செங்குத்து விசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரு பொருள்கள் (அல்லது பொருள்களின் பரப்புகள்) ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும்போது அப்பொருள்களின் தொடுபரப்புகளுக்கு செங்குத்தாக செயல்படும் விசையே செங்குத்து விசை (Normal force)எனப்படுகிறது.[1] அவ்வாறு வைக்கப்பட்டுள்ள திண்மப் பொருள்கள் ஒன்றினுள் மற்றொன்று புகுவதைத் தடுக்கும் வண்ணம் அவற்றின் தொடுபரப்புகளால் செங்குத்து திசையில் அளிக்கப்படும் தொடு விசையே செங்குத்து விசை எனவும் கூறலாம்.[2] நியூட்டனின் மூன்றாம் விதியின் நேரடி விளைவாக இவ்விசை உள்ளது; செங்குத்து விசையின் பொதுவான குறியீடுகள் N மற்றும் FN.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

மேல்: படம் 1 (எடுத்துக்காட்டு 1); கீழ்: படம் 2 (எடுத்துக்காட்டு 2)


  1. மேசை அல்லது சமதளப் பரப்பு ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ள ஒரு பொருள், அதன் எடையை (W) மேசை மீது செலுத்துகிறது (படம்: 1); இதைச் செயல்விசை (action) எனலாம். நியூட்டனின் மூன்றாம் விதிப்படி, இதற்குச் சமமான, எதிர்ச்செயல் விசையை (reaction) அப்பொருளின் மீது மேசை அளிக்கிறது. இவ்விசையே இங்கு செங்குத்து விசையாகும் (N).
  2. கிடைமட்டத்துடன் θ கோணத்திலுள்ள வழுவழுப்பற்ற சாய்தளம் ஒன்றின் மீது (படம் 2) நிலையாகவுள்ள ஒரு பொருளின் எடையை (W) இரு செங்குத்துக் கூறுகளாகப் பிரித்தால், அதன் W cos θ என்ற கூறு தளத்தின் மீது செயல்படுகிறது; இதற்கு எதிர்ச்செயல் விசையாக அப்பொருளின் மீது தளம் அளிக்கும் விசையே (N) இவ்விடத்தில் செங்குத்து விசையாகும்.
  3. வழுவழுப்பற்ற சமதளப் பரப்பின் மீது வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் மீது θ கோணத்தில் ஒரு இழுவிசையை (F) செலுத்தும்போது, அதன் இரு செங்குத்துக் கூறுகளில் F sin θ என்ற கூறு பொருளின் எடைக்கு (W) எதிர்த்திசையில் உள்ளதால், பரப்பின் மீது (W - F sin θ) என்ற நிகர விசை செயல்படுகிறது; இதற்கு சமமானதும் எதிர்த்திசையில் உள்ளதுமான N (= W - F sin θ) என்ற விசையே இங்கு செங்குத்து விசையாகும்[3].

தோற்றக் காரணம்[தொகு]

ஒரு பொருளையும் அதனுடன் தொடுதலில் உள்ள தடையையும் (மேசை, பரப்பு, சாய்தளம், மற்றொரு பரப்பு உள்ளிட்டவை) ஒன்றோடொன்று அழுத்தும்போது, அவற்றின் தொடுபரப்புகளுக்கிடையே தோன்றும், எதிர்த்திசையில் இயங்கும் வான் டெர் வால்சு விசை அதிகரித்து அப்பொருள்கள் ஒன்றினுள் மற்றொன்று புகுவதைத் தடுக்கின்றது; அழுத்தும் விசையை அதிகரிக்கும்போது (அல்லது குறைக்கும்போது) அவ்விரு பரப்புகளின் அணுக்கள்/மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட தொலைவு குறைவதால் (அல்லது அதிகரிப்பதால்) வான் டெர் வால்சு விசையும் அதிகரிக்கும் (அல்லது குறையும்). மேலும், அவ்விரு தொடுபரப்புகளையும் சிறிதளவு இடைவெளி உள்ளவாறு விலக்கும்போது வான் டெர் வால்சு விசை முழுவதுமாக மறைவதால், செங்குத்து விசையும் மறைந்து விடுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. SparkNotes -- https://www.sparknotes.com/physics/dynamics/newtonapplications/section1/
  2. Khan Academy -- https://www.khanacademy.org/science/physics/forces-newtons-laws/normal-contact-force/a/what-is-normal-force
  3. தரசோவ், தரசோவா. பள்ளிநிலைப் பௌதிகத்தில் கேள்விகளும் கணக்குகளும். மீர் பதிப்பகம். பக். 25. 
  4. Bettini, Alessandro. A Course in Classical Physics 1 - Mechanics. Springer. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-29256-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குத்து_விசை&oldid=2947980" இலிருந்து மீள்விக்கப்பட்டது