ஜக் நிக்லோஸ்
ஜக் வில்லியம் நிக்லோஸ் (Jack William Nicklaus, பிறப்பு: சனவரி 21, 1940) பன்னாட்டு (உலக) கோல்ஃப் (Golf)அல்லது குழிப்பந்தாட்ட விளையாட்டின் வரலாற்றில் முன்னணி புகழ் எய்திய வீரர்களில் ஒருவர். இவர் அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் உள்ள கொலம்பசில் பிறந்தவர்.
ஜக் நிக்லோஸ் குழிப்பந்தாட்ட விளையாட்டில் சாதனைகள் பல படைத்து, உலகளாவிய நோக்கில் குழிப்பந்தாட்ட இரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவருக்கு 'தி கோல்டன் பேயார்' (The Golden Bear, தங்கக்கரடி) என்ற புனை பெயரும் உண்டு.
வெற்றிகளும் பட்டங்களும்
[தொகு]குழிப்பந்தாட்ட விளையாட்டில் மாசிட்டர் (Master) எனவும் கிராண்டுசிலாம் (Grand Slam) எனவும் அழைக்கப்படும் போட்டிகளில் 18 பட்டங்களை வென்று சாதனை நாட்டியவர்.
குழிப்பந்தாட்டத்தில் நான்கு முக்கியமான போட்டிகள் உள்ளன, இவை பெரும்போட்டி அல்லது கிராண்டுசிலாம் எனப்படுகின்றன. அவை, மாசிட்டர் (Master) யூ.எசு. ஓப்பன் (U.S.Open, அமெரிக்கத் திறந்த போட்டி) பிரித்தானிய ஓப்பன் (British Open) தொழிலிய குழிப்பந்தாட்டம் வல்லுநர்கள் மன்ற தலைமையர் போட்டி (PGA Championship) ஆகியனவே அந்த நான்கு பெரும் போட்டிகளாகும். இவற்றில் மொத்தம் 18 பட்டங்கள் வென்று, குழிப்பந்தாட்டம் விளையாட்டில் எப்போதும் நினைவு கூரப்படும் வீரராக திகழ்பவர் நிக்லோஸ்.
குழிப்பந்தாட்ட ஈடுபாடு
[தொகு]1959, 1961ம் ஆண்டுகளில் அமெரிக்க தொடக்கநிலையாளர்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றார். 1961ம் ஆண்டு பருவகால முடிவில் தொழில்சார் வீரராக ஒப்புயர்வு பெற்றார்.
முதலாவது உலகப் போட்டி
[தொகு]1962ம் ஆண்டு நடந்த ஐக்கிய அமெரிக்க போட்டியே நிக்லோசின் முதல் பன்னாட்டு குழிப்பந்தாட்டப் போட்டியாகும். அந்த முதல் போட்டியிலேயே பட்டம் வென்றார்.
பட்டங்கள்
[தொகு]1965, 1966ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மாசிட்டர்சு பட்டம் வென்றார். இதுவும் ஒரு சாதனையாகக் கருதப்படுகின்றது. அதேயாண்டு பிரித்தானிய ஒப்பன் (திறந்த போட்டி) பட்டத்தையும் கைப்பற்றினார்.
1968, 1969களில் எந்தவொரு பெரிய வெற்றிப் பட்டத்தையும் வெல்லாத நிக்லோசு, 1970ல் மீண்டும் பிரித்தானிய பட்டத்தை வென்றார். 1971 முதல் 1980வரை மொத்தம் 9 பட்டங்களை கைப்பற்றினார். இதன் மூலம் 13 பிரதான குழிப்பந்தாட்டப் பட்டங்களை வென்றிருந்த பாபிச்யோன்சின் சாதனையை நிக்லோசு முறியடித்தார். புகழ்பெற்ற குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்க வல்லுநர் போட்டிகளில் 5 முறை பட்டம் வென்றுள்ளார்.
1986ம் ஆண்டு தனது 46வது வயதில் மாசிடர்சு பட்டத்தை நிக்லோசு கைப்பற்றினார். அதுவே அவர் வென்ற கடைசி குழிப்பந்தாட்டப் பட்டமாகும். 2005ம் ஆண்டு வரை தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றார்.
பிற பணிகள்
[தொகு]குழிப்பந்தாட்டப் புல்தரை வடிவமைப்பு, அறக்கட்டளை, புத்தகம் எழுதுதல் உள்ளிட்ட பல துறைகளிலும் நிக்லோசு தற்போது ஈடுபாடுமிக்கவராக உள்ளார்.