உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாபுரம் ஆதிநாதர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]சீனாபுரம் ஆதிநாதர் கோவில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சீனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சமணக் கோவிலாகும். இது சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிசபநாதருக்கு எடுக்கப்பட்ட கோவிலாகும்.இந்து அறநிலைய துறையினரால் பாராமரிக்கப்படுகிறது. [2][3]

அமைவிடம்

[தொகு]

இக்கோவில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறையிலிருந்து திங்களூர் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள நிமிட்டிபாளையம் மம்முட்டித்தோப்பு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் பெருந்துறையிலிருந்து 9 கி.மீ தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் ஈரோடு ஆகும்.

கோவில் அமைப்பு

[தொகு]

தெற்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவிலின் அடித்தளம் சுமார் ஒரு அடி உயரத்தில் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கட்டுமானம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது அமைக்கப்பட்ட சுதைச்சிற்பங்கள் சிதைந்துள்ளன. விமானத்தின் சிகரம், கிரீவம், கலசம் ஆகிய உறுப்புகள் காணப்படவில்லை. கருவறையின் வெளிப்புறச் சுவர்கள் அரைத்தூண்களைக் கொண்டு பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கோட்டங்கள் வெறுமையாக காணப்படுகின்றன. இக்கோவில் கருவறை மற்றும் முன்மண்டபம் ஆகிய உறுப்புகளைப் பெற்றுள்ளன. கோவில் முன்பு ஒரு சதுரவடிவ மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பலிபீடமும் இடம்பெற்றுள்ளது.

கருவறையில் சமண சமயத்தின் 24 தீர்த்தாங்கரர்களுள் முதலாமவரான ஆதிநாதரின் கருங்கல் புடைப்புச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. தவக்கோலத்தில் அமர்ந்துள்ள ஆதிநாதரின் தலைக்கு மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. ஆதிநாதரின் சின்னம் நந்தி. ஆதிநாதரின் இருபுறமும் சாமரம் வீசுவோரின் உருவங்கள் காட்டப்பட்டுள்ளனர். இந்தச் சிற்பம் சுமார் 3 - 4 அடி உயரம் கொண்டது. இக்கோவிலில் இரண்டு நாகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. [1]

வரலாறு

[தொகு]

சீனாபுரம் என்ற பெயர் ஜினபுரம் என்பதன் திரிபாகும். நன்னூலை இயற்றிய பவநந்தி முனிவர் இங்கு வாழ்ந்தவர் ஆவார். இவர் ஆதிநாதரை வழிபாட்டு வந்துள்ளார். [1] இக்கோவிலின் எதிரே "நன்னூல் ஆசிரியர் திருபவனந்த முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம்" என்று குறிப்பிடும் செய்திப்பலகை உள்ளது. பவநந்தி முனிவர் வாழ்ந்த காலத்தில் இவ்வூர் சனகாபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. நன்னூல் பாயிரத்தில் பொன்மதில் சனகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [4]

நன்னூல் பாயிரம்
‘திருந்திய செங்கோல் சீயகங்கன்
அருங்கலை வினோதன் அமராபரணன்
மொழிந்தனனாக முன்னோர் நூலின்
வழியே நன்னூல் பெயரில் வகுத்தனன்
பொன்மதில் சனகை சன்மதி முனியருள்
பன்னரும் சிறப்பில் பவணந்தி
எனும் நாமத் திருத்தவத்தோனே’[3]

சீயகந்தன் என்ற சிற்றரசன் பவணந்தி முனிவரை ஆதரித்து வந்துள்ளான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1176 - 1216) ஆட்சியில் சோழர்களுக்கு அடங்கித் திரைகட்டிய சிற்றரசன் சீயகந்தன் ஆவான். எனவே பவணந்தி முனிவர் கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதலாம். மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையில் பவணந்தி முனிவரின் ஊர் சனகாபுரம் என்று சுட்டியுள்ளார்.[3] கொங்குமண்டல சதகம் நூலில் சனகபுரம் குறிப்பிடப்பட்டுள்ளது. [2] ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுபுதூர் என்னும் கிராமத்தில் சமணசமயத்தின் எட்டாம் தீர்த்தங்கராரான சந்திரப்பிரபாவிற்கு கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பவணந்தி முனிவரின் சிறபம் நிறுவப்பட்டுள்ளது. இக்கோவில் பஸ்தி ஆதீசுவரர் என்று குறிக்கப்படுகிறது.[3]

வழிபாடு

[தொகு]

இக்கோவிலில் காலை 07.00 மணி முதல் 09.00 வரை வழிபாடு நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 கொங்குநாடும் சமணமும். புலவர் செல.இராசு. சென்னை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 2016. pp. 89 - 91. ISBN 978-81-2343-242-7
  2. 2.0 2.1 சீனாபுரம் ஸ்ரீ ஆதிநாதர் ஜீனாலயம் அகிம்சை யாத்திரை ஜூலை 23, 2014
  3. 3.0 3.1 3.2 3.3 இலக்கண ஆசிரியருக்கு ஒரு கோயில் அ .கா. பெருமாள் இந்து தமிழ் திசை மார்ச் 31, 2015
  4. சமணமும் தமிழும் மயிலை சீனி. வேங்கடசாமி. சென்னை திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 1954. பக். 168