பொருட்புணர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் புணர்ச்சியைச் சொற்புணர்ச்சி என்றும் பொருட்புணர்ச்சி என்றும் பாகுபடுத்திக் காட்டுகிறது. சொல்லில் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடுகள் சொல்லின் ஒலி நோக்கியவை அல்ல. சொல்லின் பொருள் நோக்கியவை. மற்றும் சில பொருள்நோக்குப் புணர்ச்சிகளையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1][2] இந்தப் புணர்ச்சிகளை நன்னூல் இலக்கணமும் வழிமொழிகிறது. [3] அவை இங்குத் தொகுத்துப் பார்க்கப்படுகின்றன.

உயர்திணை, அஃறிணை[தொகு]

உயர்திணைச்சொல் எல்லா வழியும் இயல்பாக வருதல் வேண்டும். [4]

 • இகழ்வார்ப் பொறுத்தல் தலை [5] என இரண்டாம் வேற்றுமைப் பொருளில் ஒற்று மிக்கு வந்துள்ளது.
 • அவர் தந்தார் [6] என்னும்போது அவர் என்னும் உயர்திணைச் சொல் ஒற்று பிகாமல் இயல்பாகப் புணர்ந்துள்ளது. ஆனால் அவர்க் காணலுற்று [7] என்னும்போது, அதே அவர் என்னும் சொல் ஒற்று மிக்குப் புணர்ந்துள்ளது. காரணம் உயர்திணை இரண்டாம் வேற்றுமைத்தொகை
 • தமிழ் என்னும் சொல் அஃறிணை. அது தமிழ்க்கொடி, தமிழ்ச்சொல், தமிழ்த்தலைவன், தமிழ்ப்பாடம் என்றெல்லாம் ஒற்று மிக்குப் புணரும். ஆனால் இது இரண்டாம் வேற்றுமை வரும்போது இயல்பாய் முடியும். தமிழ் கொடுத்தான், தமிழ் சேர்த்தான், தமிழ் தந்தான் [8], தமிழ் படித்தான் என வரும்.
 • தமிழ் என்னும் சொல் தமிழ்மக்களை உணர்த்துமாயின் தமிழக்கூத்து, தமிழச்சேரி, தமழத்தெரு, தமிழப்பள்ளி எனவரும். [9]
 • தமிழ் கூறு நல்லுலகம் [10] என்பது இரண்டாம் வேற்றுமைத்தொகை.

மரப்பெயர்[தொகு]

 • எகின் என்னும் சொல் புளியமரத்தையும், கரடியையும் குறிக்கும். இச்சொல் பொருள் நோக்கில் புணரும் பாங்கைத் தொல்காப்பியம் தெளிவுபடுத்துகிறது. எகின் என்னும் சொல் புளியமரத்தைக் குறிக்குமாயின் எகினங்கோடு, எகினஞ்செதில், எகினந்தோல், எகினம்பூ என மெல்லெழுத்து மிக்கு வரும். [11] இச் சொல்லே கரடியைக் குறிக்குமாயின் எகினக்கால், எகினச்செவி, எகினத்தலை, எகினப்புறம் என வல்லெழுத்து மிக்கு முடியும். [12]
 • வேல் என்னும் சொல் வேலாயுதத்தை உணர்த்துமாயின் 'வேற்கண்' (வேலைப் போன்ற கண்) என வரும். ஆனால் வேல் என்னும் சொல் வேலமரத்தை உணர்த்தும்போது வேலங்காய், வேலஞ்செதிள், வேலந்தோல், வேலம்பூ என வரும்.

இப்படிப் பல.

அடிக்குறிப்பு[தொகு]

 1. உயர்திணை ஆயின் நம் இடை வருமே. (தொல்காப்பியம் உருபியல் 18)
 2. உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று
  ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. (தொல்காப்பியம் புணரியல் 15)
 3. பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய்
  வலிவரி னியல்பா மாவி யரமுன்
  வன்மை மிகாசில விகாரமா முயர்திணை (நன்னூல் 159)
 4. உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்
  புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
  எல்லா வழியும் இயல்பு என மொழிப. (தொல்காப்பியம் தொகைமரபு 11)
 5. திருக்குறள் 151
 6. திருக்குறள் 1182
 7. திருக்குறள் 1244
 8. கம்பராமாயணம் 2762 அகத்தியர் படலம்
 9. தொல்காப்பியம் புள்ளி மயங்கியல் 90
 10. தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம்
 11. எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே. (தொல்காப்பியம் புள்ளி மயங்கியல் 41)
 12. ஏனை எகினே அகரம் வருமே
  வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும். (தொல்காப்பியம் புள்ளி மயங்கியல் 42)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருட்புணர்ச்சி&oldid=1259642" இருந்து மீள்விக்கப்பட்டது