செபாஸ்டியன் வெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபாஸ்டியன் வெட்டல்
2012 கிராண்ட் பிரியில் வெட்டல்
பிறப்பு3 சூலை 1987 (1987-07-03) (அகவை 36)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
நாடுசெருமனி ஜெர்மன்
பந்தயங்கள்101
பெருவெற்றிகள்3 (2010, 2011, 2012)
வெற்றிகள்26
உயர்மேடை முடிவுகள்46
மொத்த புள்ளிகள்1054
துருவநிலை தொடக்கங்கள்36
அதிவேக சுற்றுகள்15
முதல் பந்தயம்2007 அமெரிக்க கிராண்ட் பிரி
முதல் வெற்றி2008 இத்தாலிய கிராண்ட் பிரி
கடைசி வெற்றி2012 இந்திய கிராண்ட் பிரி
கடைசி பந்தயம்2012 பிரேசில் கிராண்ட் பிரி
2012 நிலை1st (281 புள்ளிகள்)
செபஸ்டியான் வெட்டல்

செபாஸ்டியன் வெட்டல் (Sebastian Vettel) ஜெர்மனி நாட்டு பார்முலா-1 தானுந்து போட்டி ஓட்டுனர் ஆவார். இவரே 2010, 2011, 2012 ஆம் ஆண்டுகளின் பார்முலா-1 ஓட்டுனர் வெற்றிப் பட்டத்தைக் கைப்பற்றியவர். 2011ஆம் ஆண்டின் பார்முலா-1 ஓட்டுனர் வெற்றிப் பட்டத்தைக் கைப்பற்றி மிக இளம் வயதில் இச்சாதனை புரிந்துள்ளார்.

வெட்டல் 1987, சூலை 7-ஆம் நாள், ஜெர்மனியின் கேபன்கேய்ம் நகரில் பிறந்தார். 1995-ஆம் ஆண்டு கார்ட் பந்தய போட்டிகளில் பங்கேற்றார். இளையோர் போட்டித் தொடர்களில் வெகு வேகமாக முன்னேறிய இவர் பி.எம்.டபிள்யு சாபர் (BMW Sauber) அணியால் பார்முலா-1-க்கு கொண்டுவரப்பட்டார். 2006-ஆம் வருட துருக்கி கிராண்ட் பிரியின் பயிற்சி சுற்றுகளில் பங்கேற்றதன் மூலம் மிக இளைய வயதில் (19 வருடம், 53 நாட்கள்) பார்முலா-1 தானுந்தை கிராண்ட் பிரியில் ஓட்டியவர் என்ற பெருமைக்குரியவர் ஆனார். 2007-ஆம் வருட அமெரிக்க கிராண்ட் பிரியில் தன் முதல் போட்டியை துவக்கினார். அப்போட்டியில் போட்டிப் புள்ளிகளை பெற்று இளம் வயதில் புள்ளிகள் பெற்றவரானார். டோரோ ரோசோ அணிக்கு மாறிய பின், முதல் முறையாக 2007-ஆம் ஆண்டு ஜப்பானிய கிராண்ட் பிரியில் முன்னணியில் சென்று கொண்டிருந்தார். அதன் மூலம் மிக இளைய வயதில் கிராண்ட் பிரி போட்டியில் முன்னணியில் சென்றவர் என்ற பெயர் பெற்றார். 2008-ஆம் இத்தாலிய கிராண்ட் பிரியின் துவக்கத்துக்கான போட்டியில் முதலாவதாக வந்ததன் மூலம் போல் பொசிஷன் எனப்படும் முதல் இடத்திலிருந்து போட்டியை துவக்கும் வாய்ப்பை மிக இளைய வயதில் பெற்றவரானார். அப்போட்டியை அவர் வென்று மிக இளைய வயதில் கிராண்ட் பிரி போட்டியை வென்றவரானார். 2009-ஆம் வருடம் ரெட் புல் அணியில் சேர்ந்தார். அவ்வருடம் ஓட்டுனருக்கான புள்ளிப் பட்டியலில் இரண்டாவதாக வந்தார். இதன் மூலம் மிக இளைய வயதில் இரண்டாம் இடம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவரானார். 2010-ஆம் வருடம் ஓட்டுனருக்கான வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி மிக இளைய வயதில் வென்றவரானார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

செபாஸ்டியன் வெட்டல் ஜெர்மனியின் கேப்பன்கைம் நகரில் 1987-ஆம் வருடம் சூலை மாதம் பிறந்தார். ஒரு பேட்டியில் வெட்டல் தன் பள்ளிப் பருவத்தில் சிறந்த படிப்பாளராக திகழவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தன் பிள்ளைப் பருவத்தில் தான் மூன்று மைக்கேல்களின் ரசிகன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மூன்று மைக்கெல்கள், மைக்கேல் சூமேக்கர், மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர்டான் ஆகியோர் ஆவர். தான் சிறுவயதில் ஒரு பாடகராக வருங்காலத்தில் வரவேண்டுமென கனவு கொண்டிருந்ததாகவும், ஆனால் அதற்கான குரல் வளம் இல்லாததால் அக்கனவைக் கலைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். வெட்டலுக்கு ஒரு தம்பியும் (பேபியன்), இரண்டு அக்காக்களும் (மெலானி மற்றும் ஸ்டெபானி) உள்ளனர். மற்ற போட்டி ஓட்டுனர்கள் போல வெட்டலும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். செபாஸ்டியன் வெட்டல் ஜெர்மனியின் கால்பந்தாட்ட அணியான எயன்றாட் பிராங்க்பர்ட்-இன் ரசிகர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபாஸ்டியன்_வெட்டல்&oldid=2216351" இலிருந்து மீள்விக்கப்பட்டது