த ஒரு பொட்டலத்தில், ஜூல்ஸ் ரிமெட் கோப்பையின் மேல்புறம் பூசப்பட்டிருந்த பூச்சை உரித்து அனுப்பியிருந்தார்கள். மேலும் கோப்பையை திருப்பி அளிக்க £15,000 வேண்டும் என்றும் அதுவும் £1 மற்றும் £5 பணத்தாள்களாக வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டிருந்தனர். மேலும் கடிதத்தில் காவல்துறைக்கோ, பத்திரிகைகளுக்கோ தகவல் கொடுக்கக் கூடாது. பணம் சரியாக வந்து சேர்ந்தால், மார்ச் 25 அன்று கோப்பை திரும்ப வந்துவிடும். இல்லை என்றால் கோப்பையை உருக்கிவிடுவோம் என்று கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து மியர்சுக்கு மற்றொரு அழைப்பு வந்தது - "ஜாக்சன்" என்று தன்னை அறிமுகம் செய்தவர் பணத்தை £ 5 மற்றும் £ 10 பணத்தாளாக வேண்டும் என்று நோட்டு மதிப்பை மாற்றிக் கேட்டார்.

ஜோ மியர்ஸ் காவல் துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் 15 ஆயிரம் பவுண்ட் என்ற பெயரில் அசல் நோட்டுகளுடன் வெற்றுக் காகிதங்களையும் நிரப்பி பெட்டி ஒன்றைத் தயார் செய்தனர். பணத்தை ஒப்படைக்க மியர்சின் உதவியாளர்களாக இரண்டு காவல் அதிகாரிகள் செயல்பட்டனர். அடுத்த அழைப்பிற்காக காத்திருக்க அவரது வீட்டிற்குச் சென்றனர்.

தோவ்வியடைந்த முயற்சி[தொகு]

கோப்பையைக் கடத்திய கடத்தல்காரர்களைத் தொடர்புகொள்வதில் ஏற்பட்ட குழப்பங்கள். காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால் ஏற்பட்ட சிக்கல்கள். போன்றவற்றால் ஜோ மியர்ஸால் கோப்பையை மீட்க முடியவில்லை. இதனால் புதியதாக வேறு கோப்பையைச் செய்துவிடலாம் என்று முடிவெடுக்கும் நிலையில் கால்பந்து சங்கம் இருந்தது.

கோப்பை மீண்டும் கிடைத்தல்[தொகு]

மார்ச் 27. லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் டேவிட் கோர்பெட் என்பவர் தனது நாய் பிக்கிள்ல் உடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். வீட்டின் அருகே புதர்ப் பகுதியில் செய்தித்தாள் சுற்றப்பட்டிருந்த பொருள் ஒன்றை பிக்கிள்ஸ் மோப்பம் பிடித்துக் குரைத்தது. டேவிட் அதைத் திறந்து பார்த்தார். அது காணாமல் போன உலகக் கோப்பை. இதையடுத்து அவர் ஜிப்ஸி ஹில் காவல் நிலையத்தில் கோப்பையை ஒப்படைத்தார்.

பின்விளைவுகள்[தொகு]

உலகக் கோப்பையைக் கண்டு பிடித்த பிக்கிள்ஸ் நாயானது பிரபலமானது. அது பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் தோன்றி நட்சத்திரமானது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது கொண்டாட்ட விழாவில் டேவிட் கோர்பெட் கலந்து கொண்டார், பின்னர் அவருக்கு மொத்தம் £ 6,000 வெகுமதிகள் அளிக்கப்பட்டன. இதன்பிறகு கால்பந்து சங்கமானது பொது விழாக்களில் காட்டுவதற்காக இந்த கோப்பையின் மாதிரி ஒன்றை உருவாக்கியது.

எட்வர்ட் பெட்லி என்பவர் கோப்பையை திருடி ஆட்களைக் கொண்டு பணத்தை கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர் 1969இல் நுரையீரல் அடைப்பு நோயால் இறந்தார்.

பிரேசிலில் திருட்டு[தொகு]

1970இல் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மூன்றாவது முறையாக பிரேசில் வென்றதால் கோப்பையை அது நிரந்தரமாக தனதாக்கிக்கொண்டது. ஆனால் 1983இல் மீண்டும் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்டது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் அந்தக் கோப்பையை மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. 1984இல் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை போன்ற மாதிரி ஒன்று பிரேசிலுக்கு வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1966: Football's World Cup stolen". BBC News (பிபிசி). 1966-03-20. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/20/newsid_2861000/2861545.stm. பார்த்த நாள்: 2010-06-28. 
  2. "England loses the World Cup". History Today. June 1, 2006. Archived from the original on March 26, 2016. https://web.archive.org/web/20160326105501/https://www.highbeam.com/doc/1G1-147109300.html. பார்த்த நாள்: February 5, 2013. 
  3. Associated Press (2006). "Trophy as filled with history as Cup". CNN. மூல முகவரியிலிருந்து 30 September 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 July 2006.