சுப்பண்ணா ஐயப்பன்
சுப்பண்ணா ஐயப்பன் (Subbanna Ayyappan)(பிறப்பு: திசம்பர் 10, 1955) என்பவர் இந்திய மீன்வளர்ப்பு துறை அறிவியலாளர் ஆவர்.
கல்வி
[தொகு]ஐயப்பன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், மங்களூரில் உள்ள மீன்வளக் கல்லூரியில் மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் மீன்வளம், நீரியல் மற்றும் நீர்வாழ் நுண்ணுயிரியல் துறைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[1]
பதவி
[தொகு]சுப்பண்ணா ஐயப்பன் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் விவசாய அறிவியல் தொடர்பான பல்வேறு அரசு நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநராகவும் சனவரி 2010 முதல் பிப்ரவரி 2016 வரையிலான காலகட்டத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை அரசாங்கத்தின் செயலாளராகவும் இருந்தார்.[2] மணிப்பூரின் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்துள்ளார். இந்தியாவில் நீலப் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்திற்குத் தலைமை தாங்கிய முதல் விவசாயம் அல்லாத அறிவியலாளர் இவர்தான்.[3]
ஐயப்பன் 1978-ல் பாரக்பூரில் உள்ள மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியலாளராக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் தனது பணியைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டில், புவனேசுவரத்தில் உள்ள மத்திய உள்நாட்டு மீன் வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இங்கு இவர் இயக்குநராக, மும்பையில் உள்ள மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தில் துணைவேந்தர் பதவியினை வகிக்கும் முன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். இவர் 2002-ல் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமையகத்தில் துணை தலைமை இயக்குநராகப் பதவி வகித்தார். மேலும் சனவரி 1, 2010 அன்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயலாளர் ஆனார். இவர் ஐதராபாத்திலுள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிறுவனர் தலைமை நிர்வாகியும் ஆவார்.[4]
பத்மசிறீ விருது
[தொகு]- 2022ஆம் ஆண்டில், இந்திய அரசு, பத்ம விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்மசிறீ விருதை, சுப்பண்ண ஐயப்பனுக்கு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இவரின் சிறப்பான சேவைக்காக வழங்கியது.[5] "மதிப்பிற்குரிய மீன்வளர்ப்பு அறிவியலாளர் - இந்தியாவின் நீலப் புரட்சிக்கு சக்தியூட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்" என்ற இவரது சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.[6]
பிற அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள்
[தொகு]சுப்பண்ணா ஐயப்பன் மீன்வளர்ப்பு மற்றும் தொடர்புடைய பணி மற்றும் பங்களிப்பிற்காகப் பல அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.[4]
- ஜஹூர் காசிம் தங்கப் பதக்கம் இந்தியாவில் உயிர் அறிவியல் சங்கத்தால் வழங்கப்பட்டது (1996-1997)
- சிறப்பு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும விருது (1997)
- மீன்வளத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்கான குழுத் தலைவராகக் குழு ஆராய்ச்சிக்கான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும விருது (1997-1998)
- முனைவர் வி. ஜி. ஜிங்ரன் தங்கப் பதக்கம் (2002)
- மீன்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த பேராசிரியர் எச். பி. சி. செட்டி விருது, ஆசிய மீன்வள சங்கம், இந்தியக் கிளை (2002)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ajith Athrady (25 January 2022). "Five from Karnataka honoured with Padma Shri awards". DHNS. Deccan Herald. https://www.deccanherald.com/state/top-karnataka-stories/five-from-karnataka-honoured-with-padma-shri-awards-1074599.html.
- ↑ "Details of first six Convocations" (PDF). Uttar Banga Krishi Viswavidyalaya. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
- ↑ "Dealing with crop stresses and scandals". Down to Earth. Centre for Science & Environment. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
- ↑ 4.0 4.1 "Dr. S. Ayyappan takes over as Secretary, DARE & Director General, ICAR". Sarson News 14 (1). https://dokumen.tips/documents/dr-mangala-rai-dr-s-ayyappan-takes-over-as-secretary-as-convener-and-dr.html?page=1. பார்த்த நாள்: 12 February 2022.
- ↑ "Padma Awards 2022" (PDF). Padma Awards. Ministry of Home Affairs, Govt of India. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
- ↑ "Padma Awards 2022". Padma Awards. Ministry of Home Affairs, Govt of India. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.