சைந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைந்தியா (முன்னர் நந்திபூர்) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தின் சூரி சதர் துணைப்பிரிவில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் பிர்பம் மாவட்டத்தின் வணிக நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நகர் சைந்தியா காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது.[1] சைந்தியா நகரம் பிர்பூம் மாவட்டத்தில் நான்காவது அதிக மக்கட் தொகை கொண்ட நகரமும், மேற்கு வங்கத்தின் 95 வது அதிக மக்கட் தொகை கொண்ட நகரமும் ஆகும்.[2][3] இந்த நகரம் 16 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பில் 44,601 சனத்தொகையைக் கொண்டிருந்தது. மயூராசி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சைந்தியா ஒரு பெரிய குடியேற்றமாக இருந்து வருகிறது. இந்த நகரம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள சக்தி பீடங்களின் ஒன்றான நந்திகேஸ்வரி கோயிலுக்கு பிரபலமானது.

சொற்பிறப்பியல்[தொகு]

இசுலாமிய மதகுருவை குறிக்கப் பயன்படுத்தப்படும் வங்காள மொழி வார்த்தையான 'சைன்' என்பதிலிருந்து சைந்தியா என்ற பெயர் உருவானதாக நம்பப்படுகிறது. புகழ்பெற்ற நந்திகேஸ்வரி கோயிலுக்குப் பிறகு சைந்தியா 'நந்திபூர்' என்றும் அழைக்கப்பட்டது.

சைந்தியா என்ற பெயர் 'சைட்டா' என்பதிலிருந்து உருவானது என்றும் கருதப்படுகின்றது.

புவியியல்[தொகு]

சைந்தியா 23.9451 ° வடக்கு 87.6803 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 54 மீ (177 அடி) ஆகும். இந்த நகரம் மயூராசி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது . மண் வளமானதாகவும், பொதுவாக வண்டல் மண்ணாகவும் காணப்படும். வளமான நிலத்தடி நீரின் நீர்த்தேக்கம் இருந்தது. ஆனால் இதன் அதிகப்படியான பயன்பாடு காரணமாக இது ஓரளவு குறைந்துவிட்டது.

காலநிலை[தொகு]

சைந்தியா வெப்பமண்டல காலநிலையை கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குளிர்காலத்தில், கோடைகாலத்தை விட மழைப்பொழிவு மிகக் குறைவு. சைந்தியாவில் சராசரி ஆண்டு வெப்பநிலை 26.3 °C ஆகும். சராசரி மழைவீழ்ச்சி 1328 மி.மீ ஆகும்.[4]

நகராட்சி[தொகு]

சைந்தியா நகராட்சி பகுதி 16 கிமீ 2 (6.18 சதுர மைல்) பரப்பளவில் 16 வார்டுகளைக் கொண்டுள்ளது . நகரின் வடக்கு-தெற்கு பரிமாணம் ஒப்பீட்டளவில் குறுகலானது. வடக்கில் மயூராசி ஆற்றிலிருந்து தெற்கில் உள்ள பரிஹார்பூர் கிராமம் வரை பரவியுள்ளது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, சைந்தியா நகராட்சியில் 44,601 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 22,856 ஆண்களும், 21,745 பெண்களும் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகையில் 4511 ஆகும். சைந்தியாவில் கல்வியறிவு விகிதம் 79.50% வீதமாக காணப்படுகின்றது. இது மாநில சராசரியான 76.26 ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 84.70% ஆகவும், பெண் கல்வியறிவு 74.08% ஆகவும் உள்ளது. சைந்தியாவில் 10,229 இற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.[5]

பொருளாதாரம்[தொகு]

சைந்தியா பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும், மேற்கு வங்கத்தின் நடுத்தர பகுதியில் மிகவும் பரபரப்பான வணிக மையங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. சைந்தியா நகரம் மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாகும். பொருளாதாரம் விவசாய பொருட்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வணிகங்களை அடிப்படையாகக் கொண்டது. விவசாய பொருட்களின் விற்பனையால் சைந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. குடிசை தொழில் மற்றும் விவசாய அடிப்படையிலான வெவ்வேறு பொருட்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மையமாக இந்த நகரம் அறியப்படுகிறது. இந்த நகரம் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நகரத்திலிருந்து, விவசாய பொருட்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கிழக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் உயர் சாலைகள் மற்றும் இரயில் பாதைகள் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது நகரத்தை அனைத்து வகையான பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்தின் வணிக மையமாக மாற்றுகிறது. நகரின் கல்வி விகிதம் சீராக அதிகரித்து வருகிறது.[6]

சைந்தியா வங்கி மற்றும் நிதிக்கான ஒரு முக்கிய மையமாகும். நகரில் 13 வங்கி கிளைகள் உள்ளன. அவற்றில் 9 பொதுத்துறை வங்கிகளும் 4 தனியார் துறை வங்கிகளும் அடங்கும்.[7]

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 114 மற்றும் மாநில நெடுஞ்சாலை 11 நகரம் முழுவதும் ஓடுகிறது. இந்த நெடுஞ்சாலைகள் மேற்கு வங்காளத்தின் முக்கியமான நகரங்களையும் இணைக்கின்றன.

அருகிலுள்ள உள்நாட்டு விமான நிலையம் காசி நஸ்ருல் இஸ்லாம் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் மத்திய சைந்தியாவிலிருந்து சுமார் 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சைந்தியா தொடருந்து நிலையம் முழு நகரத்திற்கும் சேவை செய்கிறது. இது பிர்பம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும்.[8]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைந்தியா&oldid=3246452" இருந்து மீள்விக்கப்பட்டது