சேந்தோபுரோட்டிக் வினை
சேந்தோபுரோட்டிக் வினை (xanthoproteic reaction ) என்பது அடர் நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி ஒரு கரைசலில் கரையத்தக்க புரதத்தின் அளவை உறுதிசெய்யும் ஒரு முறையாகும். அரோமாட்டிக் தொகுதிகளைப் பெற்றுள்ள அமினோ அமிலப் புரதங்களில் இச்சோதனை நேர்மறையான முடிவுகளைத் தருகிறது. அதிலும் குறிப்பாக டைரோசின் முன்னிலையில் இந்நேர்மறை முடிவுகள் கிடைக்கின்றன. இந்தச்சோதனையில் நேர்மறை முடிவு கிடைத்தால் அக்கரைசலை ஒரு காரம் சேர்த்து நடுநிலையாக்கம் செய்தால் கரைசல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். இம்மஞ்சள் நிறத்திற்கு காரணமாக அமைவது சேந்தோபுரோட்டிக் அமிலமாகும். சில அமினோ அமிலங்கள் நைட்ரோயேற்றம் அடையும் பொழுது சேந்தோபுரோட்டிக் அமிலம் உண்டாகிறது. டைரோசின் மற்றும் டிரைப்டோபான் இரண்டு அமினோ அமிலங்கலையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம் [1]. புரதம் இருக்கிறது அல்லது இல்லை என்று உறுதி செய்யும் இவ்வினை ஒரு பண்பறி பகுப்பாய்வு வகையாகும்.
செய்முறை
[தொகு]பரிசோதனை செய்யப்படவேண்டிய மாதிரியுடன் 1 மில்லி அடர் நைட்ரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். பின்னர் இக்கலவையை சூடாக்கி குளிரவைக்க வேண்டும். மெதுவாக சோடியம் ஐதராக்சைடை(40% எடை/கன அளவு) கரைசல் காரத்தன்மை அடையும் வரை சேர்க்க வேண்டும். நிறமாற்றத்தை குறித்துக் கொள்ள வேண்டும். கரைசலின் நிறம் மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாறினால் அக்கரைசலில் அரோமாட்டிக் அமினோ அமிலம் இருப்பதாக பொருள் கொள்ளலாம்.
அன்றாட வாழ்வில்
[தொகு]நைட்ரிக் அமிலத்துளி நமது தோல் அல்லது நகத்தின் மேல் சிந்திவிட்டால் சிறிது நேரத்திற்குப் பின் அவ்விடங்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். புரோட்டின் இருப்பதால் அவ்விடங்கள் நிறமாற்றமடைகின்றன. விரல் நகங்களில் அடர் மஞ்சள் நிறம் தோன்றுகிறது. ஏனெனில் நகத்தில் கெராட்டின் என்ற புரதத்தால் ஆனவையாகும். அதை அழிக்கமுடியாது. ஆனால் தோலில் தோன்றும் மஞ்சள் நிறமாற்றத்தை உரித்துவிட முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chatterjea (1 January 2004). Textbook of Biochemistry for Dental/Nursing/Pharmacy Students. Jaypee Brothers Publishers. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-204-6.