உள்ளடக்கத்துக்குச் செல்

சொற்புணர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் சொல்லோடு சொல் புணரும் புணர்ச்சியானது சொற்புணர்ச்சி என்றும், பொருட்புணர்ச்சி என்றும் பாகுபடுத்திக் காணுமாறு அமைந்துள்ளது. புணரும் சொற்களிலுள்ள ஓசைகளின் ஒத்திசைவோடு புணர்வதைச் சொற்புணர்ச்சி என்கிறோம். தொல்காப்பியத்திலுள்ள புணரியல், தொகைமரபு, உருபியல் ஆகிய இயல்கள் இவற்றை விரிவாக விளக்குகிறது. ஓசை இசைவுக்கு மாறுபட்டு நிலைமொழி, வருமொழி ஆகியவற்றில் உள்ள பெயரின் பொருள் தன்மைக்கு ஏற்பப் புணர்வது பொருட்புணர்ச்சி.

எடுத்துக்காட்டு

 • குமரிப்பெண், எட்டிப்பட்டம், காவிதிப்பட்டம், வள்ளிக்கூத்து என வரும் புணர்நிலைகளைச் சொற்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இவற்றில் குமரி, எட்டி, காவிதி, வள்ளி என்னும் சொற்கள் உயர்திணையைச் சுட்டுகின்றன. உயர்திணைச் சொல் எல்லாவழியும் இயல்பாகப் புணரவேண்டும்.[1] அவ்வாறு புணராமல் ஒற்று மிக்குப் புணர்ந்துள்ளது.[2] காரணம் 'இ' என்னும் பல்லெழுத்தோடு 'ப' என்னும் இதழெழுத்து இணைய முடியவில்லை. இணைவதற்காகப் 'ப' என்னும் பல்லெழுத்து மிக்குப் புணர்ந்துள்ளது.
 • கண் என்னும் சொல் கண் என்னும் உறுப்பை உணர்த்தும்போது 'கட்படாம்' [3] எனத் திரிந்து வரும். ஏழாம் வேற்றுமை உருபாயினும் 'நயனுடையான்கட் படின்' [4] எனத திரிந்தே வரும்.

பொருட்புணர்ச்சியோடு இதனை ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

அடிக்குறிப்பு[தொகு]

 1. உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்
  புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
  எல்லா வழியும் இயல்பு என மொழிப. (தொல்காப்பியம் தொகைமரபு 11)
 2. அவற்றுள்,
  இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. (தொல்காப்பியம் தொகைமரபு 12)
 3. கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் (திருக்குறள் 1087)
 4. திருக்குறள் 216
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்புணர்ச்சி&oldid=2775153" இலிருந்து மீள்விக்கப்பட்டது